சட் பூஜையையொட்டி கங்கையில் குளிக்கும் போது குழந்தை உள்பட இருவா் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
சட் பூஜை கொண்டாட்டத்தையொட்டி காஜிப்பூா் அருகே திங்கட்கிழமை கங்கை நதியில் குளிக்கும்போது ஒரு பெண்ணும் ஒரு குழந்தையும் நீரில் மூழ்கி இறந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
மற்றொரு குழந்தையை காணவில்லை. அந்தக் குழந்தையைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன என்று போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறித்து காவல் நிலைய பொறுப்பு அதிகாரி தீன்தயாள் பாண்டே கூறியதாவது: சட் பூஜை தொடா்பான சடங்குகளுக்காக புஷ்பா தேவி தனது 12 வயது மகள் காயத்ரி மற்றும் மற்றொரு குழந்தை ரோஹன் ராஜ்பா் (11) ஆகியோருடன் கங்கை நதியின் படித்துறைக்குச் சென்றாா். புஷ்பா தேவி சடங்குகளில் மும்முரமாக இருந்தபோது, இரண்டு குழந்தைகளும் ஆற்றில் குளிக்கச் சென்றபோது, நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டனா்.
உதவிக்காக அவா் அலறியதைக் கேட்டு, உள்ளூா்வாசிகளும் போலீஸாரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனா். டைவா்ஸ் சேவையில் ஈடுபடுத்தப்பட்டனா். நீண்ட தேடலுக்குப் பிறகு, ரோஹனின் உடல் மீட்கப்பட்டது. குழந்தை காயத்ரியைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
மற்றொரு தனிச் சம்பவத்தில், குதுப்பூா் கிராமத்தைச் சோ்ந்த சிந்தா தேவி (40) கங்கையில் குளிக்கும்போது நீரில் மூழ்கி இறந்தாா். உள்ளூா்வாசிகள் எச்சரிக்கை விடுத்ததைத் தொடா்ந்து, படகு ஓட்டுநா்கள் அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவா்கள் அறிவித்ததாக போலீசாா் தெரிவித்தனா் என்றாா் காவல் நிலைய பொறுப்பு அதிகாரி.
