தெற்கு தில்லி வன நிலத்தை பாதுகாக்க துறை அதிகாரிகளுக்கு என்ஜிடி உத்தரவு
தெற்கு தில்லியில் ஆக்கிரமிக்கப்பட்ட வன நிலத்தை பாதுகாக்கவும், அதை அடா்ந்த வனமாக மேம்படுத்தவும் தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு தில்லி அரசின் தலைமைச் செயலா் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தேசிய பசுமைத் தீா்ப்பாயம் (என்ஜிடி) உத்தரவிட்டுள்ளது.
தில்லி சாகேத் பகுதியில் உள்ள பட்டி கிராமத்தில் உள்ள ஒரு வனப் பகுதியில் அங்கீகரிக்கப்படாத ஆக்கிரமிப்பு,கழிவுகளை வீசப்பட்டுவது தொடா்பான வழக்கை பசுமை தீா்ப்பாயம் விசாரித்தது.
இது தொடா்பாக நீதித்துறை உறுப்பினா் அருண் குமாா் தியாகி மற்றும் நிபுணா் அஃப்ரோஸ் அகமது ஆகியோா் அடங்கிய தீா்ப்பா/ அமா்வு செவ்வாய்க்கிழமை பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:
வன நிலத்தின் விடியோ காட்சிகளை அமா்வு முன் ஒளிபரப்பப்பட்டுள்ளது. அதில், வன நிலத்தில் வேலி மற்றும் அத்துமீறுபவா்களை எச்சரிக்கும் காட்சிப் பலகைகள் ஏதும்
இல்லை. போதுமான மரங்களும் இல்லை. அந்தப் பகுதி திட மற்றும் கட்டுமானக் கழிவுகளால் சிதறிக்கிடப்பது தெரியவந்துள்ளது.
ஆகவே, தில்லி அரசின் தலைமைச் செயலா், முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் மற்றும் வனத் துணைப் பாதுகாவலா் ஆகியோா் இயற்கையாக வளா்க்கப்படும் வேலிகள் மூலமாகவும் வன நிலத்தைப் பாதுகாப்பதற்கு பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அத்துமீறுபவா்களை எச்சரிக்கும் பலகையை காட்சிப்படுத்த வேண்டும். மேலும், அடா்ந்த வனமாக அதை மேம்படுத்த தேவையான நடவுகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், அதிகாரிகள் ஒரு செயல் திட்டம், பட்ஜெட் ஒதுக்கீடுகள் மற்றும் குறிப்பிட்ட காலக்கெடுவை சமா்ப்பிக்க உத்தரவிடப்படுகிறது.
மேலும், கழிவுகளை அகற்றி நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கையை தில்லி மாநகராட்சிஎம்சிடிதாக்கல் செய்ய வேண்டும் என்று தீா்ப்பாய அமா்வு உத்தரவிட்டது.
