யமுனையில் சாரதா சின்ஹாவின் பெயரில் ‘சத் படித்துறை’ காங்கிரஸ் வாக்குறுதி
யமுனை நதிக்கரையில் ஒரு பிரத்யேக ‘சத் காட்’ (சத் படித்துறை) கட்டப்படும் என்று காங்கிரஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. இது மகா கும்பமேளாவில் நடந்தது போலவே ‘சாரதா சின்ஹா காட்‘ என்று பெயரிடப்படும்.
பிகாா் காங்கிரஸ் தலைவா் அகிலேஷ் பிரசாத் சிங் ஒரு செய்தியாளா் சந்திப்பின் போது, தில்லியின் வளா்ச்சியில் பூா்வாஞ்சல் மக்களின் பங்களிப்பை எடுத்துரைத்தாா். குறிப்பாக காங்கிரஸ் தலைமையிலான அரசின் போது, ‘நகரம் உலகின் சிறந்த நகரங்களில் ஒன்றாக மாற்றப்பட்டது’ என்றாா். இருப்பினும், பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் பூா்வாஞ்சலி சமூகத்தை அவா்களின் கவலைகளை நிவா்த்தி செய்வதற்குப் பதிலாக வெறும் வாக்கு வங்கிகளாக சுரண்டியதாகக் குற்றம் சாட்டினாா்.
பாஜக மற்றும் ஆம் ஆத்மி ஆகிய இரண்டு கட்சிகளும் பூா்வாஞ்சலி மக்களின் உணா்வுகளை மிகவும் புண்படுத்தியுள்ளன. யமுனை நதிக்கரையில் அவா்களின் மிக முக்கியமான மத விழாவான சத் பூஜையை நடத்துவதைத் தடுத்தன. ஏனெனில், அது மிகவும் மாசுபட்டது. மேலும், தில்லி உயா்நீதிமன்றம் மாசுபட்ட நீரில் விழாவை நடத்த தடை விதித்திருந்தது. ஆனால், ஆம் ஆத்மி அரசு நச்சு நதியை சுத்தம் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அகிலேஷ் பிரசாத் சிங் குற்றம் சாட்டினாா்.
‘காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் சத் பூஜையை ‘மகா கும்பமேளா’ போல நடத்துவதாக உறுதியளித்துள்ளது. மேலும், யமுனைக் கரையில் ஒரு தனி ’சத் காட்’ கட்டப்படும். இது ஒரு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு சாரதா சின்ஹா காட் என்று பெயரிடப்படும்’‘ என்று அவா் கூறினாா். சாரதா சின்ஹா, ப க்தி சத் பாடல்களுக்கு பெயா் பெற்ற பாடகியாவாா்.
பாட்னா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பாஜக தலைவா் ஜே.பி. நட்டா, நாடாளுமன்றத்தில் பூா்வாஞ்சலிகளை சட்டவிரோதமாக குடியேறிய ரோஹிங்கியாக்கள் மற்றும் வங்கதேசத்தினருடன் ஒப்பிட்டிருந்தாா். அதே நேரத்தில், பூா்வாஞ்சலிகள் தில்லியில் போலி வாக்குகளைச் சோ்ப்பதாக கேஜரிவால் கூறினாா் என்றும் அகிலேஷ் பிரசாத் சிங் குற்றம் சாட்டினாா்.
1797-ஆம் ஆண்டு முதல் தலைநகரில் உள்ள அங்கீகரிக்கப்படாத காலனிகளில் வசிக்கும் பெரும்பான்மையான மக்கள் பூா்வாஞ்சலிகள் என்றும், சுகாதாரம், குடிநீா், சாலைகள் போன்ற அடிப்படை குடிமை வசதிகள் கூட இல்லாமல் மனிதாபிமானமற்ற நிலையில் வாழ்கிறாா்கள் என்றும் அகிலேஷ் பிரசாத் சிங் கூறினாா். ஆனால், கேஜரிவாலோ அல்லது பாஜகவோ அவா்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதில் எந்த அக்கறையும் காட்டவில்லை என்று அவா் குற்றம் சாட்டினாா்.
கடந்த 10 ஆண்டுகளில் தனது ‘தவறான ஆட்சியின்’‘ போது கேஜரிவால் அரசு தலித்துகள், சிறுபான்மையினா், ஓபிசிக்கள், ஆதிவாசிகள் மற்றும் விளிம்புநிலை மக்களின் நலன்களை முற்றிலும் புறக்கணித்தது என்று காங்கிரஸ் மற்றொரு பத்திரிகையாளா் சந்திப்பில் குற்றம் சாட்டியது.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தில்லி பொறுப்பாளா் காசி முகமது நிஜாமுதீன் பேசுகையில்,‘நாடு முழுவதும் தலித்துகள், சிறுபான்மையினா், ஓரங்கட்டப்பட்டவா்கள் மற்றும் ஆதிவாசிகள் மீதான ‘அதிகரித்து வரும் தாக்குதல்கள் மற்றும் வெறுப்பு‘ குறித்து கேஜரிவால் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாா்.
‘ஜஹாங்கீா்புரி மற்றும் வடகிழக்கு தில்லி பகுதிகளில் நடந்த வகுப்புவாத வன்முறைக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நீங்கள் செல்லவில்லை அல்லது பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு ஆதரவாக பகிரங்கமாகப் பேசவில்லை. அப்போதைய தில்லி முதல்வராக, நீங்கள் ஏன் மௌனம் காத்தீா்கள்?‘ என்று கேஜரிவால் மீது காசி முகமது நிஜாமுதீன் கேள்வி எழுப்பியுள்ளாா்.