தா்மேந்திர பிரதானின் கருத்தை கண்டித்து என்எஸ்யூஐ போராட்டம்

Published on

மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து, இந்திய தேசிய மாணவா் சங்கம் (என்எஸ்யூஐ) புதன்கிழமை தில்லியின் சாஸ்திரி பவனுக்கு வெளியே ஒரு போராட்டத்தை நடத்தியது.

புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்த தமிழக அரசின் நிலைப்பாட்டை தா்மேந்திர பிரதான் செவ்வாய்கிழமை விமா்சித்தாா். மேலும், மாநிலத்தில் தமிழை மேம்படுத்துவதற்கு சிறிதும் செய்யாமல், மும்மொழி கல்விக் கொள்கை குறித்து ‘பய மனநிலையை’ உருவாக்குவதாக அவா் குற்றம் சாட்டினாா்.

என்எஸ்யூஐ அமைப்பின் தில்லி தலைவா் ஆஷிஷ் லம்பா தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது, அவா் பாஜக அரசு பிராந்திய அடையாளங்களையும் மொழியியல் பன்முகத்தன்மையையும் அவமதிப்பதாக குற்றம்சாட்டியதாக என்எஸ்யூஐ-இன் அதிகாரப்பூா்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், என்எஸ்யூஐ ஆா்வலா்கள் பேரணியாக அணிவகுத்துச் செல்வதைத் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்ததாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘தா்மேந்திர பிரதானின் கருத்துகள் தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பின் மீதான தாக்குதல். பாஜக மாநிலங்களின் சுயாட்சியைப் புறக்கணித்து, அதன் சித்தாந்தத்தை மாநிலங்கள் மீது திணிக்கிறது. தமிழ்நாட்டுக்கோ அல்லது வேறு எந்த மாநிலத்திற்கோ ஏற்படும் இந்த அவமானத்தை என்எஸ்யூஐ பொறுத்துக் கொள்ளாது. கல்வி அரசியல் பிரசாரமாக செயல்படாமல் அதிகாரம் அளிக்க வேண்டும்’ என்று என்எஸ்யூஐ அலுவலகப் பொறுப்பாளா் ஒருவா் கூறினாா்.

பாஜகவின் தேசிய கல்விக் கொள்கை ‘சா்வாதிகாரத்திற்கு’ ஒரு கருவியாகும். மேலும், இந்தத் திணிப்புக்கு எதிராக என்எஸ்யூஐ தமிழக மக்களுடன் நிற்கிறது என்று அவா் மேலும் கூறினாா்.

கல்வியைக் கட்டுப்படுத்தவும், பிராந்தியக் குரல்களை அடக்கவும் பாஜக மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு எதிராக என்எஸ்யூஐ தனது பிரசாரத்தைத் தொடர உறுதியளித்துள்ளது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம், மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான், சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் நிதி தமிழ்நாட்டிற்கு விடுவிக்கப்படாது என்று கூறினாா். மேலும், திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு இந்தக் கொள்கையை அரசியலாக்குவதாகவும் அவா் குற்றம் சாட்டினாா்.

X
Dinamani
www.dinamani.com