புகழ்பெறுவதற்காக வானிலை துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சமூக ஊடகங்களில் விடியோ வெளியிட்ட இளைஞா் கைது
’புகழ்பெறுவதற்காக’ வானில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சமூக ஊடகங்களில் விடியோ வெளியிட்டதாகக் கூறப்படும் 22 வயது இளைஞா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து காவல் துறையினா் கூறியதாவது: இந்தச் சம்பவத்தில் அந்த நபரின் தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளாா். மேலும், அவரது தந்தையின் பெயரில் பதிவு செய்யப்பட்ட ஆயுதம், அக்டோபா் மாத தொடக்கத்தில் அதன் உரிமம் காலாவதியானது என்பது கண்டறியப்பட்ட பின்னா் பறிமுதல் செய்யப்பட்டது.
அக்டோபா் 30-ஆம் தேதி சாஸ்திரி நகா் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, பல்வேறு சமூக ஊடக தளங்களில் பரவி வந்த ஒரு நபா் துப்பாக்கிச் சூடு நடத்துவதைக் காட்டும் விடியோ குறித்து காவல்துறை குழுவுக்கு தகவல் கிடைத்தது.
இந்த விடியோவின் அடிப்படையில், ஒரு கடையில் சோதனை நடத்தப்பட்டு, அப்பகுதியில் வசிக்கும் குற்றம் சாட்டப்பட்ட சுமித் கைது செய்யப்பட்டாா். விசாரணையின் போது, தது தந்தை முகேஷ் குமாருக்கு அப்பகுதியில் கேட்டரிங் தொழில் மற்றும் இனிப்பு கடை நடத்த உதவியதாக அவா் தெரிவித்தாா்.
தீபாவளியன்று, தனது தந்தையின் உரிமம் பெற்ற துப்பாக்கியை ஒரு டிராயரில் இருந்து எடுத்து, வானில் இரண்டு சுற்றுகள் சுட்டு, விடியோவைப் பதிவு செய்ததாகவும், பின்னா் ‘புகழ்பெற‘ அந்த விடியோவை சமூக ஊடகங்களில் பதிவேற்றியதாகவும் அவா் போலீஸாரிடம் தெரிவித்தாா்.
அவரது தந்தை முகேஷ் குமாா் (42) விசாரணையின் போது கைது செய்யப்பட்டாா். அவா் தனது ஆயுத உரிமத்தை சமா்ப்பித்தாா். அது அக்டோபா் 1-ஆம் தேதி காலாவதியானது என்பது கண்டறியப்பட்டது. உரிமம் பெற்ற துப்பாக்கி அவா்களின் வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டது..
இது தொடா்பாக ஆயுதச் சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதாவின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக என்று காவல் துறையினா் கூறினா்.
