
திருமாலின் அவதாரங்கள் மூன்று வகையாகப் பிரித்துச் சொல்லப்படுகின்றன. அவை அவதாரம், ஆவேசம், அம்சம் என்பவையாகும். முழுமையான சக்தியினைக் கொண்டது "அவதாரம்' எனவும், பகுதி அளவில் தாற்காலிகமாகச் சிறிது காலம் சக்தியைப் பயன்படுத்தித் தான் எடுத்துக் கொண்ட பணி முடிந்தவுடன் சக்தியினின்று விலகி நிற்பது "ஆவேசம்' என்றும், விஷ்ணுவின் சக்தியின் ஒரு பகுதி ஓர் உருக்கொண்டு வெளிப்படுவது "அம்சம்' என்றும் பெயர் பெறும். அவ்வகையில் இந்த உலகினைக் காக்கும் பொருட்டு திருமால் எடுத்த அவதாரங்கள் பலவாயினும், சிறப்பித்துச் சொல்லப்படுவது தசாவதாரங்கள் என சொல்லப்படும் மத்ஸ்ய, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ண, கல்கி ஆகிய பத்தாகும். இறைவனின் தசாவதாரங்களை வடமொழி இலக்கியங்கள் மட்டுமில்லாமல் சங்க இலக்கியமான பரிபாடலும் குறிப்பிடக் காண்கிறோம். இதில் திருமாலின் வராக அவதாரம் தனித் தன்மை வாய்ந்தது. வராக அவதாரத்தை இரண்டாம் பரிபாடல், ""கேழல் திகழ்வரக் கோலமொரு பெயரிய ஊழி -ஒரு வினை உணர்த்தலின்'' என்று குறிப்பிடுகிறது. மேலும் ஸ்ரீ வராக அவதாரம் ஆழ்வார்கள் அனைவர்களாலும், வேதாந்த தேசிகராலும், ஸ்ரீ பராசர பட்டராலும் உயர்வாகப் போற்றித் துதிக்கப்பட்டுள்ளது. நாம் வாழும் இந்தக் காலப்பகுதியை ""சுவேத வராக கல்பம்'' என்று கூறுவார்கள். நாம் வாழும் இந்தப் பூமி, வராகப்பெருமானால் இரண்யாட்சன் என்ற அசுரனிடமிருந்து மீட்டு வரப்பட்டது. புராண வரலாறுப்படி, இந்த உலகில் உயிரினங்களைப் படைப்பதற்கு விரும்பிய பிரம்மன், பிரளய நீரில் மூழ்கியிருந்த பூமியை மீட்க ஸ்ரீமந் நாராயணனை தியானித்தார். எம்பெருமான் பிரம்மனது நாசித்துவாரத்திலிருந்து கட்டை விரல் அளவுள்ள ஒரு பன்றிக்குட்டியாக வெளிக்கிளம்பி மிகப் பெரிய மலை போன்ற "வராக' (பன்றி) உருக்கொண்டு, கடல் நீரைப் பிளந்து சென்று தன் பற்களால் பூமியை எடுக்க முயன்றார். அவ்வமயம் அசுரத் தலைவனான இரண்யாட்சன் அவரை எதிர்க்க, கணப்பொழுதில் வராகப் பெருமான் அவனை அழித்து வெற்றி முழக்கம் செய்தருளினார். பின் தன் கோரைப் பற்களின் நுனியில் பூமியை மேலே கொணர்ந்து நிலை நிறுத்தினார். அதோடு மட்டுமில்லாமல் திரும்பவும் பூமி நீரினில் மூழ்காது இருக்கும் ஒரு நிலையை ஏற்படுத்தினார். அவ்வகையிலே நாம் என்றென்றும் வாழ்வினில் நினைத்து வணங்கத்தக்கவர் ஸ்ரீ வராக மூர்த்தி. ஸ்ரீ வராகனின் புகழ் பாடாத புராணங்களே இல்லை எனச் சொல்லலாம். வராக புராணம், பூமியை மீட்டு வந்தபின் இவ்வுலகினை உய்விக்க விரும்பி பூமிப்பிராட்டியின் ஐயங்கள் அனைத்திற்கும் வராகப் பெருமான் விளக்கம் அளித்ததை மிக விரிவாக எடுத்துக் கூறுகின்றது. அதனை நமக்கும் வராகப் பெருமான் வழங்கிய அறிவுரைகளாக எடுத்துக் கொண்டு பின்பற்றலாம். உலக மாதாவான பார்வதி தேவி, சர்வேஸ்வரனான பரமேஸ்வரன் வாயிலாகவே ஸ்ரீ வராக மூர்த்தியின் புகழ் கேட்டு மகிழ்ந்தனள் என்பர். வரும் வராக ஜயந்தி புண்ணிய தினத்தன்று (ஏப்ரல் 23) அருகிலுள்ள திருமால் ஆலயங்களுக்குச் சென்று வராக மூர்த்தியை திருமகளுடன் சேவித்து, ஞானப்பிரான் என்று சொல்லப்படும் அந்த மூர்த்தியின் பரிபூரண அருளுக்குப் பாத்திரராவோமாக! பட உதவி : எம்.என். ஸ்ரீநிவாஸன்