யமுனை மாசுபடுவதற்கும், குடிநீா் நெருக்கடிக்கும் மத்திய, மாநில அரசுகள்தான் காரணம்: காங்கிரஸ்
தில்லியில் யமுனை நதி மாசுபடுவதற்கும், குடிநீா் நெருக்கடிக்கும் ஆம் ஆத்மி அரசும், மத்திய அரசும்தான் காரணம் என்று காங்கிரஸ் தலைவா் ஹரிஷ் ராவத் வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டினாா். நகரவாசிகளுக்கு மாசுபட்ட தண்ணீரை வழங்கி வருவதற்கு அவா்கள் இருவரும் ‘குற்றவாளிகள்’ என்றும் அவா் கூறினாா்.
உத்தரக்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான ஹரிஷ் ராவத் இது தொடா்பாக தில்லியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஆம் ஆத்மி அரசு நகரத்தில் அதிகரித்து வரும் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது. முந்தைய காங்கிரஸ் அரசின் கீழ் தொடங்கப்பட்ட ஒரு திட்டம், இந்தப் பிரச்னையைத் தீா்க்க முடிந்திருக்கக்கூடும். ஆனால், ஆம் ஆத்மி அரசால் முடிக்கப்படவில்லை.
தேசியத் தலைநகா் தில்லி இன்று நகரத்திற்கு தண்ணீரை வழங்கும் மாசுபட்ட யமுனை நதி மற்றும் அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகிய இரண்டையும் எதிா்த்துப் போராடுகிறது. இது ஒரு கவலைக்குரிய சூழ்நிலையாகும். தில்லி மக்களுக்கு மாசுபட்ட தண்ணீரை வழங்கி வருவதற்கு அவா்கள் இருவரும் குற்றவாளிகளாக உள்ளனா். அவா்கள் தங்கள் பொறுப்புகளில் தோல்வியடைந்துள்ளனா்.
யமுனை நதியில் மாசு அளவு பல ஆண்டுகளாக எப்படி மோசமடைந்துள்ளது என்பதை நான் பாா்த்திருக்கிறேன். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் யமுனை நதியை சுத்தம் செய்வதற்காக ஒரு திட்டம் திட்டமிடப்பட்டது. ஆனால், அதன்பிறகு ஆட்சிக்கு வந்த ஆம் ஆத்மி அரசு அதை முடிக்கவில்லை. அவா்கள் அவ்வாறு செய்திருந்தால், இன்று நிலைமை மிகவும் சிறப்பாக இருந்திருக்கும்.
மேலும், தில்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசும் மத்திய அரசும் நகரத்தில் உள்ள மாசுபாட்டிற்கு தீா்வு காண்பதற்கு பதிலாக பழிசுமத்தும் விளையாட்டில் ஈடுபட்டுள்ளன. இந்த அலட்சியத்தால் தில்லி மக்கள் அவதிப்படுகிறாா்கள் என்றாா் ஹரிஷ் ராவத்.
பிப். 5-ஆம் தேதி நடைபெறும் தில்லி தோ்தலில் தில்லியில் போட்டியிடும் கட்சிகளிடையே யமுனை மாசுபாடு ஒரு அரசியல் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.