திருமலையில், கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் செவ்வாய்க்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
திருமலையில் ஆண்டுக்கு 4 முறை, கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம். வைகுண்ட ஏகாதசி, உகாதி (தெலுங்கு வருடப்பிறப்பு), ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோத்ஸவம் ஆகிய விழாக்களுக்கு முன்னதாக வரும் செவ்வாய்க்கிழமைகளில், இந்த கோயில் ஆழ்வார் திருமஞ்சனத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது.
அந்த வகையில், திருமலையில் வரும் 26-ஆம் தேதி முதல் பிரம்மோத்ஸவம் தொடங்க உள்ளது. இதையொட்டி, செவ்வாய்க்கிழமை கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. தேவஸ்தான அதிகாரிகளும் ஊழியர்களும் ஏழுமலையான் கோயில் கருவறைக்குள் உள்ள, உற்சவ சிலைகள், பூஜைப் பொருள்கள் உள்ளிட்டவற்றை வெளியே கொண்டு வந்து சுத்தம் செய்தனர்.
பின்னர், ஏழுமலையான் மீது தண்ணீர் புகாத பட்டு வஸ்திரம் போர்த்தப்பட்டு கோயில் தரை, தளம், சுவர், மேற்கூரை, கோபுரங்களில் கஸ்தூரி மஞ்சள், குங்குமம், புனுகு, பச்சை கற்பூரம், குங்குமப்பூ, கஸ்தூரி, கோராஜனம், சந்தனம் ஆகியவற்றைப் பூசி, கோயில் கருவறை முதல் மகாகோபுரம் வரை தண்ணீர் விட்டு கழுவினர்.
ஏழுமலையான் மீது போர்த்தப்பட்டிருந்த போர்வையை நீக்கி, உற்சவ சிலைகள், பூஜைப் பொருள்களை உள்ளே கொண்டு சென்று மதிய பூஜைக்கு ஆயத்தப்படுத்தினர். பிற்பகல் 12 மணிக்குப் பிறகு பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர்.