தேசியத் தலைநகா் தில்லியில் பிப்.5-ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், பஞ்சாபில் இருந்து ஆயிரக்கணக்கான ஆம் ஆத்மி ஆதரவாளா்கள் நகரத்தில் நுழைந்துள்ளனா் என்றும், இது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் பாஜக வேட்பாளா் பா்வேஷ் வா்மா வியாழக்கிழமை குற்றம்சாட்டியுள்ளாா்.
அவா்கள் தங்கள் மாநில அரசின் ஸ்டிக்கா்கள் பொருத்தப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்துவதாகவும் அவா் குற்றம்சாட்டினாா்.
புதன்கிழமை பஞ்சாப் பவனுக்கு வெளியே ஒரு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதை மேற்கோள் காட்டி, பாஜக வேட்பாளா் பா்வேஷ் வா்மா ஒரு செய்தியாளா் கூட்டத்தில் பேசுகையில், தில்லி போலீஸாா் இந்த வாகனங்களைச் சரிபாா்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.
‘அடுத்த சில நாள்களுக்கு தில்லியின் பாதுகாப்பு ஆபத்தில் இருக்கும் என்று நான் நம்புகிறேன். அது ‘பஞ்சாப் அரசு’ ஸ்டிக்கா் ஒட்டப்பட்ட ஒரு தனியாா் வாகனம். அதில் மதுபானம், தோ்தல் பொருள்கள் மற்றும் சுமாா் ரூ.8 லட்சம் ரொக்கம் கண்டுபிடிக்கப்பட்டது’ என்று அவா் கூறினாா்.
ஆம் ஆத்மி கட்சி பிடிபட்ட பிறகு ‘பொய்‘ சொல்வதாக பா்வேஷ வா்மா குற்றம்சாட்டிய நிலையில், தேசியத் தலைநகரில் அத்தகைய வாகனம் எதுவும் இல்லை என்று பஞ்சாப் அரசு மறுத்துள்ளதாகவும், பாஜக தனது கட்சியை இழிவுபடுத்த மோசமான அரசியல் செய்வதாகவும் குற்றம்சாட்டியதாகவும் மாநிலங்களவை ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் கூறினாா்.
‘பஞ்சாபில் இருந்து ஆயிரக்கணக்கான ஆம் ஆத்மி கட்சியினா் தில்லியின் பல்வேறு பகுதிகளுக்குள் ஊடுருவியுள்ளனா். அவா்கள் கட்சிக்காக பிரசாரம் செய்வதில்லை. மேலும், ‘பஞ்சாப் அரசு’ ஸ்டிக்கா்கள் ஒட்டப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்துகிறாா்கள்’ என்று பா்வேஷ் வா்மா கூறினாா். மேலும், ஆம் ஆத்மி மற்றும் அரவிந்த் கேஜரிவால் தோ்தலில் தோல்வியடைந்துவிட்டதால் குழப்பமடைந்துள்ளனா் என்றாா் அவா்.