ஸ்ரீலட்சுமி நாராயணி பொற்கோயில்

வேலூரில் இருந்து அணைக்கட்டு செல்லும் வழியில் 12 கி.மீ. தூரத்தில் திருமலைக்கோடி எனும் ஸ்ரீபுரத்தில் பொற்கோயில் அமைந்துள்ளது. ஸ்ரீ நாராயணி சக்தி பீடம் சார்பில் ஸ்ரீசக்தி அம்மா அவர்களால் நிர்மாணிக்கப்பட்

வேலூரில் இருந்து அணைக்கட்டு செல்லும் வழியில் 12 கி.மீ. தூரத்தில் திருமலைக்கோடி எனும் ஸ்ரீபுரத்தில் பொற்கோயில் அமைந்துள்ளது. ஸ்ரீ நாராயணி சக்தி பீடம் சார்பில் ஸ்ரீசக்தி அம்மா அவர்களால் நிர்மாணிக்கப்பட்ட இக்கோயிலைக் காண தினந்தோறும் ஆயிரக்கணக்காக பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் வருகின்றனர்.

தல வரலாறு: வேலூரைச் சேர்ந்த நந்தகோபால் - ஜோதியம்மாள் தம்பதியின் 2-வது மகனாக 1976-ம் ஆண்டு ஜனவரி 3-ம் தேதி பிறந்தவர் சதீஷ், 1992-ம் ஆண்டு மே மாதம் 8-ம் தேதி தனது 16-வது வயதில், திருமலைக்கோடி கிராமம் சென்றார். அங்கு புற்றுக்கு பூஜை நடத்திய அவர், சக்தி அம்மா என்று அழைக்கப்பட்டார்.

1993-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி நடந்த வழிபாட்டின்போது, 7 கன்னிப்பெண்கள் முன் வைக்கப்பட்ட 7 புனித குடங்களுக்கு வழிபாடு செய்தார் சக்தி அம்மா. அப்போது, 7-வது கன்னிப்பெண்ணின் குடத்துக்கு பூஜைகள் செய்து மஞ்சள் நீரைக் கொட்டியபோது, பூமியிலிருந்து லிங்க வடிவில் சுயம்பு மேலெழுந்தது. அந்த இடத்தில் ஸ்ரீநாராயணி கோயிலை எழுப்பி வழிபாடு செய்தார். இக்கோயிலுக்கு 2000-ம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதி குடமுழுக்கு நடந்தது.

பின்னர், அக்கோயிலுக்கு அருகிலேயே லட்சுமி, சரஸ்வதி, துர்கை ஆகிய முப்பெரும் தேவியரின் சங்கமமான, ஸ்ரீலட்சுமி நாராயணியை உருவாக்கி, பிரதிஷ்டை செய்தார். இக்கோயிலுக்கு 2001 ஜனவரி 29-ம் தேதி குடமுழுக்கு நடந்தது. பின்னர் கோயில் முழுவதும் தங்கத் தகடுகளால் வேயும் பணி 2007-ம் ஆண்டு முடிந்தது.

தலத்தின் சிறப்புகள்:

ஸ்ரீலட்சுமி நாராயணிக்கு 55,000 சதுர அடியில் அழகிய திருக்கோயில் அமைக்கப்பட்டு கோயில் முழுவதும் 1,500 கிலோ தங்கத் தகடுகளால் வேயப்பட்டுள்ளது. கோயிலின் மொத்த பரப்பளவு 100 ஏக்கர். ஸ்ரீசக்கர வடிவில் ஆலயத்தை சுற்றி பிரகாரம் அமைந்துள்ளது. 16 கால்களைக் கொண்ட ஸ்ரீசகஸ்ரதீப மண்டபம், 45 அடி உயரம் கொண்ட ஸ்ரீமகள் நீர்வீழ்ச்சி, திறந்தவெளி கலையரங்கம், புல்வெளி, நீரூற்றுகள், பூங்காக்கள் உள்ளன. ஆலயத்தில் உலகின் மிகப் பெரிய வீணை, 10,008 திருவிளக்கு ஆகியன இடம் பெற்றுள்ளன. ஆசியாவிலேயே மிகப் பெரியளவில் அமைந்துள்ள கோயில் வேலூர் பொற்கோயில்.

தலவிருட்சம்: வன்னிமரம்.

வழிபட்டோர்: குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம், முன்னாள் பிரதமர் தேவெகௌட, ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, பாஜக முன்னாள் தலைவர் வெங்கையா நாயுடு, ராஜீவ் காந்தி மகள் பிரியங்கா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் வருகை தந்துள்ளனர்.

வழிபாட்டு முறைகள்: சைவமும்- வைஷ்ணவமும் கலந்த வழிபாட்டு முறை.

தினசரி சிறப்பு பூஜைகள்: ஸ்ரீசக்தி அம்மா தினசரி 9 மணி நேரம் பூஜைகள் செய்து, பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார். இதுதவிர, ஆகம முறைப்படி காலை 5 மணி முதல் அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெறும். காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அனுமதி இலவசம்.

அலங்காரம்:

அமாவாசையன்று முத்தங்கி அலங்காரம், பௌர்மணியன்று தங்கக் கவச அலங்காரம், ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமையன்று பெருமாள் நாமம் அலங்காரம் நடைபெறும்.

திங்கள்கிழமை - ஸ்ரீநாராயணி.

செவ்வாய்க்கிழமை - கருமாரி.

புதன்கிழமை - நாராயணி

வியாழக்கிழமை - சரஸ்வதி

வெள்ளிக்கிழமை - மகாலட்சுமி

சனிக்கிழமை - நாராயணி

ஞாயிற்றுக்கிழமை - துர்க்கையம்மன்

திருவிழாக்கள்: பெüர்ணமி தின பூஜைகள், புத்தாண்டு தின விழா, ஜனவரி 3-ல் ஸ்ரீசக்தி அம்மா பிறந்தநாள் விழா, பிப்ரவரியில் சரஸ்வதி யாகம், ஏப்ரல் தமிழ்ப் புத்தாண்டு விழா, மே 8ல் சக்தி அம்மா ஞானம் பெற்ற தினம், ஆகஸ்ட் வரலட்சுமி பூஜை, ஆகஸ்ட் 24ல் ஸ்ரீபுரம் ஆண்டு விழா, செப்டம்பர் மற்றும் அக்டோபரில் நவராத்திரி விழா, அக்டோபர் மற்றும் நவம்பரில் தீபாவளி சிறப்பு வழிபாடு.

அருகில் உள்ள கோயில்கள்: 10 கி.மீ. தொலைவில் வேலூர் கோட்டைக்குள் ஜலகண்டேசுவரர் கோயில் உள்ளது. 13 கி.மீ. தொலைவில் சேண்பாக்கம் விநாயகர் கோயில் உள்ளது.

போக்குவரத்து வசதி: காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து 15 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது. ரயில் நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையத்துக்கும், அங்கிருந்து ஸ்ரீபுரத்துக்கும் பேருந்து, ஆட்டோக்கள் இயங்குகின்றன. புதிய பஸ் நிலையம் பகுதியில் இருந்து 13 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.



தங்கும் விடுதி:
ஸ்ரீபுரத்தில் நாராயணி பீடம் சார்பில் தங்கும் விடுதி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 150 தனி அறைகள் உள்ளன. குளிர்சாதன வசதியோடு தினசரி ரூ.500, சாதாரண அறைகள் தினசரி ரூ.300 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும், 250 பேர் தங்கும் வகையிலான விடுதியும் உண்டு. நபருக்கு ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அனைத்திலும் குளியலறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஒரு வாரத்துக்கு முன்பு முன்பதிவு செய்ய வேண்டும். தொலைபேசி எண்.0416-2206500. இதுதவிர, வேலூர் நகரில் ஏராளமான தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.

திருக்கோயில் நிர்வாகம்: ஸ்ரீநாராயணி கோயில், ஸ்ரீலட்சுமி நாராயணி பொற்கோயில் ஆகியவற்றை ஸ்ரீநாராயணி பீடம் பராமரித்து வருகிறது. தொடர்பு எண்.0416-2271202, 2206500. இணையதள முகவரி: www.sripuram.org, www.narayanipeedam.org.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com