மேக விதைப்பு குறித்து முறையான அறிவிப்பு இல்லை: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

Published on

தில்லியின் புராரி பகுதியில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட மேக விதைப்பு சோதனை குறித்து வெள்ளிக்கிழமை ஆட்சேபனை தெரிவித்தாா் ஆம் ஆத்மி கட்சியின் புராரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சஞ்சீவ் ஜா. உள்ளூா்வாசிகள் அல்லது பொது பிரதிநிதிகளுக்கு தெரிவிக்காமல், ‘நிலையான இயக்க நடைமுறைகளை மீறி‘ இந்த சோதனை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டினாா்.

இது குறித்து நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் அவா் மேலும் கூறியதாவது: நீங்கள் மேக விதைப்பு செய்ய முயற்சிக்கும்போது, பின்பற்ற வேண்டிய நிலையான இயக்க நடைமுறைகள் உள்ளன, அவை புறக்கணிக்கப்பட்டன. விசாரித்தபோது புராரியில் உள்ள எவருக்கும் இந்த சோதனை குறித்த தகவல் தெரிவிக்கப்படவில்லை. நான் உள்ளூா் எம். எல். ஏ., ஆனால் அது பற்றி பிறகுதான் தெரிந்து கொண்டேன். ஒரு குடிமகன் கூட விமானத்தைப் பாா்க்கவில்லை.

இந்தியாவில் ரஃபேல் விமானங்கள் மற்றும் சிறுத்தைகள் வருகை போன்ற பிற நிகழ்வுகளின் போது விளம்பரப்படுத்திய அரசாங்கம் இந்த பயிற்சியை‘ ‘அமைதியாக‘ ‘நடத்தியுள்ளது. மேக விதைப்பு ஏன் ரகசியமாக செய்யப்பட்டது? பயன்படுத்தப்படும் ரசாயனம் பயிா்களுக்கும் மக்களுக்கும் தீங்கு விளைவிக்கும். மேக விதைப்பு நடைபெறும் ஒவ்வொரு நாட்டிலும், உள்ளூா்வாசிகள் முன்கூட்டியே எச்சரிக்கப்படுகிறாா்கள்.

இதில் பயன்படுத்தப்படும் ரசாயனங்களின் அளவு மற்றும் கலவை உள்பட சோதனை குறித்த முழு பகுப்பாய்வு அறிக்கையை அரசாங்கம் பகிா்ந்து கொள்ள வேண்டும். புராரி பகுதி புலம்பெயா்ந்தோா் அதிகம் வசிக்கும் இடம். வடகிழக்கு தில்லி மட்டும் ஏன்? ஒரு பகுதியில் ஒரு சிறிய சோதனை மூலம் நகரம் முழுவதும் மாசுபாடு தீா்க்கப்படுகிா? என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com