சுடச்சுட

  

  கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரசுவாமி கோயிலில் சப்தஸ்தான பல்லக்கு வெள்ளோட்டம்

  By  கும்பகோணம்,  |   Published on : 08th February 2016 02:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  41

  கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் புதிய சப்தஸ்தானப் பல்லக்கு வெள்ளோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
   சப்தஸ்தானப் பல்லக்கு உற்சவம் எனும் ஏழூர் பல்லக்கு விழா, ஒரு தலத்தைச் சுற்றியுள்ள ஊர் மக்களுடைய ஒற்றுமை வளர்ச்சிக்கான விழாவாகும். ஏழூர் பல்லக்கை தரிசித்தால் ஏழு பிறப்புக்கும் வேண்டிய எண்ணற்ற புண்ணியங்கள் கிட்டும் என்பது நம்பிக்கை.
   சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில், நாயக்கர் காலம் முதல் சப்தஸ்தானப் பல்லக்கு உற்சவம், 10 ஊர்களில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது திருவையாறு, சக்கராப்பள்ளி, கும்பகோணம் ஆகிய ஊர்களில் சிறப்பாகவும், சில ஊர்களில் பெயரளவிலும் இந்த உற்சவம் நடைபெறுகிறது.
   கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில், திருக்கலயநல்லூர் என்ற சாக்கோட்டை அமிர்த கலசநாதர் கோயில், தாராசுரம் ஆத்மநாதசுவாமி கோயில், திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயில், திருக்கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில், மேலக்காவேரி கைலாசநாதசுவாமி கோயில் ஆகிய ஏழு கோயில்களும் இந்தத் தலத்துக்குரிய சப்தஸ்தானத் தலங்களாகும்.
   இந்த விழாவுக்குரிய பழைய பல்லக்கு முற்றிலும் பழுதடைந்து விட்டதால், கடந்த 2 ஆண்டுகளாக சப்தஸ்தான உற்சவம் நடைபெறவில்லை. தற்போது சென்னையைச் சேர்ந்த சுந்தராம்பாள் வெங்கட்ராமன் குடும்பத்தினரும், கும்பகோணம் மங்களவிலாஸ் சிவக்குமாரும் ரூ. 8 லட்சத்தில் கும்பேஸ்வரர், மங்களாம்பிகைக்கு பெரிய வடிவிலும், விநாயகருக்கு சிறிய வடிவிலுமாக இரண்டு பல்லக்குகளை புதிதாக செய்து தந்துள்ளனர்.
   சுவாமி அம்பாளுக்குரிய பெரிய பல்லக்கு 9 அடி உயரம், 4 அடி அகலம், பல்லக்கு, கொம்பு, முகப்பு ஆகியவற்றுடன் சுமார் 15 அடி நீளத்துடனும், ஒன்றரை டன் எடையுடன், பில்லமருது, தேக்கு போன்ற மரங்களைக் கொண்டு தஞ்சாவூர் ஓவிய முறைப்படி கண்ணாடிகள் பதிக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
   இதை, கும்பகோணம் முருகானந்தம் ஸ்தபதி வடிவமைத்துள்ளார். இந்தப் பல்லக்கு, சப்தஸ்தானப் பல்லக்கு உற்சவத்துக்கு மட்டுமன்றி ஒவ்வொரு மகாமகத்துக்கும், கொடியேற்றத்துக்கு முதல் நாள் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் இருந்து மகாமகக் குளத்துக்கு அமிர்த தீர்த்தம் கொண்டு செல்லவும், நான்காம் திருநாள் 63 நாயன்மார்களுடன் சுவாமி அம்பாள் ஏகாசனத்தில் இரட்டை வீதி புறப்பாடும் இந்தப் பல்லக்கில் நடைபெற உள்ளன.
   நிகழாண்டு, மகாமகத்தையொட்டி, வருகிற 12-ஆம் தேதி அமிர்த தீர்த்தம் கொண்டு செல்வது, 17-ஆம் தேதி இரட்டை வீதி புறப்பாடு ஆகியன இந்தப் பல்லக்கில் நடைபெறுகிறது.
   வெள்ளோட்டத்துக்கு முன்னதாக சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்று, சிவ பூத கணவாத்தியங்கள் முழங்க சப்தஸ்தானப் பல்லக்கு ஆதிகும்பேஸ்வரர் கோயிலின் தேரோடும் நான்கு வீதிகளிலும் வெள்ளோட்டம் நடைபெற்றது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai