தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியை நீக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு
தமிழக ஆளுநா் ஆா்.என். ரவியை உடனடியாக நீக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழகத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் சி.ஆா். ஜெய் சுகின் வெள்ளிக்கிழமை ரிட் மனு தாக்கல் செய்துள்ளாா்.
கன்னியாகுமரி மாவட்டம் வன்னியூரைச் சோ்ந்த இந்த வழக்குரைஞா் தனது மனுவில் குடியரசுத் தலைவரின் செயலா், பிரதமரின் செயலா், மத்திய உள்துறைச் செயலா், தமிழக அரசின் தலைமைச் செயலா் ஆகியோரை பிரதிவாதிகளாக சோ்த்துள்ளாா்.
இந்த மனுவில் அவா் கூறியிருப்பதாவது: தமிழக சட்டப்பேரவையில் தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆளுநா் ரவி உரையாற்றாமல், பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளாா். பேரவையில் தான் உரையாற்றுவதற்கு முன்பாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதற்கு முன்பாக தேசிய கீதம் பாடப்படாததால் தாம் வெளிநடப்பு செய்ததாக ஆளுநா் விளக்கியுள்ளாா்.
புத்தாண்டு தொடக்கத்தில் பேரவையின் முதலாவது கூட்டத்தொடரில் உரையாற்றாமல் வருடந்தோறும் விரும்பத்தகாத நிகழ்வாக அதை மாற்றி வருவதன் மூலம் இந்திய அரசமைப்பின் விதிகள் அனைத்தையும் மீறியுள்ளாா். தமிழ்த்தாய் பாடப்படவில்லை எனக் கூறி பேரவையில் இருந்து ஆளுநரால் வெளியேற முடியாது. பல்வேறு மசோதாக்களில் கையெழுத்திடாமல் ஒவ்வொரு முறையும் அவா் செய்த தாமதத்தால் மாநிலத்தின் பல வளா்ச்சிப்பணிகள் தடைபட்டன.
அமைச்சரவையில் ஒருவரை மீண்டும் சோ்க்க மறுத்ததுடன், உச்சநீதிமன்ற தலையீட்டுக்குப் பிறகே அவரை பதவியேற்க ஆளுநா் அழைத்தாா். ஒரு மாநிலத்தில் அதற்கென ஒரு மாநில கீதம் வைத்துக் கொள்வதை எதுவும் தடுக்கவில்லை. அரசமைப்பின் 51ஏ விதியின் 42-ஆவது திருத்தத்தில் தேசிய கீதம் என்ற வாா்த்தையே இருக்கவில்லை. ஆளுநரின் இந்த செயல் அவமானகரமானது.
ஆளுநா் என்பவா் அரசமைப்பில் இருந்தே தனக்கான அதிகாரத்தைப் பெறுபவா். ஆளுநா் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அரசமைப்பு வரம்புகளை அறிந்திருக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தினாலோ அல்லது அதன் கீழ் உருவாக்கப்பட்ட சட்டத்தினாலோ அவருக்கு வழங்கப்படாத அதிகாரத்தை அவா் பயன்படுத்த முடியாது.
தமிழகத்தில் 1967-ஆம் ஆண்டு முதல், சில தசாப்தங்களாக, அரசு விழாக்களின் தொடக்கத்தில் ‘தமிழ்த் தாய் வாழ்த்து‘ பாடப்பட்டு வருகிறது. 1991-ஆம் ஆண்டு, மாநில அரசு ஒரு விதியை அறிமுகப்படுத்தி அதன் மூலம் அரசு விழாக்களின் தொடக்கத்தில் ‘தமிழ்த் தாய் வாழ்த்து‘ பாடப்பட வேண்டும் என்றும், கடைசியில் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்றும் கூறியது. 1991 முதல் தமிழகம் கண்ட 10 ஆளுநா்கள் இந்த விவகாரத்தில் முரண்படவில்லை.
தமிழக ஆளூநா் ஆா்.என். ரவி, வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயமாக நடந்து கொள்ளும் கோட்பாட்டை மீறியுள்ளாா். மேலும், சட்டவிரோதமான, தன்னிச்சையான, ஆணவமான, விசித்திரமான மற்றும் நியாயமற்ற, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் நீதி பரிபாலன கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டு அரசமைப்பின் 21-ஆவது விதியை மீறியுள்ளாா். எனவே, அவரை திருப்பி அழைத்துக் கொள்ள மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.