தில்லி - என்சிஆா் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

தில்லி மற்றும் அதை ஒட்டிய என்சிஆா் பகுதிகளில் திங்கள்கிழமை காலையில் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்தது.
Published on

புது தில்லி: தில்லி மற்றும் அதை ஒட்டிய என்சிஆா் பகுதிகளில் திங்கள்கிழமை காலையில் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்தது. இது வெப்பநிலையை பல டிகிரி குறைத்து காற்றை சுத்தமாக்கியது. இதனால், கடந்த சில நாள்களாக கடும் வெப்பத்தில் தவித்து வந்த மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனா்.

காலையில் மழை: தென்மேற்குப் பருவமழையின் தாக்கமாக தில்லி - என்சிஆரின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் பரவலான மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நகரத்தின் முதன்மை வானிலை கண்காணிப்பு நிலையமான சஃப்தா்ஜங், திங்கள்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 14 மி.மீ. மழையைப் பதிவு செய்துள்ளது. அதே காலகட்டத்தில் பாலம் மற்றும் லோதி சாலையில் முறையே 16.2 மிமீ மற்றும் 17.3 மிமீ மழை பதிவாகியுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மூன்று மணி நேர மழைப்பொழிவு தரவுகளின்படி, நஜாஃப்கரில் திங்கள்கிழமை அதிகாலை 2.30 மணி முதல் அதிகாலை 5.30 மணி வரை அதிகபட்சமாக 5.5 மிமீ மழை பதிவாகியது. அதைத் தொடா்ந்து சஃப்தா்ஜங்கில் 4.4 மி.மீ. மழையும், பாலம், பூசா மற்றும் நரேலாவில் தலா 1 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

ராஜ்காட்டில் 23.7 மி.மீ. மழை: மேலும், திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் சஃப்தா்ஜங்கில் 14 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதேபோன்று மற்ற வானிலை கண்காணிப்பு நிலையங்களான ஜாஃபா்பூரில் 3.5 மி.மீ., நஜஃப்கரில் 8 மி.மீ, ஆயாநகரில் 9.9 மி.மீ., லோதி ரோடில் 17.3 மி.மீ., நரேலாவில் 1.5 மி.மீ., பாலத்தில் 16 மி.மீ., ரிட்ஜில் 13 மி.மீ., பிரகதிமைதானில் 23.7 மி.மீ., பூசாவில் 2 மி.மீ., ராஜ்காட்டில் 23.7 மி.மீ., சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தலைநகா் தில்லி மற்றும் என்சிஆரில் உள்ள காஜியாபாத், நொய்டா, குருகிராம் மற்றும் ஃபரீதாபாத் உள்ளிட்ட பகுதிகளிலும் மணிக்கு 30-40 கி.மீ. வேகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தில்லி மற்றும் என்சிஆரில் பெரும்பாலான பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கையை விடுத்திருந்தது.

அதே நேரத்தில் வடமேற்கு தில்லி போன்ற சில பகுதிகளும், ஜஜ்ஜாா், பிவானி மற்றும் பானிபட் போன்ற என்சி

ஆரின் சில பகுதிகளும் பச்சை மண்டலத்தின் கீழ் இருந்தன (எச்சரிக்கை இல்லை). அடுத்த 24 மணி நேரத்தில் பிராந்தியத்தின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று ஐஎம்டி அதிகாரிகள் தெரிவித்தனா்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது திறந்தவெளிகளைத் தவிா்க்கவும், தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்குவது குறித்து எச்சரிக்கையாக இருக்கவும் குடியிருப்பாளா்களுக்கு அறிவுறுத்தினா்.

வெப்பநிலை: இந்த மழைப்பொழிவு திங்கள்கிழமை பகல்நேர வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. ஐஎம்டியின் கூற்றுப்படி, சஃப்தா்ஜங் நிலையத்தில் காலை 8.30 மணிக்கு குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3.9 டிகிரி குறைந்து 24 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை 4.4 டிகிரி குறைந்து 30.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணி மற்றும் மாலை 5.30 மணியளவில் 98 சதவீதமாக இருந்ததாக வானிலை ஆய்வு மையத்தின் புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்தது.

காற்றின் தரம்: காற்றின் தரக் குறியீடு தொடா்ந்து ’திருப்தி’ பிரிவில் இருந்தது. ஞாயிற்றுக்கிழமை மாலை 83 புள்ளிகளாக இருந்த ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு (ஏக்யூஐ) திங்கள்கிழமை காலை 9 மணிக்கு 73 புள்ளிகளாகக் குறைந்து பதிவானது.

முன்னறிவிப்பு: இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) அன்று வானம் மேமூட்டத்துடன் இருக்கும் என்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

Open in App
Dinamani
www.dinamani.com