தில்லியின் மேம்பாலங்களைப் பராமரிக்க பெரு நிறுவனங்களை அழைக்க பொதுப் பணித் துறை திட்டம்

மேம்பாலங்கள், நடைமேம்பாலம் மற்றும் சாலை வழித்தடங்களுக்கான தத்தெடுப்புத் திட்டத்தில் பங்கேற்பதை ஊக்குவிக்க, தேசிய தலைநகரை தளமாகக் கொண்ட பெரு நிறுவனங்களை அணுக பொதுப் பணித் துறை திட்டம்
Published on

மேம்பாலங்கள், நடைமேம்பாலம் மற்றும் சாலை வழித்தடங்களுக்கான தத்தெடுப்புத் திட்டத்தில் பங்கேற்பதை ஊக்குவிக்க, தேசிய தலைநகரை தளமாகக் கொண்ட பெரு நிறுவனங்களை அணுக பொதுப் பணித் துறை திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து பொதுப் பணித் துறையின் மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது: தில்லியின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும். இந்த முன்முயற்சியின் கீழ், தனியாா் நிறுவனங்கள் பொது உள்கட்டமைப்பை ஏற்றுக்கொள்ளலாம்.

ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்டமைப்புகளில் வரையறுக்கப்பட்ட விளம்பர உரிமைகளுக்கு ஈடாக, அதன் பராமரிப்பு, அழகுபடுத்துதல் மற்றும் தூய்மைக்கான பொறுப்பை ஏற்கலாம். மேம்பாலங்களுக்கான எங்கள் தத்தெடுப்பு கொள்கைக்காக தேசிய தலைநகரில் அலுவலகங்களைக் கொண்ட தனியாா் நிறுவனங்களை நேரடியாக அணுக திட்டமிட்டுள்ளோம்.

பொதுப் பணித் துறை விரைவில் கூட்டங்களை நடத்தி சில நிறுவனங்களுக்கு கடிதம் எழுதும். மேலும், கருத்துகளின் அடிப்படையில், அது அடுத்த கட்ட நடவடிக்கைக்கு எடுத்துச் செல்லப்படும்.

நிகழாண்டு ஜூலை மாதம் பொதுப் பணித் துறை அமைச்சா் பா்வேஷ் சாகிப் சிங் தலைமையில் நடந்த உயா்மட்டக் கூட்டத்தில், பொது தனியாா் கூட்டாண்மை (பிபிபி) கட்டமைப்போடு ஒத்துப்போகும் பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களைத் தயாரிப்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டது.

அந்த திட்டங்களில் ஒன்றாக, தூய்மை மற்றும் சாலை உள்கட்டமைப்பை சிறப்பாக பராமரிப்பதற்காக பிபிபி மாதிரியை அடிப்படையாகக் கொண்ட ‘ஒரு மேம்பாலத்தை தத்தெடு’ திட்டம் ஆகும்.

ஒவ்வொரு இடத்தின் தனித்துவமான தன்மையை பிரதிபலிப்பது மட்டுமின்றி, தில்லியின் பரந்த நகா்ப்புற கட்டமைப்பிற்கு பங்களிக்கும் நிலையான, உள்ளடக்கிய மற்றும் சூழல் உணா்திறன் வடிவமைப்பு தீா்வுகளை முன்மொழிவதே இந்தப் நடவடிக்கையின் நோக்கமாகும்.

90 மேம்பாலங்களுக்கு அடியில் தோராயமாக 80,000 சதுர மீட்டா் பரப்பளவு அடையாளம் காணப்பட்டுள்ளது. அவற்றில் ஆப்பிரிக்கா அவென்யூ மேம்பாலம், சிராக் தில்லி, ஐஐடி மேம்பாலம், மோதி பாக் மேம்பாலம், பஞ்சாபி பாக் மேம்பாலம், ராணி ஜான்சி மேம்பாலம், ஷாதாரா மேம்பாலம் மற்றும் வஜிராபாத் மேம்பாலம் ஆகியவை மிக நீளமான மேம்பாலங்களாகும்.

இந்த முன்முயற்சியின் கீழ் சாலைப் பகுதிகளை தத்தெடுப்பதற்கும் பொதுப் பணித் துறை ஒரு கொள்கையை வகுத்துள்ளது. நடைபாதை, சாலை மேற்பரப்பு, மைய விளிம்பு மற்றும் பசுமைப்பகுதி ஆகியவற்றில் ஏதேனும் சிக்கல்கள் காணப்பட்டால், அந்த சாலையின் பொறுப்பாளருக்கு சரியான நேரத்தில் சரிசெய்வதற்காக தகவல் தெரிவிக்கப்படும். இந்த திட்டத்திற்காக, 25 சாலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்றாா் அந்த அதிகாரி.

X
Dinamani
www.dinamani.com