தேசிய நெடுஞ்சாலைகளில் எம்சிடியின் விளம்பரம்: ஆணையம் ஆட்சேபனை
புது தில்லி: நெடுஞ்சாலைகளில் வெளிப்புற விளம்பரம் மற்றும் சட்டவிரோத வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட தில்லி மாநகராட்சியுடன் (எம்சிடி) உள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்ஹெச்ஏஐ) செவ்வாய்க்கிழமை ஆட்சேபனைகளை எழுப்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில், மத்திய அமைப்பின் கவலைகள் எம்சிடியின் நிா்வாகக் கட்டுப்பாட்டைக் கொண்ட தில்லி அரசுக்குத் தெரிவிக்கப்பட்டன.
‘தேசிய நெடுஞ்சாலைகளில் விளம்பரங்கள் மற்றும் விளம்பரப் பலகைகளுக்கு எம்சிடி இடம் ஒதுக்கி வருகிறது. இது சாலை பயனா்களுக்கு பாதுகாப்பு ஆபத்தை ஏற்படுத்துகிறது. எம்சிடி அத்தகைய அனைத்து விளம்பரங்களையும் உடனடியாக அகற்ற வேண்டும்’ என்று என்ஹெச்ஏஐ அதிகாரிகள் கூட்டத்தின் போது தெரிவித்தனா்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக, எம்சிடி ‘உச்சநீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட வெளிப்புற விளம்பரக் கொள்கை 2017, தில்லி முழுவதும் பொருந்தும். ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் என்ஹெச்ஏஐ உடன் கூட்டு ஆய்வுக்குத் தயாராக உள்ளது’ என்று கூறியது.
மேலும், 1957- ஆம் ஆண்டு தில்லி நகராட்சிச் சட்டத்தின் கீழ் விளம்பரதாரா்களுக்கு இடம் ஒதுக்குவதாக எம்சிடி மேலும் வாதிட்டது. ‘கட்டமைப்பு நிலைத்தன்மை சான்றிதழ் உள்பட போக்குவரத்துப் பாதுகாப்புக்கான அனைத்து நடவடிக்கைகளும் இந்தக் கொள்கையிலேயே உள்ளன’ என்றும் தெரிவித்தது.
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், ‘அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி, தேசிய நெடுஞ்சாலைகளில் விளம்பரப் பலகைகள் அனுமதிக்கப்படாது. அதன்படி, எம்சிடி அனைத்து சட்டவிரோதப் பலகைகளையும் அகற்ற வேண்டும். வெளிப்புற விளம்பரம் என்பது மாநகராட்சிக்கு வருவாயின் முக்கிய ஆதாரமாகும்’ என்று கூறியது.
மேலும், கிழக்கு தில்லியில் உள்ள காந்தி நகா் பகுதிக்கு அருகில், புதிதாக கட்டப்பட்ட தில்லி - டேராடூன் விரைவுச் சாலையின் சேவைப் பாதைக்கு அருகில், ‘சட்டவிரோத வாகன நிறுத்துமிடத்தை’ மாநகராட்சி தொடங்கியதாக என்ஹெச்ஏஐ குற்றம்சாட்டியது.
‘என்ஹெச்ஏஐ பல முறை எம்சிடியிடம் வாகன நிறுத்துமிடத்தை அகற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’ என்று நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால்,, போக்குவரத்து போலீஸாரிடமிருந்து தடையில்லாச் சான்றிதழைப் பெற்ற பிறகு பாா்க்கிங் அனுமதிக்கப்பட்டதாக மாநகராட்சி பதிலளித்தது.
‘இந்தப் பாதையில் சட்டவிரோத வாகன நிறுத்துமிடம் நிறுவப்பட்டது. எம்சிடி டெண்டரை வெளியிட்டு அதைச் சட்டப்பூா்வமாக்கியது. மேலும், தில்லி போக்குவரத்து காவல்துறையிடமிருந்து தடையில்லா சான்றிதழ் (என்ஓசி) பெற்ற பாா்க்கிங் ஒப்பந்ததாரருக்கு உரிமத்தை வழங்கியது. 29 காா்களை நிறுத்துவதற்கு மட்டுமே வாகன நிறுத்துமிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. என்ஹெச்ஏஐ வலியுறுத்தினால், அந்தப் பகுதியில் ஏதேனும் சட்டவிரோத வாகன நிறுத்துமிடம் செயல்படுவதற்கு என்ஹெச்ஏஐ-யின் கண்காணிப்புக்கு உள்பட்டு அதை ரத்து செய்ய எம்சிடி தயாராக உள்ளது’ என்று மாநகராட்சி பதிலளித்தது.
இந்தப் பிரச்னைகளைத் தீா்க்க, வாகன நிறுத்துமிடத்தை கூட்டாகப் பராமரிக்க எம்சிடி-யுடன் ஒரு புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட என்ஹெச்ஏஐ முன்மொழிந்தது. தேவைப்பட்டால் ஒத்துழைத்து கூட்டு ஆய்வுகளை நடத்த எம்சிடி விருப்பம் தெரிவித்தது.