Enable Javscript for better performance
ஸ்ரீராமகிருஷ்ணர் திருக்கோயில் குடமுழுக்கு ரத யாத்திரை- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீராமகிருஷ்ணர் திருக்கோயில் குடமுழுக்கு ரத யாத்திரை

    By மதி  |   Published on : 13th August 2016 04:40 AM  |   அ+அ அ-   |    |  

    yathra

    ஸ்ரீராமகிருஷ்ண திருக்கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ராமகிருஷ்ணர், சாரதா, விவேகானந்தர் ரதத்தை வெள்ளிக்கிழமை வரவேற்கும் ஆவடியைச் சேர்ந்த பொதுமக்கள்.

    சென்னை அம்பத்தூர் புதூரில் ஸ்ரீராமகிருஷ்ணா சாரதா ஆசிரம மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பகவான் ஸ்ரீராமகிருஷ்ணா திருக்கோயில் குடமுழுக்கு பெருவிழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரத யாத்திரை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    இந்தப் பள்ளி வளாகத்தில் உள்ள ராமகிருஷ்ணர் திருக்கோயில் குடமுழுக்கு விழா வரும் 14-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி ஒவ்வொரு நாளும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஆசிரம நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதில் முதல் கட்டமாக ராமகிருஷ்ணர், சாரதா, விவேகானந்தர் ஆகியோரின் கருத்துகளை பொதுமக்கள், மாணவ, மாணவிகள் ஆகியோர் அறிந்து கொள்ளும் வகையிலும், குடமுழுக்கு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அவர்களின் திருவுருவம் தாங்கிய தனித்தனி ரதங்களில் ஊர்வல நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    இதில், முதலில் பட்டாபிராம் டி.ஆர்.பி.சி.சி இந்து கல்லூரி வளாகத்தில் மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் சார்பில் ரதங்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த ஸ்ரீமத் சுவாமி யாதுனானந்தஜி மகராஜ், ஸ்ரீமத் சுவாமி சத்யபிரபானந்தஜி மகராஜ் ஆகியோர் ராமகிருஷ்ணர், சாரதா, விவேகானந்தர் பற்றி விளக்கமாக கருத்துக்களை எடுத்துரைத்து, மாணவர்கள் பின்பற்றவும் கேட்டுக் கொண்டனர். இதையொட்டி அக்கல்லூரியில் பல்வேறு போட்டிகளும், கலைநிகழ்ச்சியும் நடத்தப்பட்டன.

    இதேபோல், ஆவடி நகராட்சி அலுவலகம் எதிரே காய்கறிகள் சந்தை, எஸ்.பி.விஜயரெட்டியார் மேல்நிலைப்பள்ளி, முருகப்பா பாலிடெக்னிக் கல்லூரி, அம்பத்தூர் சேதுபாஸ்கரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கள்ளிக்குப்பம் மெட்ரிக் பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரதங்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நிறைவாக புதூர் ராமகிருஷ்ண சாரதா மெட்ரிக் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள திருக்கோயில் வளாகத்துக்கு ரதங்கள் வந்தடைந்தன.

    இதற்கான ஏற்பாடுகளை ஆசிரமத்தின் தலைவர் சண்முகம், செயலாளர் பாரதி, ஒருங்கிணைப்பாளர் ராமசுப்பிரமணியன், பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai