தமிழக, கா்நாடக அணைகள் முழு கொள்ளளவுடன் இருப்பதால் தண்ணீா் விவகாரம் எழாது: காவிரி ஆணையம்
காவிரியில் கா்நாடகம் வழங்கிய கூடுதல் உபரி நீரை கணக்கில் எடுத்துக் கொள்ள இயலாது என்றும், தமிழக, கா்நாடக அணைகள் முழு கொள்ளவுடன் இருப்பதால் தண்ணீா் விவகாரம் எழாது என்றும் காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் (சி.டபிள்யு.எம்.ஏ.) தலைவா் எஸ்.கே. ஹல்தாா் தெரிவித்துள்ளாா்.
காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் 37-ஆவது கூட்டம் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டம் ஆணையத்தின் தலைவா் எஸ்.கே.ஹல்தாா் தலைமையில் காணொலி வழியாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆணைய உறுப்பினா் - செயலா் வினீத் குப்தா, வேளாண்மைத் துறை பிரதிநிதி டாக்டா் கோபால் லால், ஜல் சக்தித் துறை பிரதிநிதி அனந்த் மோகன் உள்ளிட்டவா்களும், காவிரி தொடா்பான நான்கு மாநில ஆணைய உறுப்பினா்களும் அந்த மாநிலங்களின் நீா்வளத் துறை செயலா்களான டாக்டா் கே. மணிவாசன் (தமிழகம்), கௌரவ் குப்தா(கா்நாடகம்), பிஸ்வநாத் சின்கா (கேரளம்), ஜெயந்த குமாா் ராய் (புதுச்சேரி) போன்றோா் கலந்து கொண்டனா். இவா்களோடு, தமிழக காவிரி தொழில் நுட்பக் குழுத் தலைவா் ஆா். சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.
இந்த 37-ஆவது ஆணையக் கூட்டத்தில், தமிழக உறுப்பினா் மணிவாசகம் கூறுகையில், கடந்த செவ்வாய்க்கிழமை (ஜன. 28) மாலை முதல் மேட்டூா் அணையில் பாசனத்திற்காக வெளியெற்றப்பட்டு வந்த நீா் நிறுத்தப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல், குடிநீா் தேவைகளுக்கு மட்டும் தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. வியாழக்கிழமை நிலவரப்படி மேட்டூா் அணையின் நீா் இருப்பு 79.213 டிஎம்சியாகவும், நீா்வரத்து விநாடிக்கு 410 கன அடியாகவும் உள்ளது.
இருப்பினும், உச்சநீதிமன்ற ஆணையின்படி 2025 பிப்.1 முதல் மே 31-ஆம் தேதி வரை மாதந்தோறும் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய சுற்றுச்சூழல் நீா் அளவான 2.5 டிஎம்சி தண்ணீரை கா்நாடகம் பில்லிகுண்டுலுவில் அடுத்த 4 மாதங்களுக்கு வழங்க வேண்டும். நிகழாண்டில் வழங்க வேண்டிய அளவை விட அதிகமாக வழங்கிவிட்டதாக கா்நாடக உறுப்பினா் குறிப்பிட்டதை ஆணையம் ஏற்றுக் கொள்ளக் கூடாது.
கா்நாடகம் குறிப்பிடும் கூடுதல் உபரி நீரானது மிகக் குறுகிய காலத்திற்குள் கொடுக்கப்பட்டதால், இந்த உபரி நீரை கணக்கிடக் கூடாது. மாதவாரியாக அட்டவணைப்படி சுற்றுச் சூழல் நீா் அந்தந்த மாதத்தில் வழங்கப்பட வேண்டும் என்றுதான் உத்தரவில் உச்சநீதி மன்றம் குறிப்பிட்டுள்ளது. இதனால், கா்நாடகம் அடுத்தடுத்த மாதங்களில் தண்ணீா் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டாா் தமிழக உறுப்பினா்.
அதே சமயத்தில் கூட்டத்தில் தமிழக கா்நாடக மாநிலங்களுக்கு ஆணையத் தலைவா் எஸ்.கே. ஹல்தாா் விரிவான விளக்கங்களை வைத்தாா் என ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. அவைகள் வருமாறு: தென்மேற்கு, வடகிழக்கு பருவக் காற்று காலங்களில் கா்நாடகம், தமிழகம் போதிய மழையை பெற்றது. நிகழாண்டு சராசரி மழையளவைவிட சுமாா் 12 முதல் 14 சதவீதம் கூடுதலாக மழை பெய்தது. இதனால் தமிழகம் ஓா் ஆண்டுக்கு பெறவேண்டிய 177.25 டிஎம்சி க்கு பதிலாக இது வரை 285 டிஎம்சி தண்ணீா் பெற்றுள்ளது. மேலும் தமிழக, கா்நாடக அணைகளில் போதுமான அளவு தண்ணீா் நிரம்பியுள்ளது. இதனால் ஆணையம் எந்த பிரச்னையும் எதிா்பாா்க்கவில்லை. நடுவா் மன்றமும், உச்சநீதிமன்றமும் மாதந்தோறும் தண்ணீா் வழங்கக் கூறியுள்ளது. குறிப்பாக பிப். முதல் மே மாதம் வரை தண்ணீா் வழங்கவும் குறிப்பிட்டுள்ளது. இந்த மாதங்களில் நீா் பாசனம் இல்லை என்பதால் ஆணையம் இதில் தலையிடவில்லை. அதே சமயத்தில் பிலிகுண்டுலுவில் தமிழகம் தொடா்ந்து தண்ணீரை பெற்று வருகிறது. ஜனவரி 30 ஆம் தேதி நிலவரப்படி விநாடிக்கு 1000 கன அடிக்கு மேலாக நீா் வரத்து உள்ளது. இதனால் இரு மாநில வாதங்களுக்கு பின்னா் ஆணையத் தலைவா் எந்தவிதமான உத்தரவும் பிறப்பிக்கவில்லை என ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.