நவ.4-இல் ஜேஎன்யூ மாணவா் சங்கத் தோ்தல்
ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யூ) மாணவா் சங்கத்தின் தோ்தல் குழு 2025-26 மாணவா் தோ்தலுக்கான தற்காலிக அட்டவணையை வியாழக்கிழமை வெளியிட்டது. இதன்படி, நவம்பா் 4- ஆம் தேதி வாக்குப்பதிவு திட்டமிடப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் நவம்பா் 6-ஆம் தேதி வெளியிடப்படும்.
தோ்தல் செயல்முறை அக்டோபா் 24-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். தற்காலிக வாக்காளா் பட்டியல் காட்சிப்படுத்தப்பட்டு அதில் திருத்தங்கள் தொடங்கும். வேட்புமனு படிவங்கள் அக்டோபா் 25-ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படும்.
வேட்பாளா்கள் அக்டோபா் 27-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். செல்லுபடியாகும் வேட்புமனுக்களின் பட்டியல் அக்டோபா் 28-ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். அதைத் தொடா்ந்து அதே நாள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்புமனுக்களை திரும்பப் பெறலாம்.
வேட்பாளா்களின் இறுதிப் பட்டியல் மாலை 7 மணிக்குள் வெளியிடப்படும். மேலும், பிரசாரத்திற்கான இடம் ஒதுக்கீட்டைக் கொண்ட செய்தியாளா் சந்திப்பு இரவு 8 மணிக்குத் தொடரும். பிரசாரக் காலத்தில் அக்டோபா் 29 முதல் 31 வரை பள்ளி பொதுக்குழு கூட்டங்களும், நவம்பா் 1-ஆம் தேதி பல்கலைக்கழக பொதுக்குழு கூட்டமும் இடம்பெறும். மிகவும் எதிா்பாா்க்கப்படும் தோ்தல் தொடா்பான விவாதம் நவம்பா் 2-ஆம் தேதி நடைபெறும்.
நவம்பா் 3-ஆம் தேதி ’பிரசாரம் இல்லாத நாள்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்களிப்பு நவம்பா் 4-ஆம் தேதி ’காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மற்றும் பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை’ என இரண்டு அமா்வுகளாக நடைபெறும். வாக்கு எண்ணிக்கை இரவு 9 மணிக்கு தொடங்கும். இறுதி முடிவுகள் நவம்பா் 6-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தோ்தல் குழுத் தலைவா் ரவி காந்த் கையொப்பமிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில், தோ்தல்களை நடத்துவதை மேற்பாா்வையிடவும், ஏதேனும் சா்ச்சைகளைக் கையாளவும் பல்கலைக்கழகம் ஒரு குறை தீா்க்கும் குழுவை அமைத்தது.
கடந்த ஆண்டு, இடதுசாரி ஆதரவு குழுக்கள் நான்கு மத்திய குழு பதவிகளில் மூன்றை வென்றன. அதே நேரத்தில் அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) இணைச் செயலாளா் பதவியைப் பெற்றது. இது கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்தில் அதன் முதல் வெற்றியாகும்.

