Enable Javscript for better performance
சபரிமலை கோயிலில் மண்டல பூஜை துவக்கம்- Dinamani

சுடச்சுட

    

    சபரிமலை கோயிலில் மண்டல பூஜை துவக்கம்

    By dn  |   Published on : 16th November 2012 11:41 PM  |   அ+அ அ-   |    |  

    sabarimala

    சபரிமலை அருள்மிகு ஐயப்பன் கோயில் மண்டல பூஜை வெள்ளிக்கிழமை துவங்கியது.

    டிசம்பர் 26ஆம் தேதி ஐயப்பனுக்கு தங்க அங்கி திருவாபரணம் சார்த்தி, மண்டலாபிஷேக நிறைவு பூஜைகள் நடைபெறும்.

    கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டம், பெரியாறு புலிகள் வனச் சரணாலயப் பகுதியில் உள்ள ஐயப்பன் கோயிலில் பூஜை வழிபாடு, கார்த்திகை முதல் நாளான வெள்ளிக்கிழமை முதல் துவங்கியது. முன்னதாக, வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. விரதமிருந்து இருமுடி கட்டிவந்த பக்தர்கள், 18 படி ஏறி சுவாமி தரிசனம் செய்தனர்.

    தந்திரி கண்டரரு ராஜீவரு, மஹாகணபதி ஹோமம் நடத்தி, மண்டல கால நெய் அபிஷேகத்தை துவக்கி வைத்தார்.

    முதலாவதாக மேல்சாந்தி இருமுடியில் கொண்டுவந்த நெய்யால் ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, பின்னர் பக்தர்கள் கொண்டுவந்த நெய்யால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர், வழக்கமான பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. மாளிகைப்புரம் கோயிலில் புதிய மேல்சாந்தி உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி, ஐதிக முறைப்படி பூஜை வழிபாடுகளைத் துவக்கினார். முதல் நாளிலேயே பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் இருமுடி கட்டி வந்திருந்தனர்.

    மண்டல பூஜை விழாக் காலங்களில் தினமும் அதிகாலை 4 மணிக்கு நடை திறப்பு, 4.05-க்கு நிர்மால்ய தரிசனம், 4.15-க்கு கணபதி ஹோமம் நடைபெறும். அதைத் தொடர்ந்து நெய் அபிஷேகம் துவங்கி, காலை 7 மணி வரையும், பின்னர் காலை 7.45 முதல் பகல் 12 மணி வரையும் நெய் அபிஷேகம் நடைபெறும்.

    காலை 7.30 மணிக்கு உஷ பூஜையும், பகல் 12.30-க்கு அபிஷேகம், நைவேத்தியம் படைத்தல், பகல் 1 மணிக்கு உச்சிகால பூஜை நடத்தி, கோயில் நடை அடைக்கப்பட்டு, மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும்.

    மாலை 6.30-க்கு தீபாராதனை, இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை புஷ்பாபிஷேகம், 10.30-க்கு அத்தாழ பூஜை, 10.50-க்கு ஹரிவராஸனம், 11 மணிக்கு நடை சாற்றுதலும் நடைபெறும்.

    பக்தர்களுக்குத் தேவையான ஏற்பாடுகளை, திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர் கோவிந்தன் நாயர், உறுப்பினர் சுரேஷ் மற்றும் கேரள அரசு விரிவாகச் செய்துள்ளது. பம்பை சபரிமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கேரள அரசுப் போக்குவரத்துக் கழகம் 300-க்கும் மேற்பட்ட சிறப்புப் பஸ்களை இயக்கி வருகிறது. பக்தர்கள் கூட்டம் அதிகரித்தால், மேலும் கூடுதல் பஸ்களை இயக்கவும் கே.எஸ்.ஆர்.டி.சி. முடிவு செய்துள்ளது.

    kattana sevai