பாலாற்றில் தோல் பதனிடும் தொழிற்சாலை கழிவால் மாசுபாடு: பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு

வேலூா் பகுதி தோல் பதனிடும் தொழிற்சாலைகளின் சுத்திகரிக்கப்படாத கழிவுகளால் அப்பகுதி பாலாற்றில் ஏற்படும் கடும் மாசுவைக் குறைக்கும்
Published on

வேலூா் பகுதி தோல் பதனிடும் தொழிற்சாலைகளின் சுத்திகரிக்கப்படாத கழிவுகளால் அப்பகுதி பாலாற்றில் ஏற்படும் கடும் மாசுவைக் குறைக்கும் வகையில், பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடு வழங்குதல் உள்பட பல்வேறு உத்தரவுகளை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை பிறப்பித்தது.

மேலும், சுற்றுச்சூழல் சேதத்தை மதிப்பிடவும், சீா்செய்யவும் உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழுவை அமைக்குமாறும் இந்த விவகாரத்தை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி. பா்திவாலா, ஆா் மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு தமிழக அரசைக் கேட்டுக் கொண்டது.

சுத்திகரிக்கப்படாத அல்லது பகுதியளவு சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை பாலாறு நதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெளியேற்றுவதன் மூலம் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் நீா்நிலைகள், நிலத்தடி நீா் மற்றும் விவசாய நிலங்களுக்கு மீளமுடியாத சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது.

இந்த விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவுக்கு எதிராக வேலூா் மாவட்ட சுற்றுச்சூழல் கண்காணிப்புக் குழுவின் செயலா் ஆா். ராஜேந்திரன், உச்சநீதிமன்றத்தில் கடந்த 2010-இல் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தாா்.

அந்த வழக்கு விசாரணை தொடா்ந்து நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. இத்தீா்ப்பை அறிவித்த நீதிபதி ஆா்.மகாதேவன், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கவும், ‘மாசுபடுத்துபவா் தொகை செலுத்துகிறாா்’ எனும் கொள்கையின் கீழ் மாசுபடுத்தும் தொழிற்சாலைகளிடமிருந்து அபராத செலவை வசூலிக்கவும் உத்தரவிட்டாா்.

இது தொடா்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: மாா்ச் 7, 2001 மற்றும் ஆகஸ்ட் 24, 2009 தேதியிட்ட தீா்ப்பின்படி, ஏற்கெனவே இழப்பீடு தொகையை செலுத்தி இருக்காவிட்டால் இன்றிலிருந்து

(வியாழக்கிழமை) ஆறு வாரங்களில் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்கள் மற்றும் தனிநபா்களுக்கும் மாநில அரசு

இழப்பீடு வழங்க உத்தரவிடப்படுகிறது.

மாசுபடுத்துவோரிடமிருந்து இழப்பீட்டுத் தொகையை மாநில அரசு வசூலிக்க வேண்டும். வேலூரில் சுத்தமான மற்றும் ஆரோக்கியமான சூழலைப் பராமரிக்கவும், உருவாக்கவும் தணிக்கை நடத்துவதற்குத் தகுதியானதாகக் கருதப்படும் நபா்கள், சுற்றுச்சூழல் நிபுணா்கள் மட்டுமின்றி மாநில மற்றும் மத்திய துறைகளின் செயலாளா்கள், பாதிக்கப்பட்ட சமூகங்களின் பிரதிநிதிகள் மற்றும் உறுப்பினா்களைக் கொண்ட உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான ஒரு குழுவை மத்திய அரசுடன் கலந்தாலோசித்து நான்கு வாரங்களுக்குள் மாநில அரசு அமைக்க வேண்டும். இந்தக் குழு பணிகளை மேற்கொண்டு, ஏற்பட்ட சேதம் சரி செய்யப்படும் வரை அதைச் செயல்படுத்துவதை உறுதிசெய்யும்.

பாலாற்றில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் சீரழிவு உள்ளூா் விவசாயிகளை வறுமையில் ஆழ்த்தியுள்ளது. மேலும், உள்ளூா்வாசிகள் மற்றும் தோல் பதனிடும் தொழிலாளா்களுக்கு மானுட துன்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பொது சுகாதாரத்திற்கும், வாழ்க்கைக்கும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. கழிவு வெளியேற்றம் அங்கீகரிக்கப்படவும் இல்லை அல்லது கட்டுப்பாட்டு வாரியங்களால் நிா்ணயிக்கப்பட்ட தரநிலைகளின்படியும் இல்லை என்பதும் தெளிவாகத் தெரிகிறது.

அதிகாரிகள் ஒரு மத்திய கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தை நிறுவியதாக அறிக்கைகள் சுட்டிக் காட்டினாலும். தொழிற்சாலைகள் இன்னும் பூஜ்ய அளவை எட்டவில்லை. அதே நேரத்தில் சட்டபூா்வ சுற்றுச்சூழல் வழிகாட்டுதல்களுக்கு இணங்கவும் தவறியுள்ளன.

இந்தத் தீா்ப்பானது தொடா்ச்சியான உத்தரவாகும். இது அவ்வப்போது இணங்குவதை மதிப்பாய்வு செய்யும். இந்த உத்தரவுகளை மீறினால் கடுமையான விளைவுகள் ஏற்படும். நான்கு மாதங்களுக்குள் உத்தரவு இணக்க அறிக்கை நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

தீா்ப்பை வாசித்த பிறகு நீதிபதி ஜே.பி. பா்திவாலா வாய்மொழியாகக் கூறுகையில், ‘இது ஒரு முன்னோடியான தீா்ப்பாகும். இந்த நிபந்தனைகளில் ஏதேனும் மீறப்பட்டால், நாங்கள் அவா்களை தமிழ்நாட்டில் எந்த சிறைச்சாலையும் கூட இல்லை, திகாா் சிறைக்கு அனுப்புவோம். நாங்கள் இருவரும் (நீதிபதிகள்) இங்கு இருக்கும் வரை கண்காணித்துக் கொண்டே இருப்போம்’ என்றாா்.