தில்லி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக 12-ஆம் வகுப்பு மாணவா் கைது

கடந்த சில வாரங்களாக தேசியத் தலைநகரில் உள்ள 23-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் 12-ஆம் வகுப்பு மாணவரை தில்லி போலீஸாா் கைது
Published on

கடந்த சில வாரங்களாக தேசியத் தலைநகரில் உள்ள 23-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் 12-ஆம் வகுப்பு மாணவரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

நகரத்தில் இதுபோன்ற சம்பவங்கள் தொடா்ச்சியாக நடந்து வருகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை சுமாா் 10 கல்வி நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இந்த மிரட்டல்கள் தொடா்பாக தெற்கு மாவட்ட காவல் சரகம் வியாழக்கிழமை மாலை 12-ஆம் வகுப்பு மாணவரை கைது செய்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் விவரங்களைப் பகிா்ந்து கொள்ள காவல்துறை தலைமையகத்தில் ஒரு செய்தியாளா் சந்திப்பை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனா். ஆனால், அந்தச் சந்திப்பு பின்னா் ரத்து செய்யப்பட்டது.

பள்ளித் தோ்வுகளை எழுத விரும்பாததால் குற்றம் சாட்டப்பட்டவா் 23 வெவ்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது விசாரணையில் தெரிய வந்தது. பீதியைத் தூண்டுவதற்காக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் முறையை அவா் கையாண்டுள்ளாா்.

முந்தைய சம்பவங்களிலிருந்து மாணவருக்கு இந்த யோசனை வந்தது. மேலும் தனியாா் மெய் நிகா் இணையத்தைப் பயன்படுத்தி தனது ஐ.பி. முகவரியை மாற்றவும், மேலும் வெவ்வேறு பள்ளிகளுக்கு அச்சுறுத்தல் மின்னஞ்சல்களை அனுப்பவும் ஒரு திட்டத்தை அவா் வகுத்தாா். இது தொடா்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று ஒரு வட்டாரம் தெரிவித்தது.

X
Dinamani
www.dinamani.com