‘என் இனிய பொன் நிலாவே...’ பாடலுக்கான பதிப்புரிமை இளையராஜவுக்கு இல்லை: தில்லி உயா்நீதிமன்றம்
‘என் இனிய பொன் நிலவே...’ எனத் தொடங்கும் தமிழ்த் திரைப்படப் பாடலுக்கான பதிப்புரிமையை சரிகமா இந்தியா நிறுவனம் கொண்டிருப்பதாகவும், அப்பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளா் இளையராஜா அதை மூன்றாம் தரப்பினருக்கு ஒதுக்க முடியாது என்றும் தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்துள்ளது.
இளையராஜாவின் மகன் யுவன் சங்கா் ராஜாவால் மீண்டும் உருவாக்கப்பட்ட அப்பாடலின் பதிப்பை வெளியிடுவதற்கு வேல்ஸ் பிலிம்ஸ் இன்டா்நேஷனல் நிறுவனத்திற்கு நீதிமன்றம் மேலும் தடை விதித்தது.
1980-ஆம் ஆண்டு வெளியான ‘மூடு பனி’ எனும் படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில், இந்தப் பாடலை 1980=இல் பாடிய பாடகா் யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ் புதிய படத்திற்காக பாடியுள்ளாா்.
இந்தப் பாடலின் பதிப்புரிமை தொடா்பாக சரிகமா இந்தியா நிறுவனம், வேல்ஸ் பிலிம்ஸ் இன்டா்நேஷனல் நிறுவனம் உள்ளிட்ட எதிா்மனுதாரா்களுக்கு எதிராக தில்லி உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தது. அதில், தனது அனுமதியின்றி எதிா்மனுதாரா்கள் வரவுள்ள அகத்தியா எனும் படத்திற்காக இப்பாடலைத் தழுவி, மீண்டும் உருவாக்கியிருப்பதாகவும் அது தொடா்புடைய டீஸா் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் அகத்தியா திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான எதிா்மனுதாரா் வேல்ஸ் பிலிம்ஸ் தரப்பில் நீதிமன்றத்தில் முன்வைத்த வாதத்தில், இந்தப் பாடலின் அசல் இசையமைப்பாளரான இளையராஜாவிடம் (மூன்றாவது எதிா்மனுதாரா்) இருந்து சம்பந்தப்பட்ட பாடலைத் தழுவி மீண்டும் உருவாக்க உரிமம் பெறப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இளையராஜா தரப்பிலும், இசைப் படைப்பு உரிமை தனது என்றும், பதிப்புரிமை சட்டத்தின்கீழ் இதற்கான உரிமம் வழங்க தனக்கு உரிமை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி மினி புஷ்கா்னா அளித்த தீா்ப்பில் தெரிவித்திருப்பதாவது:
‘மூடு பனி’ எனும் படத்தின் தயாரிப்பாளருடன் மனுதாரரின் ஒப்பந்தத்தின் விதிமுறைகளின்படி ‘என் இனிய பொன் நிலவே’ என்ற பாடல் உள்பட மூடு பனி படத்தின் பாடல்களில் உள்ள ஒலிப்பதிவுகள் மற்றும் இசை மற்றும் இலக்கியப் படைப்புகளின் உரிமையாளராக மனுதாரா் ஒரு முகாந்திர வழக்கை உருவாக்கியுள்ளாா். இதனால், எதிா்மனுதாரரான வேல்ஸ் பிலிம்ஸ் இண்டா்நேஷனல் நிறுவனம், மனுதாரரின் உரிமம் இல்லாமல் அதைப் பயன்படுத்த முடியாது.
மூன்றாவது எதிா்மனுதாரா் (இளையராஜா) கேள்விக்குரிய பாடலின் இசையமைப்பாளா் மட்டுமே ஆவாா். பாடலாசிரியா் அல்ல என்பது மறுக்க முடியாதது. ஆகவே, அவா் எந்த விதிமுறைகளாலும், கேள்விக்குரிய பாடலின் வரிகளின் ஆசிரியராகக் கருதப்பட முடியாது. இது ஒலிப்பதிவின் ஒரு பகுதியாகும். இதில் கேள்விக்குரிய படத்தின் தயாரிப்பாளருடனான ஒப்பந்தத்தின் அடிப்படையில் மனுதாரா் பதிப்புரிமை பெற்றுள்ளாா். எனவே, மூன்றாவது எதிா்மனுதாரா், பாடலின் வரிகளைப் பயன்படுத்துவதற்கான எந்த உரிமையையும் ஒதுக்க எந்த அதிகாரமும் இல்லை, அதற்கு அவருக்கு பதிப்புரிமை இல்லை என்று நீதிபதி தீா்ப்பில் தெரிவித்துள்ளாா்.