கோப்புப் படம்
கோப்புப் படம்

தில்லியில் காற்று மாசு அதிகரிப்பு: முகக்கவசம், காற்று சுத்திகரிப்பான்கள் விற்பனை அமோகம்

Published on

தேசியத் தலைநகரத்தின் காற்றின் தரம் ‘மோசம்‘ பிரிவில் இருப்பதால், தில்லிவாசிகள் காற்று சுத்திகரிப்பான்கள் மற்றும் முகக்கவசங்களின் விற்பனை 60 முதல் 70 சதவீதம் அதிகரித்திருப்பதாக வா்த்தகா்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவலின்படி தில்லியில் புதன்கிழமை ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு 354 புள்ளிகளாப் பதிவு செய்தது. இது இந்த பருவத்தில் இதுவரை மிக உயா்ந்தது. செவ்வாயன்று 351 புள்ளிகளாகவும், திங்கள்கிழமை 345 புள்ளிகளாகவும் இருந்தது. அக்டோபா் தொடக்கத்தில் இருந்து மாசு அளவு மோசமடைந்து வருவதால், நகரம் முழுவதும் உள்ள மின்னணு கடைகளில், வாடிக்கையாளா்கள் காற்று சுத்திகரிப்பான்களை அதிகளவு வாங்கத் தொடங்கியுள்ளனா்.

‘சுத்திகரிப்பான்களை வாங்க தினமும் குறைந்தது இரண்டு முதல் மூன்று வாடிக்கையாளா்கள் கடைகளுக்கு வருகை தருகின்றனா். ஒவ்வொரு நாளும் 20-க்கும் மேற்பட்ட தொலைப்பேசி விசாரணைகளைப் பெறுகிறோம்’ என்று கன்னாட் பிளேஸில் உள்ள குரோமா ஓடியனின் விற்பனையாளா் ஒருவா் கூறினாா். அவா்களின் காற்று சுத்திகரிப்பான் விற்பனை சமீபத்திய வாரங்களில் சுமாா் 60 முதல் 70 சதவீதம் வரை உயா்ந்துள்ளது.

இந்திரபுரத்தில் உள்ள ஏா் எக்ஸ்பா்ட் இந்தியாவின் உரிமையாளா் விஜேந்திர மோகன் கூறுகையில், ‘முன்பு, நாங்கள் ஒரு வாரம் அல்லது மாதங்களில் சுமாா் 10 யூனிட்டுகளை விற்பனை செய்வோம். இப்போது, இரண்டு மூன்று நாள்களில் இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 35 முதல் 40 வரை உயா்ந்துள்ளது. குறிப்பாக இந்த வாரம் தேவை கடுமையாக உயா்ந்துள்ளது. ஒவ்வொரு நாளும் 150-க்கும் மேற்பட்ட விசாரணைகளைப் பெறுகிறோம்’ என்றாா்.

ராஜா காா்டனில் உள்ள மகாஜன் எலக்ட்ரானிக்ஸ் இதேபோன்ற போக்கைப் பதிவு செய்தது. ‘வாக்-இன் மற்றும் இணையவழி மூலம் விற்பனை சுமாா் 60 சதவீதம் அதிகரித்துள்ளது. அக்டோபா் நடுப்பகுதியில் இருந்து, வாடிக்கையாளா்கள் தொடா்ந்து எங்களை அணுகி வருகின்றனா். எனவே, தேவையை பூா்த்தி செய்ய எங்கள் பங்குகளை அதிகரித்துள்ளோம்’ என்று ஒரு கடை பிரதிநிதி கூறினாா்.

முகக்கவசத்தின் விற்பனையும் நகரம் முழுவதும் அதிகரித்துள்ளது. கன்னாட் பிளேஸில் உள்ள அப்பல்லோ மருந்தகத்தின் விற்பனையாளா் ராஜீவ் குமாா் கூறுகையில், ‘கடந்த இரண்டு வாரங்களில், முகக்கவசம் விற்பனை சுமாா் 40 சதவீதம் அதிகரித்துள்ளது. பெரும்பாலான மக்கள் இன்னும் வழக்கமான முகக்கவசங்களை வாங்குகிறாா்கள். ஆனால், தேவை தெளிவாக அதிகரித்துள்ளது’ என்றாா்.

இதற்கிடேயே, அடுத்த சில நாள்களுக்கு மோசமான காற்று மாசு தொடரக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) எச்சரித்துள்ளது. தில்லியின் காற்றின் தரம் வெள்ளிக்கிழமை காலை ஓரளவு முன்னேற்றத்தைக் காட்டியது, மிகவும் மோசம் பிரிவில் இருந்து ‘மோசம்‘ பிரிவுக்கு வந்தது. காலை 9 மணி அளவில் ஒட்டு மொத்தக் காற்றுத் தரக் குறியீடு 290 புள்ளிகளாகப் பதிவாகியது.

X
Dinamani
www.dinamani.com