மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதி மறுதேர்தல் முடிவுகள் - பாஜக அமோக வெற்றி!போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

இருந்தமிழே உன்னால் இருந்தேன்

கூடலில் உறையும் சொக்கேசன்!: தென்பாண்டி நாட்டில் பாடல் பெற்ற திருத்தலங்கள் நான்கு. அவற்றுள் தலைசிறந்து விளங்குவது மதுரை மாநகர். மதுரை என்றால் "இனிமை' என்று பொருள். தமிழ் என்றாலும் "இனிமை' என்றுதான் பொர

Updated On :26 செப்டம்பர் 2012, 11:56 am IST

கூடலில் உறையும் சொக்கேசன்!: தென்பாண்டி நாட்டில் பாடல் பெற்ற திருத்தலங்கள் நான்கு. அவற்றுள் தலைசிறந்து விளங்குவது மதுரை மாநகர்.

மதுரை என்றால் "இனிமை' என்று பொருள். தமிழ் என்றாலும் "இனிமை' என்றுதான் பொருள். தமிழும் மதுரையும் பிரிக்க முடியாதவை. காரணம், நம் தமிழ் அன்னை மதுரைச் தமிழ்ச் சங்கத்தில்தான் பாராட்டி, சீராட்டி வளர்க்கப்பட்டாள்.  

"ஆலவாய்' என்ற பெயரும் இந்நகருக்கு உண்டு. ""பெருநீர் வையை வளநீர்க்கூடல் உடல் உயிர்'' என்று சொக்கநாதப் பெருமான் உயிராகவும், மதுரையை அப்பெருமானுடைய உயிர் உறையும் உடலாகவும் உருவகித்துப் பாடியுள்ளார் ஒரு செந்நாப் புலவர்.

""தமிழொடு பிறந்து பழ மதுரையில் வளர்ந்த கொடி'' என்று மீனாட்சியம்மையைப் போற்றுகிறார் இன்னொரு புலவர்.

உமாதேவியார் தடாதகைப் பிராட்டியாகவும், சிவபெருமான் சோமசுந்தரப் பாண்டியனாகவும் மதுரையில் அவதரித்தனர் என்கிறார் குமரகுருபர சுவாமிகள்.

""தேனுரைத் தமிழும் திருவுரை கூடலும்'' என்று தமிழுடன் மதுரையைச் சேர்த்துப் பேசுகிறார் கல்லாடர்.

"தமிழ் மகன்' பாண்டியரது புகழாகிய தொட்டிலிலேயே ஆடி, சங்கப் பலகையிலே வீற்றிருந்து, புலவர்களால் வளர்க்கப்பட்டாள் நம் தமிழன்னை' என்கிறார் வில்லிப்புத்தூராரின் மகனார் வரந்தருவார் என்பவர்.

"கண்ணுதற் பெருங்க கடவுள்' சங்கப் புலவர்களோடு வீற்றிருந்து தமிழை ஆய்ந்த ஞானபூமி மதுரையம்பதி.

திருஞானசம்பந்தருடைய பாடல்கள் வைகை வெள்ளத்தை எதிர்த்து நீந்திச் சென்று தமிழ் மறையின் (தேவாரம்) பெருமையை உலகுக்கு உணர்த்திய ஊர் ஆலவாய். இவை தவிர, நான்கு மேகங்கள் மாடங்களாக நின்று பெருமழையைத் தடுத்ததால் "நான்மாடக்கூடல்' என்றும், கடம்ப மரங்கள் நிறைந்த காடாக இருந்ததால் "கடம்பவனம்' என்றும், வசிக்க முக்தி தரும் திருத்தலமானதால், "ஜீவன் முக்திபுரம்' என்றும், தடாதகைப் பிராட்டியார் கன்னியாகுமரியிலிருந்து அரசாண்டதால் "கன்னிபுரீசம்' என்றும், வரகுண பாண்டியனுக்கு சிவபெருமான் சிவலோகம் காட்டியதால் (திருவிளையாடல் புராணம்) "சிவலோகம்' என்றும், இறைவன், இறைவி, முருகன் ஆகியோர் பாண்டிய குலத்தில் தோன்றி அரசு செய்தமையால் "சிவநகரம்' என்றும், ஆன்மாக்களுக்கு சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நால்வகை சைவ நெறியையும் தருவதால் "சம்ஷ்டி விச்சாபுரம்' என்றும், ஆறு ஆதார (ஆராதாரம்) ஸ்தானங்களுக்கு எல்லாம் அதீதமாயுள்ளதான "துவாதசாந்தம்' எனப்படுதலால் "ஆலாசிய úக்ஷத்திரம்' என்றும் சிறப்பித்துச் சொல்லப்படும் மதுரையம்பதி, புலவர்கள் கூடி "தமிழ்' ஆய்ந்த இடமாதலால் "கூடல்' என்ற பெயரும் கொண்டு விளங்குகிறது.

மதுரை மாநகர் "தென்னிந்திய ஏதென்ஸ்' என்றும் புகழ்ந்து கூறப்படுகிறது. இத்தகைய பெருமைக்குரிய மதுரை மாநகரில்தான் சங்கம் வைத்துத் தமிழ் வளர்ந்தது. பல புலவர்கள் தமிழாய்ந்து திருக்குறள் போன்ற அரிய பெரிய நூல்களைத் தந்தது இத் தமிழ்ச்சங்கத்தின் மூலம்தான். இத்தகைய பெருமைக்குரிய மதுரை மாநகரில் வீற்றிருக்கும் இறைவனாம் கண்ணுதற் பெருங்கடவுள் சொக்கநாதர் மேல் மையல்கொண்ட ஒருத்தி, தூதாக அனுப்பியது புறாவைவோ, மடலைலோ, நெஞ்சையோ, தோழியையோ அல்ல. இறைவனிடம் அவள் தூதாக அனுப்பியது "தமிழை'. இத் தூதுதான் நம் தமிழ் மொழியின் மேன்மையை எடுத்துச் சொல்லும் சான்று. முதன் முதலாக இறைவனுக்கே தூது போனது நம் பைந்தமிழ்தான் என்பதில் தமிழர்கள் பெருமிதம் கொள்ள வேண்டும். தமிழைப் போற்றிக் கொண்டாட வேண்டும்.  

"தூது' உருவான விதம்: பக்தி இயக்கக் காலத்தில் ஏராளமான புதிய இலக்கிய வகைகள் தோன்றின. அவ்வாறு தோன்றிய இலக்கியங்களை சிற்றிலக்கியங்கள் என வகைப்படுத்தி அவை 96 சிற்றிலக்கியங்களாகத் தொகுக்கப்பட்டது. 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்றுதான் தூது இலக்கியம். இதன் காலம் 14-ஆம் நூற்றாண்டு. முதன் முதலாக வீரமாமுனிவரின் "தொன்னூல் விளக்கம்' என்ற நூலே பிரபந்தங்கள் 96 எனப் பட்டியலிட்டுள்ளது. பக்தி இயக்கக் காலத்தில் தோன்றினாலும் அவை நாயக்கர் காலத்தில்தான் செழித்து வளர்ந்தது. இச்சிற்றிலக்கிய வகைகளுக்கான இலக்கணங்கள் மற்றும் வரைகள் பற்றிய பன்னிரு பாட்டியல், பிரபந்த மரபியல் ஆகிய பாட்டியல் நூல்கள் விரிவாக விளக்குகின்றன.

ஆண்-பெண் காதலால் அஃறிணையைத் தூது செல்ல ஏவுதல் தூது இலக்கியம் எனப்படும். தலைவன்-தலைவி பிரிவு காலத்தில் ஒருவர் மற்றவருக்கு அறிவிக்கும்படி அஃறிணைப் பொருள்களைத் தூது செல்ல ஏவுவதுபோல அமைகின்றன.

தலைவன்-தலைவியரிடையேயும், அரசர் மாற்றாரிடமும், புலவர் வள்ளல்களிடம் தெய்வத்திடமும் தூதுவர் வாயிலாகக் கருத்தை எடுத்துரைப்பது தூது எனப்படும். மகாபாரதத்தில் கண்ணன், அங்கதன் போன்றவர்கள் தூது போனசெய்தி உள்ளது. சிற்றிலக்கியங்களுள் ஒன்றான தூது இலக்கியமோ  உயர்திணையன்றி அஃறிணைப் பொருள்களையும் தூதாக அனுப்பும் மரபும் எழுந்தது. மேலும், காதல் வயப்பட்ட காதலர்கள் தங்களது பிரிவுத் துன்பத்தை இயற்கைப் பொருள் ஒன்றின் மூலம் அறிவித்து, மாலை வாங்கிவரச் சொல்லுதல் தூதின் பொது இலக்கணமாகும். இது கலிவெண்பாவில் பாடப்படும் என இலக்கண விளக்கப்பாட்டியல் நூல் கூறுகிறது. உயர்திணை மட்டுமல்லாமல் அஃறிணையும் தூதாகச் சென்றன என்பதை அறிய முடிகிறது.

÷இத்தகைய பெருமைக்குரிய தூது இலக்கியத்தை தலைவி ஒருத்தி இறைவனுக்குத் தூதனுப்பப் பயன்படுத்திக் கொள்கிறாள். இத்தூதின் மூலம் பெறப்படும் செய்தி என்ன? தலைவனுக்காக ஏங்கும் தலைவியின் தவிப்பா? அல்ல... அல்ல... முழுக்க முழுக்க நம் தமிழன்னை பிறந்தது (தோற்றம்), வளர்ந்தது (வளர்ச்சி), செழுத்தது (புலவர்

நாவில்), தமிழ் முனிவர்கள், புலவர்கள், அடியார்களின் சிறப்பு, சொக்கநாதரின் திருவிளையாடல்கள், மதுரைக் கோயிலின் சிறப்பு, தமிழ்மொழியின் மாண்பும் பெருமையும் முதலியவற்றைத் தலைவி விளக்கிக் கூறி "தூது சென்று வருக என் தமிழே!' எனத் தமிழை தூதாக அனுப்புகிறாள். உலகில் எத்தனையோ கோடி மொழிகள் இருக்கலாம். ஆனால், முதன் முதலாக இறைவனுக்குத் தூது சென்ற ஒரே மொழி நம் தமிழ்மொழிதான்!

தமிழன்னையின் பிறப்பு: அகன்ற நிலத்து, குறைவிலா உடம்பின் உந்தியில் தோன்றிய காற்று, பெருமை மிகுந்த வாக்கு என்னும் கருத்தரித்து, தலை, கழுத்து, மூக்கு, ஆகிய நான்கு இடங்களைச் சார்ந்து, உதடு, நாக்கு, பல், அண்ணம் ஆகியவற்றால் வடிவாகி, தலையினின்று மீண்டு, அனைவரும் ஏற்கும் வகையில், முதலெழுத்து முப்பதாகவும், சார்பெழுத்துகள் இருநூற்று நாற்பதாகவும் சிறப்புடன் பிறந்தாய்.

நீ பிறந்த பின் எண், பெயர், முறை, பிறப்பு, உருவம், மாத்திரை, முதல் நிலை, இடைநிலை, கடைநிலை, போலி, பதம், புணர்ச்சி என்னும் பன்னிரண்டு பருவங்களாகப் பகுத்து, மண்ணுலகில் முதன்மையான புலவர்கள் உன்னை வளர்த்துவரும் காலத்தில், உன்னைக் கண்மணிபோல் போற்றி, பள்ளிக்கூடத்தில் ஏட்டுச் சுவடிகளைத் தாங்கும் அசையாம் பற்பல தொட்டில்களில் கிடத்தி, சிறுவர்கள் கூடித் தள்ளி, தாலாட்டி, நீ பொலிவுற்று விளங்குமாறு மஞ்சள் பூசிக் குளிப்பாட்டி மையிட்டு, மூன்று பாலும் (தாய்ப்பால், பசும்பால், ஆட்டுப்பால் - அறம், பொருள், இன்பம்) மிகுதியும் புகட்டச் சிறந்து வளர்ந்தாய்.

நின் மக்களைக் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிறுபறை, சிற்றில், சிறுதேர் ஆகிய பத்துப் பருவங்களில் பகுத்தமைத்து, புகழோடு நீ வளர்க்கின்றாய். அத்தகைய இயல்பு வாய்ந்த நின்னை வேரொருவர் வளர்த்துவிட இயலுமோ?

உலகோர் தாம் விரும்பும் கல்வி, கலைகள் அனைத்தும் உன்பால் உள்ளதென எண்ணி, உன்னிடமிருந்தே கற்பார்கள். அவ்வாறிருக்க, உனக்குக் கற்பிப்பவரும் உண்டோ?

அழகு நிறைந்த செய்யுட்குரிய இயற்சொல், திரிசொல், திசைசொல், வடசொல் ஆகிய நான்கும் செந்தமிழ்ச் சொற்களாகிய பெயர், வினை, இடை, உரி ஆகிய நான்கும் தமிழ் மொழியின் உள்ளமைந்த பொருளாகிய கைக்கிளை, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, பெருந்திணை ஆகிய அகத்திணைகள் ஏழும்; வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை என்னும் புறத்திணைகள் ஏழும், குற்றமற்ற எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, பா, பாவினம் ஆகிய எட்டு யாப்பு உறுப்புகளும்; தன்மையணி முதலாகப் பாவிகம் ஈறாக முப்பத்தைந்து வகை அணிகளும் அணைந்து மாறுபாடில்லாத பேரழகு கொண்ட மணமகனாகி, வெண்பா முதலாகிய நால்வகைப் பாக்களுக்குப் பொருந்திய செப்பலோசை, அகவலோசை, துள்ளலோசை, தூங்கலோசை என்னும் நால்வகைப் பண்களும் பட்டத்தரசிகளாகவும், மனதால் எண்ணி மதிக்கப்படும் தோல்கருவி, துளைக்கருவி, கஞ்சக்கருவி, நரம்புக்கருவி, மிடற்றுக்கருவி என்னும் ஐந்து இசைக்கருவிகளும் அவை ஈன்றெடுத்த நூற்று மூன்றான பண் வகைகளும் பின்முறை வந்த பெருங்காமக் கிழத்தியராய் விளங்க, அனைவரும் எண்ணிப் போற்றும் நல்லாதாரமாய் விளங்கும் வீரம், அச்சம், அவலம், வியப்பு, இழிப்பு, நகை, காமம், சமநிலை, ருத்திரம் ஆகிய ஒன்பது சுவைகளையும் மக்களாய்ப் பெற்று, பெருமையான வாழ்வு பெற்றாய். உன்னைச் சார்ந்தபின் விட்டகலாத பண்கள் முதலிய பெண்களுடனும் பிள்ளைகளுடனும் கூடி, நாடகமாம் பெண்கள் கொலுவில் வீற்றிருக்கும் பேறு பெற்றாய்! எனப் பலவாறு போற்றிப் புகழ்ந்து,

தமிழே, உலகில் உனக்கே அரியாசனம் உண்டு. உனக்கு நிகராவோர் எவரும் உண்டோ? பாலும், முந்திரிப் பழமும் வாழைப் பழமுமாகி, வளர்ந்த கரும்பாகி, தென்னையின் இளங்கனியாகி, இனிக்கின்ற தெள்ளமுதாகி அதனினும் மேலான முத்திதரும் கனியொத்த முத்தமிழே, அறிவால் உண்ணப்படும் தேனே, இத்தகைய பெருமைக்குரிய என் தமிழே! உன்னிடம் நான் மகிழ்ந்து கூறும் விண்ணம் ஒன்றுளது கேட்பாயாக!' எனத் தலைவி தன் விண்ணப்பதைக் பலவாறாகக் கூறி,

""இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்

விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்

அந்தரலோ கத்தின்மே லானதிரு வாலவாய்ச்

சுந்தர மீனவன்நின் சொற்படியே - வந்து

துறவாதே சேர்ந்து சுகானந்தம் நல்க

மறவாதே தூது சொல்லி வா''

என்று கூறி, "என் தலைவனாம் சொக்கநாதரிடம் சென்று என் மனநிலையை எடுத்துக் கூறுவாயாக' என்று நம் தமிழ்மொழியைத் தூதாக அனுப்பிய தலைவி, நம் தமிழ் இலக்கியத்தின் செழுமைக்கு வித்திட்ட பெருந் தலைவியான இவள், மதுரை மாநகரை சொக்கநாதருடன் கலந்து ஆட்சி செய்யும் நம் தடாதகைப் பிராட்டியன்றி வேறு யார்?

- இடைமருதூர் கி.மஞ்சுளா

நன்றி : தமிழ்த் தாய் ஓவியம் - ம.செ.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.