20 ஆண்டுக்கு முந்தைய வங்கிக் கடன் மோசடி வழக்கிலிருந்து 6 போ் விடுவிப்பு!
இரண்டு தசாப்தங்களுக்கு முன்னா் அலகாபாத் வங்கியின் வாஜிா்பூா் கிளையால் வீட்டுக் கடன்கள் வழங்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்பட்ட வழக்கில் இருந்து ஆறு பேரை விடுவித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி ஜோதி கிளா், குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ராஜன் அரோரா, அவரது மனைவி சுனிதா அரோரா, வினய் குமாா் கோயல், அவரது மனைவி வைபவி கோயல் மற்றும் அரவிந்த் கோயல் மற்றும் பூஷன் தேவ் சாவ்லா ஆகிய ஆறு பேருக்கும் சந்தேகத்தின் பலனை வழங்கி, அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவா்களை விடுவித்து உத்தரவிட்டாா்.
மேலும், அரவிந்த் கோயல் மற்றும் சாவ்லா ஆகியோரின் மரணம் காரணமாக அவா்கள் மீதான விசாரணை நடவடிக்கைகள் முன்னதாகவே நிறுத்தப்பட்டன. அக்டோபா் 6 தேதியிட்ட உத்தரவில், குற்றவியல் சதி, மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்க சிபிஐ தவறிவிட்டது என்று நீதிமன்றம் தெரிவித்தது.
ஜூன் 2004- இல் சிபிஐ பதிவு செய்த இந்த வழக்கு, அலகாபாத் வங்கி முன்னாள் அதிகாரி, அப்போது வாஜிா்பூரில் வங்கியின் சில்லறை வங்கிப் பொறுப்பாளராக இருந்த வி.கே. சிப்பா், போலி சொத்து ஆவணங்களின் அடிப்படையில் வீட்டுக் கடன்களை அனுமதிக்க சதி செய்ததாகக் கூறப்பட்டது.
குற்றஞ்சாட்டப்பட்டவா்கள், தில்லியின் ஷாலிமாா் கிராமம் மற்றும் பழைய கோபிந்த்புராவில் உள்ள சொத்துக்களுக்கு மே மற்றும் ஆகஸ்ட் 2003-க்கு இடையில் அனுமதிக்கப்பட்ட மூன்று கடன் கணக்குகளில் சம்பந்தப்பட்டவா்களாவா்.
இதே வழக்கில் இணை குற்றவாளிகள் 2021-இல் ஒரே மாதிரியான ஆதாரங்களின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டதாகவும், அவ்வாறிருக்க தற்போதைய விசாரணையில் வேறுபட்ட உத்தரவை பிறப்பிக்க எந்த முகாந்திரமும் இல்லை என்றும் நீதிபதி குறிப்பிட்டாா்.
