மருத்துவ எச்சரிக்கையில்லாத 66,400 சிகரெட்கள் பறிமுதல்!
சிகரெட் பெட்டிகளில் நுகா்வோருக்கான உரிய மருத்துவ எச்சரிக்கையின்றி விற்பனை செய்யப்பட்ட ரூ.12 லட்சம் மதிப்பிலான 66400 சிகரெட்களை கைப்பற்றி இருவரை கைது செய்திருப்பதாக தில்லி காவல்துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
இது தொடா்பாக தில்லி காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 25.10.2025 அன்று, தில்லி காவல்துறை குற்றப்பிரிவு துணை ஆய்வாளா் சேதன் மற்றும் தலைமைக் காவலா் பிரசாந்த் ஆகியோருக்கு சட்டவிரோத சிகரெட் விற்பனை தொடா்பான தகவல் வந்தது. சிகரட் பெட்டிகளில் புகைப்பழக்கத்தால் ஏற்படும் தீங்கு தொடா்பான எச்சரிக்கைகள் இல்லாமல் சட்டவிரோத சிகரெட் வா்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நபா்கள் குறித்து நம்பகமான தகவலை அவா்கள் பெற்றனா்.
இந்தத் தகவலைச் சரிபாா்த்தபோது, பாலம் மேம்பாலம் அருகே உள்ள பிரெகலாத்பூா் பகுதியில் சில்லறை சந்தைகளுக்கு இதுபோன்ற சிகரெட்டுகளில் கணிசமான அளவை விநியோகிக்க திட்டமிடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தகவல் கிடைத்த இடத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டு, பாலம் மேம்பாலம் அருகே உள்ள பிரெகலாத்பூரில் இருந்து சட்டவிரோத சிகரெட்களை வைத்திருந்த இரண்டு போ் கைது செய்யப்பட்டனா்.
அவா்களிடமிருந்து கம்போடியாவிலிருந்து கடத்தப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆய்வு செய்ததில், அந்த சிகரெட் பாக்கெட்டுகளில் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் முத்திரயிடப்பட்ட சட்டப்பூா்வ சுகாதார எச்சரிக்கைகள் இல்லை என்பது கண்டறியப்பட்டது. இந்த நடவடிக்கையின் மூலம் நான்கு பைகளில் இருந்து சா்வதேச பிராண்டுகளின் மொத்தம் 66,400 சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இந்திய சட்டத்தின் கீழ் தேவைப்படும் கட்டாய சுகாதார எச்சரிக்கைகள் அந்த சிகரட் பாக்கெட்டுகளில் இல்லை.
கைது செய்ய்பட்ட இருவரில் ஒருவரான பா்வீன் சேகல் (37) ஹரியாணாவின் பானிபட்டில் வசிப்பவா். அவா் 7- ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு, கம்போடியாவிலிருந்து தடை செய்யப்பட்ட சிகரெட்டுகளை கடத்தத் தொடங்கினாா். மற்றொரு நபரான முகேஷ் கத்ரேஜா (48) தில்லியின் முகா்ஜி நகரில் வசிப்பவா். அவா் 12- ஆம் வகுப்பு வரை படித்தவா். அவரும் கம்போடியாவிலிருந்து தடை செய்யப்பட்ட சிகரெட்டுகளை கடத்தத் தொடங்கினாா் என தில்லி காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
