ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயில்

பூலோக வைகுண்டம் என்றும், பெரிய கோயில் என்றும் போற்றப்படும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயில் கங்கையைக் காட்டிலும் புனிதமாகக் கருதப்படும் காவிரி நதிக்கரையில் அமைந்துள்ளது.  108 வைணவத்
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயில்

பூலோக வைகுண்டம் என்றும், பெரிய கோயில் என்றும் போற்றப்படும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயில் கங்கையைக் காட்டிலும் புனிதமாகக் கருதப்படும் காவிரி நதிக்கரையில் அமைந்துள்ளது.

 108 வைணவத் தலங்களில் முதன்மையாக விளங்கும் இத்திருக்கோயில் புகழை, பெருமையை, கீர்த்தியைப் பற்றி அனைத்து ஆழ்வார்களும் பாடியுள்ளார்கள்.

 திருச்சி நகரின் வடக்குப் பகுதியில் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 4 கி.மீ. தொலைவிலும், மத்திய பேருந்து நிலையத்திலிருந்தும் 10 கி.மீ. தொலைவிலும் ஸ்ரீரங்கம் கோயில் உள்ளது. ஸ்ரீரங்கத்திலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் ரயில் நிலையமும் உள்ளது.

 "ஆதி திருவெள்ளறை, அடுத்தது திருப்பைஞ்ஞீலி, சோதி திருவானைக்கா, சொல்லிக் கட்டியது திருவரங்கம்' என்ற தொன்மையான பழமொழியுடன் சிறப்புப் பெற்று விளங்கி வருவது அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயில்.

 ஸ்ரீரங்கம் கோயிலின் விமானம் பிரம்ம தேவனின் தவ நலத்தால் திருப்பாற் கடலிலின்று வெளிப்பட்டுத் தோன்றியதாகும். அதை பிரம்மதேவர் தேவருலகில் நெடுங்காலம் பூசித்து வந்தார். ஸ்ரீஅரங்கநாதருக்கு தினமும் பூஜை புரிந்து வரும்படி பிரம்மதேவர் சூரியனை நியமித்தார். பின்னர், சூரிய காலஸத்தில் தோன்றிய இட்சுவாகு அரசன், இந்த விமானத்தை தனது தலைநகராகிய அயோத்திக்கு வழிபடக் கொண்டுவந்தார்.

 இக்குலத்தில் தோன்றிய திருமாலின் அவதாரமாகிய ராமபிரான், தனது முடிசூட்டு விழாவைக் காணவந்த விபீஷணனுக்கு இந்த விமானத்தை அளித்தார். இதை அவர் மிகுந்த பக்தியுடன் இலங்கைக்கு கொண்டு சென்ற போது, காவிரியாற்றின் கரையை அடைந்த விபீஷணன் களைப்பின் காரணமாக விமானத்தை கீழே இறக்கி வைத்துவிட்டு இளைப்பாறினார்.

 பின்னர், அவர் மீண்டும் புறப்பட நினைத்த போது விமானத்தை எடுக்க முயன்றும் அந்த விமானம் வரவில்லை. அவரால் பெயர்த்து எடுக்க முடியாத அளவுக்கு அந்த விமானம் அங்கேயே அழுந்திப்பதிந்து நிலை கொண்டுவிட்டது.

 இதனால் கவலை கொண்டு கதறியழுத விபீஷணனுக்கு, அப்பகுதியை ஆண்டு வந்த சோழன் தர்மவர்மன் ஆறுதல் கூறி, காவிரிக் கரையிலேயே அரங்கநாதர் தங்கியிருக்க வேண்டும் என்ற தமது விருப்பத்தைத் தெரிவித்தார். மேலும், விபீஷணனை தேற்றும் பொருட்டு, "தென்திசை இலங்கை நோக்கி' பள்ளிக்கொண்டருள்வதாக உறுதிமொழிந்து, அந்த விமானத்தைச் சுற்றிக் கோயில் எழுப்பி வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்தார்.

 ஆனால், தர்மவர்ம சோழன் கட்டிய கோயில் காவிரி வெள்ளப் பெருக்கினால் அலையுண்டு மண்ணில் மறைந்தது. இந்த மன்னர் வழிவந்த கிள்ளிவளவன் என்னும் அரசன், ஒரு மர நிழலில் இளைப்பாறிக் கொண்டிருந்த போது, ஒரு கிளியானது "வைகுந்தத்திலுள்ள மகாவிஷ்ணுவின் கோயிலாகிய ஸ்ரீரங்கம் இருந்த இடம் இதுதான், அக்கோயிலை இப்போதும் காணலாம்' என்ற பொருள் தரும் புராணச் செய்யுள்களை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தது.

 கிளியின் சொற்களிலிலிருந்து உண்மையை உறுதிப்படுத்திக் கொள்ள முடியாத கிள்ளிவளவன், தனக்கு நிழல் தந்த மரத்தின் மேற்குத் திசையில் ஒரு கோயிலுக்கு அடிப்படையிட்டு, சுவர் எழுப்பினார்.

 அப்போது அவரது கனவில் மகாவிஷ்ணு தோன்றி, பழைய கோயில் மறைந்திருந்த சரியான இடத்தைக் காட்டி அருளியதாகவும், அதைத் தொடர்ந்து கண்டுப்பிடிக்கப்பட்ட கருவறையைச் சுற்றி கோயிலை அந்த மன்னர் கட்டியதாகவும் வரலாற்றுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

 இந்தத் திருக்கோயிலில்தான் ஆண்டாள், திருப்பாணாழ்வார், பீபி நாச்சியார் ஆகியோர் அரங்கனின் திருவடியை அடைந்தனர்.

 தில்லியை ஆண்ட பாதுஷா தளகர்த்தன் மாலிக்கபூர் தமிழகம் வரை தனது எல்லைக் கோடுகளைப் பரப்ப எண்ணி, தனது படைவீரர்களுடன் இத்திருக்கோயிலில் நுழைந்து, கருவூலத்தில் இருந்த ஆபரணங்கள், தங்க நாணயங்கள் மற்றும் அழகியமணவாளப் பெருமானை களவாடி சென்றார்.

 அதன் பின்னர், கரம்பனூர் அம்மையார் தெரிவித்த தகவலால், ஸ்ரீரங்கத்தில் இருந்து தில்லிக்குச் சென்ற ஆடுவோர், பாடுவோர் பாடலைப் பாடும் போது, அவர்களுக்கு காட்சி தந்து, பாடுவோர் கையில் ஐக்கியமாகும் ஸ்ரீநம்பெருமாளை, அவர்கள் திருமலையில் அடர்ந்த காட்டுப் பகுதியில் எழுந்தருளச் செய்துவிட்டு சென்று விடுவதாக கோயில் வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 திருமலையில் பல ஆண்டுகள் அஞ்ஞாத வாசம் செய்த அழகியமணவாளப் பெருமான், மீண்டும் ஸ்ரீரங்கத்துக்கு கொண்டு வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்படுகிறார். அப்போது நாட்டை ஆண்ட சோழன் இந்த கைங்கர்யத்தை நிறைவேற்றுகிறான்.

 அன்று அந்தச் சோழன் கனவில் பெருமாள் தோன்றி, மாலிக்கபூரின் மகள் சுரதாணியின் வரலாற்றைச் சொல்லி அவளுக்கு சன்னதி அமைக்குமாறு சொல்கிறார். அதன்படி, கருவறையின் வடகிழக்கு மூலையில் சுரதாணிக்கு ஒரு சன்னதி அமைத்து, சித்திரவடிவில் சுரதாணியின் வடிவத்தையும் தீட்டச் செய்கிறார்.

 அன்று முதல் பெருமாளுக்கு முஸ்லிம்கள் வழக்கப்படி காலையில் ரொட்டி, வெண்ணெய், இரவில் பால் முதலியன அமுது செய்யப்படுகின்றன. திருமஞ்சன காலத்தில் நம்பெருமாளுக்கு கைலி சாற்றும் வழக்கமும் இருந்து வருகிறது.

 இத் திருக்கோயிலில் உள்ள துலுக்க நாச்சியார் சன்னதியில் முஸ்லிம்களின் பழக்க வழக்கங்களுக்கேற்ப அகிலும், சந்தனமும் கலந்த தூப்புகை போடுவதும் இன்றும் நடைமுறையில் இருந்து வருகிறது.

 மேலும், திருமலையில் ஸ்ரீநம்பெருமாள் 40 ஆண்டுகாலம் எழுந்தருளி இருந்ததை நினைவு கூரும் வகையில், 2004 ஆம் ஆண்டு முதல் இத்திருக்கோயில் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றான கைசிக ஏகாதசி தினத்தன்று, திருமலை திருப்பதியிலிருந்து இத்திருக்கோயில் அரங்கநாதர். ஸ்ரீரங்கநாச்சியார், உடையவர் ராமானுஜர் ஆகியோருக்கு வஸ்திரம், குடை மரியாதை செய்யப்படுகிறது.

 இதற்கு நன்றி செலுத்தும் வகையில், ஸ்ரீரங்கம் கோயிலிலிருந்து ஆனிவார ஆஸ்தான தினத்தன்று திருமலை திருப்பதிக்கு வஸ்திரம் மரியாதை செலுத்தப்படுகிறது.

 கோயில் அமைப்பு: இத்திருக்கோயிலில் மூலவர் ஏழு திருச்சுற்றுகளுக்குள் கருவறையில் தென்திசை நோக்கி பள்ளி கொண்டுள்ளார். திருவுண்ணாழி திருச்சுற்று, ராஜமகேந்திரன் திருச்சுற்று, குலசேகரன் திருச்சுற்று, ஆலிநாடான் திருச்சுற்று, அகளங்கன் திருச்சுற்று, திருவிக்கிரமன் திருச்சுற்று, கலியுகராமன் திருச்சுற்று என ஏழு திருச்சுற்றுகளையும் உள்ளடக்கி 156 ஏக்கர் பரப்பளவில் அடையவளந்தான் திருச்சுற்று அமைந்துள்ளது.

 கோயில் தென்புறத்தில் 400 ஆண்டுகளுக்கு முன், நாயக்க மன்னர்களால் ஆரம்பிக்கப்பட்டு, முற்றுப்பெறாத தெற்கு ராஜகோபுரம் 13 நிலைகளுடனும், 13 கலசங்களுடன் 236 அடி உயரத்தில் 1987 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

 ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் தாயார் அருள்மிகு அரங்க நாச்சியாருக்கு, சுவாமிக்கு நடைபெறுவது போல எல்லா திருவிழாக்களும் நடத்தப்படும். கோடைத் திருவிழா, வசந்த உத்சவம், நவராத்திரி உத்சவம், ஊஞ்சல் உத்சவம் உள்ளிட்ட திருவிழாக்கள் முக்கியமானவை.

 ராமானுஜர் சன்னதி: சக்தி யுகத்தில் ஸ்ரீரங்கநாதருக்கு ஆதிசேஷனாகவும், திரேதா யுகத்தில் ஸ்ரீராமனுக்கு தம்பி இலக்குவனாகவும், துவாபர யுகத்தில் கிருஷ்ணனின் மூத்த சகோதரர் பலராமனாகவும், கலியுகத்தில் ஸ்ரீராமானுஜராகவும் அவதரித்தார்.

 உலகை திருத்தி பக்தி, சரணாகதி மார்க்கத்தைக் காட்டி உலகோர்களை உய்விக்க பரமபதத்தில் ஸ்ரீமன் நாராயணன் ஆதிசேஷனை அழைத்து "200 ஆண்டுகள் பூலோகத்தில் வாழ்ந்து மேற்கூறியபடி செய்து வாரும்' என்று ஆணையிட்டார். அதனால்தான் அவர் ராமானுஜராக அவதாரம் செய்தார்.

 சுமார் 120 ஆண்டுகள் வாழ்ந்த ராமானுஜர், தன்னுடைய திருமேனியை சன்னதி பிரகாரத்தில் அகளங்கன் திருச்சுற்றில் உள்ள தன்னுடைய வசதி மண்டபத்தில் வைத்து இறுதி கைங்கர்யங்கள் செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டபடி நடந்தது.

 அதுவே தற்போது உடையவர் சன்னதியாக உள்ளது. ராமானுஜர் திருமேனியைப் பள்ளிப்படுத்திய பிறகு தானாகவே திருமேனி தோன்றியுள்ளது. அதுவே தற்போது ராமானுஜர் சன்னதி கருவறையாக உள்ளது. இந்தச் சன்னதி மூலவருக்கு திருமஞ்சனம் கிடையாது. அதற்குப் பதிலாக குங்குமப்பூவும், பச்சைகற்பூரமும் கலந்து திருமேனியில் ஆண்டில் ஐப்பசி மாதமும், சித்திரை மாதமும் சாற்றப்படும். இவ்வாறு எவ்வித ரசாயனக் கலப்பும் இன்றி இயற்கையான முறையில் குங்குமப்பூ மற்றும் பச்சைக்கற்பூரம் கொண்டு உடலை அழியாமல், சிதையாமல் இக்கோயிலில் பாதுகாக்கப்படுகிறது.

 சக்கரத்தாழ்வார் சன்னதி: இந்தச் சன்னதியில் உள்ள பெருமாள் சுதர்சன ஆழ்வார் என்றழைக்கப்படுவார். எட்டுத் திருக்கைகள், சங்கு, சக்கரம் மற்றும் அங்குசங்குகளுடன் காட்சியளிக்கிறார். இங்கு மூலவர் பதினாறு திருக்கரங்களுடன் உள்ளார். மூலவராகிய சக்கரத்தாழ்வாரின் பின்புறம் யோக நரசிம்மனின் திருவுருவத்தைக் காணலாம். சனிக்கிழமை தவிர, மற்ற நாள்களில் சக்கரத்தாழ்வாருக்கு திருமஞ்சனம் நடைபெறும்.

  கருடாழ்வார் சன்னதி: ஸ்ரீரங்கத்தில் திருமங்கை மன்னன் திருச்சுற்று அல்லது ஆலிநாடன் திருச்சுற்று எனப் பெயர் பெற்ற நான்காவது திருச்சுற்றில், 14 அடி உயரத்தில் கருடாழ்வார் உள்ளார். கருவறைக்கு நேர் எதிரில் அமர்ந்திருக்கும் திருக்கோலத்தில் பெருமாளுக்கு அஞ்சலி செலுத்தியவாறு உள்ளார். பிரம்மா ஸ்ரீரங்கநாதனை எழுந்தருளச் செய்து வரச் சொல்லி கருடனிடம் கூறியதாகவும், அப்போது கருடனைக் கண்ட பெருமாள் "இங்கேயே இரு' எனச் சொன்னதன் பேரில் அவ்வெம்பெருமாள் மறுபடியும் உத்தரவு தருகிற வரை இப்படி கருடாழ்வார் அமர்ந்திருப்பதாகவும் கூறுவர்.

 ஸ்தல விருட்சம்: இத்திருக்கோயில் ஸ்தல விருட்சமாக புன்னைமரமும் அமைந்துள்ளது. இந்த மரம் சந்திரபுஷ்கரணி அருகிலேயே அமைந்துள்ளது.

 ஸ்தல தீர்த்தம்:  இத்திருக்கோயில் உள்ள தீர்த்தத்துக்கு சந்திர புஷ்கரணி என்று பெயர். இந்தத் தீர்த்தத்தைச் சுற்றி வகுள தீர்த்தம், சம்பு தீர்த்தம், அசுவ தீர்த்தம், பலாச தீர்த்தம், புன்னாக தீர்த்தம், பில்வ தீர்த்தம், கதம்ப தீர்த்தம், ஆடம்பர தீர்த்தம் என எட்டுத் தீர்த்தங்கள் விளங்குகின்றன. இது மட்டுமல்லாமல், தென்திருக்காவிரி, வடத் திருக்காவிரியும் உள்ளது.

 இந்த சந்திர புஷ்கரணி தீர்த்தத்தில்தான் வருடம் முழுவதும் நடைபெறும் உத்சவங்களில் ஸ்ரீநம்பெருமாள் எழுந்தருளி, அவருக்கு தீர்த்தவாரி நடைபெறும். பரமபதவாசலுக்கும், ஸ்ரீகோதண்டராமன் சன்னதிக்கும் இடையே இந்த சந்திரபுஷ்கரணியும், ஸ்தல விருட்சமான புன்னை மரமும் அமைந்துள்ளன.

  திருவிழாக்கள்: அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் 12 மாதங்களிலும் திருவிழாக்கள் நடைபெறும். இவற்றில் வைகுண்ட ஏகாதசி, பங்குனி, சித்திரைத் தேரோட்டங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.

 இதிலும், வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல் பத்து, இராப்பத்து என 21 நாள்கள் நடைபெறும். இத் திருவிழாவின் முக்கிய நிகழ்வு பரமபதவாசல் திறப்பாகும். இத்திருவிழாவின் போதுதான் இந்த வாசல் 10 நாள்களுக்கு திறந்திருக்கும்.

 சித்திரையில் கோடைத் திருவிழா, விருப்பன் திருநாள், வைகாசியில் விசாக உத்சவம் (தொடர்ந்து ஸ்ரீரங்கநாச்சியாருக்கும் கோடைத் திருவிழா, வசந்த உத்சவம்), ஆடி 18 - ல் அம்மாமண்டபத்தில் தங்கப் பல்லக்கில் எழுந்தருளி காவிரித் தாய்க்குப் பூஜை செய்தல், புரட்டாசியில் நவராத்திரி உத்சவம், ஐப்பசியில் ஊஞ்சல் உத்சவம், கார்த்திகை, மார்கழி மாதங்களில் வைகுண்ட ஏகாதசி திருவிழா, தை மாதத்தில் பூபதித் திருநாள் என்றழைக்கப்படும் தேரோட்டம், தெப்பத் திருவிழா, பங்குனியில் ஆதி பிரமோத்சவம் என எல்லா மாதங்களிலும் திருவிழாக்கள் தொடர்ந்து நடைபெறும்.

 விசுவரூப தரிசனம்: இத்திருக்கோயில் யானை வடத் திருக்காவேரியிலிருந்து தீர்த்தம் கொண்டு வந்து கருவறை நோக்கியும், கோயில் காராம் பசு பின்புறம் திரும்பியும் நிற்கும் போது திரை விலகி பெருமாள் காட்சியளிக்கும் விசுவரூப தரிசனம் மிகவும் கண்கொள்ளாக் காட்சியாகும்.

  சேவை நேரம்: பெருமாள் சன்னதியில் சேவை நேரம் (திருவிழா இல்லாத காலங்களில்): விசுவரூபம் -காலை 6.15, இலவச சேவை காலை 6.15 மணி முதல் காலை 7.30 வரை, பூஜை காலம் காலை 7.30 முதல் காலை 8.45 மணி வரை, இலவச சேவை காலை 8.45 மணி முதல் பகல் 1 மணி வரை, பூஜை காலம் பகல் 1 மணி முதல் பகல் 2 மணி வரை, இலவச சேவை பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை, பூஜை காலம் மாலை 6 மணி முதல் மாலை 6.45 மணி வரை, இலவச சேவை மாலை 6.45 மணி முதல் இரவு 9 மணி வரை.

 ஸ்ரீதாயார் சன்னதியில் சேவை நேரம் (திருவிழா இல்லாத காலங்களில்): விசுவ ரூபம் கட்டண சேவை காலை 6.30 மணி முதல் காலை 7.15 மணி வரை, இலவச சேவை காலை 7.15 மணி முதல் காலை 8 மணி வரை, பூஜை காலம் காலை 8 மணி முதல் காலை 9 மணி வரை, கட்டண சேவை காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை, இலவச சேவை பகல் 12 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை, பூஜை காலம் பிற்பகல் 1 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை, இலவச சேவை பிற்பகல் 3 மணி முதல் பிற்பகல் 3.45 மணி வரை, கட்டண சேவை பிற்பகல் 3.45 மணி முதல் மாலை 6 மணி வரை, பூஜை காலம் மாலை 6 மணி முதல் மாலை 6.45 மணி வரை, கட்டண சேவை மாலை 6.45 மணி முதல் இரவு 8 மணி வரை, இலவச சேவை இரவு 8 மணி முதல் இரவு 9 மணி வரை.

 திருவிழா நாள்களில் பெருமாள் சன்னதி, தாயார் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதிகளின் பூஜை நேரங்கள் மாறுபடும். இக்கோயிலில் பெருமாள், தாயார், சக்கரத்தாழ்வார் சன்னதிகளில் தினமும் நடைபெறும் பூஜைகளில், பக்தர்கள் அவரவர் விரும்பும் நாள்களில் ஒவ்வொரு சன்னதிக்கும் ஒவ்வொரு கால பூஜைக்கும் தனியே திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

  ஆராதனை கட்டளை விவரம்: ஸ்ரீஅரங்கநாதர் சன்னதி, ஸ்ரீதாயார் சன்னதி, ஸ்ரீசக்கரத்தாழ்வார் சன்னதி என்ற அடிப்படையில் கட்டண விவரம்;

 திருவாராதனம் ரூ. 1000, ரூ. 500, ரூ. 100, பொங்கல் -ரூ. 6000, ரூ. 1500, ரூ. 1300, உச்சிக்காலம் -ரூ. 4000, ரூ. 1000, ரூ. 500, சீராண்ணம் -ரூ. 5000, ரூ. 2,500, ரூ.600, செலசம்பா -ரூ. 2000, ரூ. 500, ரூ. 500, அரவணை- ரூ. 2000, ரூ. 1500.

 வைரமுடி சேவை ரூ.2000, சக்கரத்தாழ்வார் திருமஞ்சனம் ரூ. 450, ஹனுமார் திருமஞ்சனம் ரூ. 375, சிங்கர் திருமஞ்சனம் ரூ. 700, தன்வந்தரி திருமஞ்சனம் ரூ. 875.

 நித்திய ஆராதனைக் கட்டளைத் திட்டத்தில் பங்கு பெற விரும்பும் பக்தர்கள், விண்ணப்பத்தை நிறைவு செய்து முதலீடு செய்ய வேண்டிய தொகையை திருக்கோயில் அலுவலகத்தில் நேரிலோ அல்லது வங்கி வரைவோலையாகவோ அல்லது காசோலையாகவோ செலுத்தலாம்.

வங்கி வரைவோலை அல்லது காசோலை அனுப்ப விரும்புவர்கள், ""இணை ஆணையர். செயல் அலுவலர், அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சி 620006'' என்ற பெயருக்கு நித்திய ஆராதனை கட்டளை என்று கோடிட்டு அனுப்ப வேண்டும்.

பேருந்து, ரயில் வசதிகள் : திருச்சி மத்திய பஸ் நிலையத்திலிருந்தும், சத்திரம் பஸ் நிலையத்திலிருந்தும் அதிகளவில் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு பஸ்கள் திருவானைக்கா, அம்மாமண்டபம் வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. இதுபோல, சென்னையிலிருந்தும், பிற மாவட்டங்களிலிருந்தும் வந்து செல்லும் பெரும்பாலான ரயில்கள் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். விமான நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கத்துக்கு பேருந்து வசதியும் உண்டு.

 ரயில் நிலையத்திலிருந்து ஆட்டோ வசதியும் உண்டு. ஸ்ரீரங்கத்தின் பல்வேறு பகுதிகளில் தங்கும் விடுதிகள் உள்ளன. குறைந்தது ரூ. 400 - க்கும் மேல்தான் கட்டணம் வசூலிக்கப்படும். பல்வேறு மடங்களும் உள்ளன. இங்கு குறைந்த கட்டணத்தில் தங்கிக் கொள்ளலாம்.

 இக்கோயிலுக்கு அருகில் திருவானைக்கா அகிலாண்டேசுவரி திருக்கோயில், உத்தமர் கோயில், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில், திருப்பட்டூர் பிரம்மபுரீசுவரர் திருக்கோயில், அன்பில் மாரியம்மன் திருக்கோயில், திருவெள்ளறை ஸ்ரீபுண்டரீகாக்ஷ பெருமாள் கோயில் போன்ற கோயில்கள் உள்ளன.

 இக் கோயிலில் இ. பூஜா வசதியும் உள்ளது.

Email : info@srirangam.org Website: www.srirangam.org

 திருக்கோயில் அலுவலகத் தொலைபேசி எண் 0431 - 2432246, பேக்ஸ் - 0431 - 2436666.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com