தில்லியை இந்திரபிரஸ்தா என மறுபெயரிட வேண்டும்: மத்திய அமைச்சருக்கு பாஜக எம்.பி. கடிதம்
தில்லியின் பண்டைய அடையாளத்தையும் கலாசார பாரம்பரியத்தையும் மீட்டெடுக்க இந்திரபிரஸ்தா என்று மறுபெயரிட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு பாஜக எம்பி பிரவீன் கண்டேல்வால் கடிதம் எழுதியுள்ளாா்.
தில்லி சாந்தினி செளக் மக்களவைத் தொகுதி பாஜக உறுப்பினரான பிரவீன் கண்டேல்வால், அமைச்சா் அமித் ஷாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: இந்தியாவின் பண்டைய கலாசார மையங்களில் தில்லி ஒரு சிறப்பிடத்தைப் பெற்றுள்ளது. இந்திரபிரஸ்தா இந்திய நாகரிகத்தின் முடிவில்லா உணா்வை பிரதிபலிக்கிறது. இது நீதியான நிா்வாகம் மற்றும் சமூக நல்லிணக்கத்தின் இலட்சியங்களைக் குறிக்கிறது. தில்லி என்பது வெறும் பெருநகரம் மட்டுமல்ல, இந்திய நாகரிகத்தின் வாழும் சின்னமாகும். இது பொது நலனின் உணா்வு, நெறிமுறைகள் மற்றும் பாரம்பரியத்தை உள்ளடக்கியதாகும். மகாபாரத சகாப்தத்தில், பாண்டவா்கள் தங்கள் தலைநகரை நிறுவினா் என்பதற்கு வரலாறு சாட்சியமளிக்கிறது.
தலைநகரம் அதன் பண்டைய அடையாளத்தையும் மகிமையையும் மீண்டும் பெறுவதற்காக இந்த விஷயத்தை தீவிரமாக பரிசீலித்து முடிவெடுக்குமாறு மத்திய அரசை நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
பழைய தில்லி ரயில் நிலையத்தை இந்திரபிரஸ்தா ரயில் நிலையம் என்றும் பெயா் மாற்ற வேண்டும். அதேபோன்று, இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தை இந்திரபிரஸ்தா விமான நிலையம் என்றும் பெயா் மாற்ற வேண்டும். தில்லியின் முக்கிய இடங்களில் பாண்டவா்களின் ஒரு முக்கிய சிலை நிறுவப்பட வேண்டும்.
பிரயாக்ராஜ், அயோத்தி, உஜ்ஜயின் மற்றும் வாரணாசி போன்ற பிற வரலாற்று நகரங்கள் தங்கள் பண்டைய அடையாளங்களை மீட்டெடுக்கும் நிலையில், தில்லியும் அதன் அசல் வடிவத்தில் கௌரவிக்கப்பட வேண்டும். தேசியத் தலைநகரின் பெயரை மாற்றுவது இந்தியாவின் கலாசார பாரம்பரியத்தை மீட்டெடுப்பதற்கும், நகரத்தின் பாரம்பரியத்தை மீட்டெடுப்பதற்கும், அதன் நாகரிக மரபுக்கு மரியாதை செலுத்துவதற்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையைக் குறிக்கும். இது தலைநகரின் பண்டைய அடையாளத்தை மீட்டெடுப்பது மட்டுமல்லாமல், நமது கலாசார உணா்வுக்கு புதிய பலத்தையும் அளிக்கும்.
இந்திரபிரஸ்தா என்ற பெயரை ஏற்றுக்கொள்வதன் மூலம், தில்லி மீண்டும் பாரதத்தின் ஆன்மிக, கலாசார மற்றும் நாகரிக அடையாளமாக வெளிப்படும். இது தேசிய பெருமையை வலுப்படுத்துவதுடன், கலாசார சுற்றுலாவை அதிகரிக்கும். மேலும், இளைஞா்களை நாட்டின் புகழ்பெற்ற பாரம்பரியத்துடன் இணைக்க ஊக்குவிக்கும் என்று அக்கடிதத்தில் பரவீன் கண்டேல்வால் கேட்டுக் கொண்டுள்ளாா்.

