கருட தரிசனமும், அதன் பலன்களும்

கருட தரிசனமும், அதன் பலன்களும்

ஸ்ரீமன் நாராயணனின் பெருமைக்குரிய வாகனமாகத் திகழ்பவன் கருடன். கருடாழ்வானுக்கு

ஸ்ரீமன் நாராயணனின் பெருமைக்குரிய வாகனமாகத் திகழ்பவன் கருடன். கருடாழ்வானுக்கு கொற்றப்புள், தெய்வப்புள், வேதஸ்வரூவன், பட்சிராசன், சுவர்ணன், விஜயன், பெரிய திருவடி, எனப் பலபெயர்கள் உண்டு.

கச்சபர்-விநதை தம்பதிக்கு ஆடி மாதம்,  சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தார் கருடன்.  இவருடைய அண்ணன் அருணன். இரண்டாவதாகப் பிறந்த கருடாழ்வார் மகாபலமும், சர்ப்பங்களை விழுங்கும் சக்தியும், அழகான முகமும், குவிந்த இறகுகளையும், உறுதியான நகங்களையும், சிறந்த கூர்மையான கண்களையும், பருத்த கழுத்தையும், குட்டையான கால்களையும், பெரிய தலையையும், உடையவன். எல்லா திசைகளிலும் வேகமாகப் பறக்கும் ஆற்றலைப் பெற்றவன். கருடனுக்கு ருத்ரை, சுகீர்த்தி என இரு மனைவிகள் உண்டு. மாற்றாந்தாயான கத்ருவிடம் அடிமைப்பட்டிருந்த தன் தாய் விநதையின் அடிமைத்தனத்தை, இந்திரலோகம் சென்று அமிர்தத்தைக் கொண்டுவந்து போக்கினான் கருடன்.

கருட வாகனமும் கருடக் கொடியும்:  
ஒரு சமயம் கருடன் இந்திரனுடன் போரிட்டபோது, திருமால் உபேந்திரனாக இருந்து இந்திரனுக்காக கருடனுடன் போரிட்டார்.  திருமால் கருடனின் கர்வத்தை அடக்கி, தனக்கு வாகனமாகவும் கொடியாகவும் இருக்க வரமளித்தார்.

கருட தரிசனப்பலன்:  
கருடன் வானத்தில் பறக்கும்போது தரிசனம் செய்வதும், கருடனின் குரலைக் கேட்பதும் நன்மையைத்  தரும். பலன்களும் கிடைக்கும். அவை,

ஞாயிறு நோய் நீங்கும்.

திங்கள், செவ்வாய் - அழகு சேர்ந்து துன்பம் நீங்கும்.

புதன், வியாழன் - பகைவர்கள் வைத்த சூன்யம் நீங்கும்.

வெள்ளி, சனி -ஆயுள் நீண்டு செல்வம் பெருகும்.

அனைத்து திருக்கோயில்களிலும் பிரம்மோற்சவத்தின் போது பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளும்போது, மேலே கருடன் பறப்பதைக் காணலாம். கருட தரிசனம் கிடைக்கும்போது கைகூப்பி வணங்காமல், மனதால் நினைத்து வணங்க வேண்டுமென்று கூறப்படுகிறது.  

கருட சேவை:
பக்தர்களைக் காப்பதற்காக திருமால் கருடவாகனத்தில் எழுந்தருளுவார். கஜேந்திரனைக் காக்க கருட வாகனத்தில் அதிவேகமாக வந்த நிகழ்வு மூலம் இதை அறியலாம்.  இதனை  "ஆனை துயரம் தீரப்புள்ளூர்ந்து நின்றாழி தொட்டானை' என்கிறார் திருமங்கையாழ்வார்.

கருட சேவையின் போது காக்க நீ வருவாயே கருடனேறி, என்று பக்தர்கள் பாடுவர். ஆசித் எனப்படும் சப்பரத்தின்மேல் சித் எனப்படும் கருடன் வீற்றிருந்து, ஈஸ்வரனாகிய எம்பெருமானைச் சுமந்து வந்து பக்தர்களுக்கு தரிசனமளித்து, சச்சிதானந்தத்தை வழங்குவதே கருட சேவையாகும்.  கருட சேவையை பெரிய திருவடி சேவை என்றும் கூறுவர். காஞ்சி, திருமலை, திருநாங்கூர், திருவரங்கம், நாச்சியார் கோயில், நவதிருப்பதிகள், திருநாராயணபுரம் போன்ற தலங்களின் கருட சேவைகள் குறிப்பிடத்தக்கனவாகும்.

கருட வியூகம்:
கருடன் பறக்கின்ற நிலையில் படைகளை நிறுத்திப் போரிட்டால் எதிரியின் படைகளைப் பாழ்படுத்தி வெற்றி பெறலாமென்று போர் முறை கூறுகின்றது. இதனை அறிந்த பாண்டவர்கள் ஒருநாள் கருட வியூகம் அமைத்துப் போரிட்டு கெளரவர்களை வென்றனர் என்று மகாபாரதம் கூறுகின்றது.

கருட மந்திரம் :
"குங்குமாங்கித வர்ணாய குந்தேந்து தவளாயச
விஷ்ணு வாகன நமஸ்துப்யம் பட்சி ராஜாயதே நம'
என்னும்  கருடமந்திரம் விஷத்தைப் போக்கும் மந்திரங்களுள் தலை சிறந்ததாகும்.  

கருடாழ்வானின் பகவத் தொண்டு:
ஸ்ரீ வைகுண்டத்தில் எம்பெருமானுக்கு பகவத் தொண்டு செய்யும் நித்திய சூரிகளான  மூவரில் அனந்தன், விஷ்வக்சேனர்களுடன் கருடாழ்வானும் ஒருவன். ஸ்ரீவைகுண்டத்திலிருந்து கிரிடாசலம் என்ற விமானத்தை திருமலைக்குக் கொண்டுவந்து அதில் திருவேங்கடவனை எழுந்தருளச் செய்தான்.  அதுவே கருடாத்ரி என்பதாகும்.

எம்பெருமான் திருக்கோயில்களில் கருவறைக்கு எதிரே கைகூப்பி எம்பெருமானைச் சேவித்த வண்ணம் இருக்கும் கருடபகவானை முதலில் சேவித்து, துவாரபாலகர்களை வணங்கி அனுமதி பெற்று பின்னரே பெருமாளைச் சேவிக்க வேண்டும என்பது நெறிமுறையாகும்.  

கருடனும் அஹோபிலமும்:  
கருடன், அஹோபிலத்தில் கடுந்தவம் புரிந்து பிரகலாதனுக்கு காட்சியளித்ததைப் போல் தனக்கும் காட்சியளிக்க வேண்டுமென்று ஸ்ரீ நரசிம்மரை வேண்டினான். நரசிம்மரும், கருடன் வேண்டுக்கோளுக்கிணங்கி ஜ்வாலா நரசிம்மராகக் காட்சி கொடுத்தருளினார்.

கருட புராணம்:
ஸ்ரீமந் நாராயணன் கருடபகவானுக்கு உபதேசம் செய்ததால் இது கருடபுராணம் என்று வழங்கப்படுகிறது. உலக மக்கள் முதலான அனைத்து உயிர்களும் தாங்கள் செய்யும் தீவினைக்களுக்குரிய பலனை உயிர் பிரிந்தபின் அனுபவிப்பர். எந்த பாவங்களுக்கு என்னென்ன தண்டனை என்பதை கருட புராணம் கூறுகிறது. இந்நூலினைப் படித்தால் தவறு செய்ய அஞ்சி நல்வழிப்படுவர்.

- எம். என். ஸ்ரீநிவாஸன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com