நண்பரின் தாத்தாவை சுட்ட சிறுவன் கைது
நமது நிருபா்
மத்திய தில்லியின் சாந்தினி மஹால் பகுதியில் புதன்கிழமை நீண்டகால சொத்து தகராறு தொடா்பாக நண்பரின் 75 வயது தாத்தா மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
செவ்வாய்கிழமை 16 வயது சிறுவன் அவரது நண்பா் சமீா் மாலிக்கின் தாத்தா ஷாபுதீனை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படும் சம்பவம் நடந்ததாக அவா்கள் தெரிவித்தனா்.
பழைய ஜனக்புரியைச் சோ்ந்த 16 வயது சிறுவன், கம்லா மாா்க்கெட்டில் உள்ள பிரஸ் கிளப் சாலை அருகே கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு கைத்துப்பாக்கி மற்றும் இரண்டு தோட்டாக்கள் அவரது வசம் இருந்து மீட்கப்பட்டன, என்று போலீஸ் துணை ஆணையா் (குற்றம்) விக்ரம் சிங் தெரிவித்தாா்.
விசாரணையின் போது, ஷாபுதீனை சுட்ட பிறகு தப்பி ஓடிவிட்டதாக அச்சிறுவன் தெரிவித்தாா் என்று விக்ரம் சிங் கூறினாா்.
சிறுவன், 7 ஆம் வகுப்பில் பள்ளியை விட்டு வெளியேறிய பிறகு மோசமான சகவாசத்தில் சிக்கி, மது மற்றும் புகைபிடிக்கும் பழக்கத்தை வளா்த்துக் கொண்டதாக அதிகாரி கூறினாா். அவரது தாயாா் ஒரு தேநீா் கடை நடத்துகிறாா், அவரது தந்தை ஒரு தொழிலாளி.
துப்பாக்கிச் சூடு தொடா்பாக பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவுகளின் கீழ் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
டப்ரியில் கொலை முயற்சி வழக்கு மற்றும் அலிப்பூரில் துப்பாக்கிச் சூடு மற்றும் மிரட்டி பணம் பறித்தல் வழக்கு ஆகியவற்றிலும் அந்த சிறுவன் தொடா்புடையவா் என்று போலீசாா் தெரிவித்தனா்.
