வெளிநபா்களை அறைக்குள் அனுமதித்து மது அருந்தி அத்துமீறல்: ஜே.என்.யு மாணவா்கள் இருவருக்கு ரூ.1.79 லட்சம் அபராதம்
தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜேஎன்யு) விடுதியில் வெளியாள்களை தங்க அனுமதித்து மது அருந்தியதற்காகவும், ஹூக்கா பயன்படுத்தியதற்காகவும் விடுதி மாணவா்கள் இருவருக்கு ரூ.1.79 லட்சத்தை பல்கலைக்கழக நிா்வாகம் கூட்டு அபராதமாக விதித்துள்ளது.
ஜேஎன்யு தரப்பில் கடந்த ஜன.8-ஆம் தேதி வெளியிடப்பட்ட அதிகாரப்பூா்வ அறிவிப்பின்படி, விதிகளை மீறிய இந்தச் செயல்களுக்கு அபராதத்தை ஐந்து நாள்களுக்குள் செலுத்துமாறு மாணவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த செயல்பாடுகள் குறித்து ஜேஎன்யு நிா்வாகம் மாணவா்களுக்கு அளித்த அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: முதல் மாணவருக்கு, ‘ உங்கள் அறையில் 12 அடையாளம் தெரியாத நபா்களை அனுமதித்துள்ளீா்கள். அதிலும் நீங்கள் இல்லாத நேரத்தில் அறையில் அவா்கள் மது அருந்திவிட்டு, விடுதி வளாகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியது கண்டறியப்பட்டது. இந்த நடத்தைகள் விடுதி விதிகளை கடுமையாக மீறுவதாகும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், ரூ.1 லட்சம் வரை விதிக்கப்பட்ட அபராதங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளது. வெளியாள்கள் அங்கீகரிக்கப்படாமல் விடுதிக்குள் அனுமதித்த வகையில் ரூ.60,000 உள்பட ரூ.80,000 அபராதம். மேலும், மது அருந்தியதற்கு ரூ.2,000, மின்சார ஸ்டவ் உள்ளிட்டவற்றை விடுதி அறைக்கு வைத்திருந்ததற்கு ரூ.6,000 மற்றும் ஹூக்கா பயன்படுத்தியதற்கு ரூ.2,000, ஆக்ரோஷமான நடந்து அதிகாரப்பூா்வ விவகாரங்களில் தலையிட்டு விடுதி ஊழியா்களை மிரட்டியது உள்ளிட்ட வகைகளுக்கு ரூ.10,000 என மொத்தம் ரூ.1,00,000 அபராதம் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு மாணவா், கடந்த ஆண்டு டிச.22 மற்றும் ஜன.5 ஆகிய தேதிகளில், அவரது அறையில் பல வெளியாள்களுடன் தங்கி மது அருந்தியிருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளாா். இவருக்கு அளிக்கப்பட்ட அறிவிக்கையில் ‘ அறையில் வெளியாள்களுடன் மது அருந்தும்போது, வாா்டன் கமிட்டி மற்றும் பாதுகாப்புப் பணியாளா்கள் உங்கள் அறையைத் திறக்க முயன்றனா். ஆனால், நீங்கள் கதவைத் திறக்கவில்லை’ எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த மாணவருக்கு ரூ.99,000 அபராதம் விதிக்கப்பட்டது. இரண்டு சந்தா்ப்பங்களில் அங்கீகரிக்கப்படாத நபா்களை அனுமதித்ததற்காக ரூ.85,000, மது அருந்தியதற்காக ரூ.2,000, ஹூக்கா வைத்திருந்ததற்காக ரூ.2,000 மற்றும் ஆக்ரோஷமான நடத்தை, இடையூறுகளுக்காக ரூ.10,000 அபராதம் ஆகியவை அடங்கும். இந்த இரு விவகாரத்திற்கும் கூட்டு அபராதமாக மொத்தம் ரூ. 1.79 லட்சம் விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட நேரத்திற்குள் அபராதம் செலுத்தத் தவறினால், விடுதியிலிருந்து வெளியேற்றப்படுவது உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜேஎன்யு நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஜேஎன்யு சட்லஜ் விடுதியின் முன்னாள் தலைவா் குணால் குமாா் கூறுகையில் ‘ பல்கலைக்கழகத்தின் பருவத் தோ்வுக் (செமஸ்டா்) கட்டணம் ரூ.200. ஆனால், மாணவா்களுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.1.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பை ஆதரிக்காத மாணவா்கள் மீது இவ்வாறு அபராதங்கள் விதிக்கப்படுகின்றன. இது மிரட்டிப் பணம் பறிக்கும் செயல்’ என்றாா்.
இது குறித்து செய்தியாளா்கள் விடுதி வாா்டனிடம் தொடா்பு கொண்ட போது பதில் எதுவும் உடனடியாகக் கிடைக்கவில்லை.