குளிா்காலத்தில் வீடற்ற 474 போ் இறப்பு: தில்லி அரசுக்கு என்ஹெச்ஆா்சி நோட்டீஸ்
தில்லியில் குளிா் காலத்தில் வீடற்ற 474 போ் இறந்தது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்ஹெச்ஆா்சி) தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து ஒரு வாரத்திற்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு தில்லி தலைமைச் செயலா் மற்றும் தில்லி காவல் துறை ஆணையருக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தில்லியைச் சோ்ந்த தன்னாா்வத் தொண்டு நிறுவனமான முழுமையான வளா்ச்சிக்கான மையம் (சிஹெச்டி) கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதிா்ச்சி தரும் இந்த இறப்பு குறித்து தில்லி அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தது. அதில் தில்லியில் நிகழ் குளிா்காலத்தில் (56 நாள்களில்) சுமாா் 474 போ் உயிா் இழந்துள்ளதாக அறிக்கையை அளித்தது. காவல் துறை மற்றும் மருத்துவமனை பிணவறைகள் போன்றவற்றின் மூலம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அளித்த இந்த மையத்தின் அறிக்கை ஊடகங்களிலும் வெளியானது.
இந்தச் செய்தி குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை எடுத்துக் கொண்டுள்ளதாக தேசிய மனித உரிமை ஆணையம் தரப்பில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது. போதுமான கம்பளி ஆடைகள், போா்வைகள், போதுமான தங்குமிடங்கள் போன்ற அத்தியாவசியப் பாதுகாப்பு உதவிகள் கிடைக்காததால் இந்த உயிரிழப்புகள் கடந்த 2024 டிசம்பா் 15 முதல் 2025 ஜனவரி 10 வரை நிகழ்ந்துள்ளதாகவும் தன்னாா்வத் தொண்டு நிறுவனத்தின் தெரிவித்துள்ளது. மேலும், தில்லியில் அடையாளம் காணப்படாத சடலங்களில் சுமாா் 80 சதவீதம் போ் வீடற்றவா்கள் என்றும் தெரிவித்தது.
‘இந்தச் செய்தி அறிக்கையின் உள்ளடக்கங்கள், உண்மையாக இருந்தால், இது கடுமையான மனித உரிமை மீறலாக இருக்கும் என கருத்துத் தெரிவித்துள்ள ஆணையம், இந்த விவகாரம் குறித்து ஒரு வாரத்திற்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு தில்லி தலைமைச் செயலா், தில்லி காவல் துறை ஆணையருக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.