Enable Javscript for better performance
வீடுபேறு அளிக்கும் முருகனின் அறுபடை வீடுகள் (மினி தொடர்) - 3. பழனி- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

  முகப்பு ஆன்மிகம்

  வீடுபேறு அளிக்கும் முருகனின் அறுபடை வீடுகள் (மினி தொடர்) - 3. பழனி

  By   |   Published On : 22nd October 2017 12:00 AM  |   Last Updated : 21st October 2017 04:25 PM  |  அ+அ அ-  |  

  palani

   

  குழந்தை வேலாயுத சுவாமி கோயில் என அழைக்கப்படும் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி (திருவாவினன்குடி) மூன்றாவது படை வீடாகத் திகழ்கிறது.

  சங்ககாலப் புலவரான நக்கீரரும், பிற்காலத்தவரான அருணகிரிநாதரும் திருவாவினன்குடி முருகனைக் குறித்துப் பாடல்கள் பாடியுள்ளனர். அகத்தியர் இங்கு தவம் புரிந்து முருகனிடம் தமிழ் இலக்கணம் பயின்றதாகப் புராணங்கள் கூறுகின்றன.

  மலை மீது உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலே அறுபடை வீடுகளில் ஒன்று என்று கருதப்படுகிறது. இது தவறு. பழனி என்பது மலையின் பெயர். இந்தப் பழனி மலையும், மலை அடிவாரத்தில் உள்ள திருவாவினன்குடி ஸ்தலமும் சேர்ந்தேதான் பழனி என்று அழைக்கப்படுகிறது. இந்த இரண்டும் சேர்ந்ததுதான் முருகனின் மூன்றாவது படை வீடு.

  பழனி மலையில் அமைந்துள்ளது பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலாகும். இங்கு, கந்தப் பெருமான் ஆண்டிக் கோலத்தில் தண்டாயுதபாணியாய் காட்சியளிக்கிறார்.

  மூலஸ்தானத்தில் உள்ள பழனியாண்டவர் திருமேனி, போகர் சித்தரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டதாகும். இதனால், மூலவர் மீது அபிஷேகம் செய்யப்பட்ட பொருட்கள் எல்லா நோய்களையும் குணப்படுத்த வல்லவை ஆகும்.

  இத் திருத்தலத்தில், திரு என்ற இலக்குமி தேவியும், ஆ என்ற காமதேனுவும், இனன் என்ற சூரியனும் கு என்ற பூமாதேவியும், டி என்ற அக்னிதேவனும் குடியிருந்து முருகப் பெருமானை வழிபட்டதால், இத் தலம் “திரு ஆ இனன் குடி” (திருவாவினன்குடி) என்று பெயர் பெற்றது.

  தல அருமை

  நாரதர் கொடுத்த கனியை, தனக்குத் தராததால் கோபித்துக்கொண்ட முருகன் மயில் மீதேறி இத்தலம் வந்தார். சமாதானம் செய்ய, அம்பிகை பின்தொடர்ந்து வந்தாள். சிவனும் அவளைத் பின்தொடர்ந்தார். முருகன் இத்தலத்தில் நின்றார். அம்பிகை, இங்கு மகனை சமாதானம் செய்தாள். ஆனாலும் முருகன் விடாப்பிடியாக இங்கேயே இருக்க விரும்புவதாகச் சொல்லி தங்கிவிட்டார்.

  பிற்காலத்தில் இவ்விடத்தில் முருகனுக்கு கோயில் எழுப்பப்பட்டது. சுவாமி குழந்தை வடிவமாக நின்றதால், ‘குழந்தை வேலாயுதர்’ என்று பெயர் பெற்றார். பழத்தின் காரணமாக முருகன் கோபித்து வந்தபோது, அவரைக் கண்ட அவ்வையார், ‘பழம் நீ’ (நீயே ஞானவடிவானவன்) என்று ஆறுதல் வார்த்தைகள் சொன்னார். இப்பெயரே பிற்காலத்தில், ‘பழநி’ என மருவிற்று.

  முருகனைப் பிரிந்த துயர் தாளாத சிவபெருமானும், உமாதேவியும், முருகனைப் பின் தொடர்ந்து திருவாவினன் குடிக்கு வந்து ‘பழம் நீ’ என்று முருகனுக்குச் சூட்டிய திருப்பெயரே நாளடைவில் மருவி ‘பழனி’ என்று ஆகிவிட்டது என்றும் பழனி ஸ்தல புராணம் கூறுகிறது.

  இருப்பிடம்

  மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் ஆகிய மூன்று தென் மாவட்ட நகரங்களுக்கு மையமாக பழனி விளங்குகிறது.

  திண்டுக்கல்-கோயம்புத்தூர் ரயில் பாதையில் சுமார் அறுபது கி.மீ. தொலைவில் எழில் கொஞ்சும் இயற்கை வனப்புடன் இத்திருத்தலம் அமையப் பெற்றுள்ளது. இந்நகரம், மேற்குத் தொடர்ச்சி மலைகள் சூழ அமைந்துள்ளது.

  கடைச்சங்கக் காலத்தில் பழனி – பொதினி என்று அழைக்கப்பட்டு வந்ததாகவும், பழனி என்ற பெயரே நாளடைவில் பொதினி என்று ஆகிவிட்டதாகவும் அகநானூறு கூறுகிறது.

  மலையின் மகிமை

  பழனி மலை பக்தி மணக்கும் மலை. முருகக் கனி நின்று அருள் சுரக்கும் மலை. சித்தர்கள் செந்நெறி கண்ட மலை. ஞானமும் கருணையும் தென்றலாய் வீசும் ஞான பண்டிதனின் மலை. அஞ்சேல் என்று அபயம் தரும் பஞ்சாமிர்த மலை. திருநீறு மணக்கும் மலை. தீவினைகள் அகற்றும் மலை. பால் அபிஷேகமும் பஞ்சாமிர்த அபிஷேகமும் அருவிபோல ஓடும் அருள் மலை. அறத்தை நிலை நாட்டவும், தண்டனிட்டோர் துயர் தீர்க்கவும் தண்டு ஏந்திய தண்டாயுதபாணி கோயில் கொண்ட மலை.

  திருவாவினன்குடி கோயிலுக்கு அருகில், முருகப் பெருமானால் தோற்றுவிக்கப்பட்ட சரவணப் பொய்கை தீர்த்தமும், கோயிலில் உள்ள மகாலட்சுமி, காமதேனு, சூரியன், பூமாதேவி, அக்னி முதலியவர்களின் சன்னதிகளும், சித்திரங்களும் இவ்வரலாற்றை விளக்குகின்றன.

  கயிலையில் முருகப் பெருமானைப் பிரிந்த சிவனும், உமாதேவியும் வருந்தினர். இறைவனைக் குறிக்கும் “சச்சிதானந்தம்” என்ற பெயரில் வருகின்ற “சத்” என்னும் பதம் சிவபெருமானையும், “சித்” என்னும் பதம் பார்வதிதேவியையும், “ஆனந்தம்” என்னும் பதம் முருகப் பெருமானையும் குறிக்கும்.

  பழனி மலை மேல் உள்ள கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதையில் அமைக்கப்பட்டுள்ள சிவன், பார்வதி, கணபதி, முருகன் ஆகிய சிற்பங்கள், பழத்துக்காக உலகை வலம் வந்த போட்டியையும், மலை மேல் முருகப்பெருமான் சன்னதிக்குத் தென்பாகமாகக் காணப்படும் கைலாசநாதர் ஆலயம் இறைவனும் இறைவியும் முருகனைப் பின் தொடர்ந்து வந்து சமாதானம் செய்ததையும் உணர்த்துகின்றன.

  தலப்பெருமை

  தண்டாயுதபாணி சிறப்பு - விநாயகர் தன் அன்னையிடமிருந்து தோன்றியவர். முருகனோ, தந்தையின் நெற்றிக்கண்ணில் இருந்து உதித்தவர். இருந்தாலும், தாயின் மீது அவருக்கு கொள்ளைப்பாசம். பொதுவாக, குழந்தைகள் தாய்க்குப் பிறகே தந்தையிடம் அடைக்கலமாவார்கள்.

  இடும்பன் என்பவன் அகத்தியரின் உத்தரவுப்படி தென் பொதிகைக்கு கொண்டுசெல்ல சக்திகிரி, சிவகிரி என்ற இருமலைகளை எடுத்து வந்தான். வழியில் இத்தலத்தில் பாரம் தாங்காத இடும்பன், மலைகளை கீழே வைத்துவிட்டான். இதில் சக்திகிரி, அம்பிகையின் அம்சம். சிவகிரி, சிவனின் அம்சம்.

  திருஆவினன்குடியில் இருந்த முருகன், அம்பிகையின் அம்சமான சக்திகிரி மீது ஏறி நின்றுகொண்டார். இடும்பன் அவரை இறங்கும்படி சொல்லியும் கேட்கவில்லை. இடும்பன் அவரை எதிர்க்கத் துணிந்தான். அவனுக்கு தன் அருட்பார்வையை செலுத்தி, தன்னுடன் வைத்துக்கொண்டார் முருகன். மலையில் நின்ற இவர் கையில் தண்டம் வைத்திருந்ததால், “தண்டாயுதபாணி’'என்று பெயர் பெற்றார்.

  பிற்காலத்தில் இங்கு வந்த போகர் சித்தர், முருகனுக்கு நவபாஷாணத்தால் ஒரு சிலை வடித்தார். இந்த மூர்த்தியே மலைக்கோயிலில் மூலவரா காட்சி தருகிறார். காலப்போக்கில், இவரே பிரபலமாகிவிட்டார். ‘தண்டம்’ என்றால் ‘கோல்’ அல்லது ‘அபராதம்’ என்ற இருவகைப் பொருள்களைக் கொண்டது. இவ்வுலக வாழ்வு நிலையற்றது என்னும் ஞானபாடத்தை கற்பிக்கும் ஆசிரியராக முருகன் இத்தலத்தில் அருளுகிறார்.

  ஆசிரியரின் கையில் கோல் இருக்கிறது. அதைக்கொண்டு பயமுறுத்தி, மாணவர்களை ஒழுக்க வழிக்கு திருப்புவார். முருகன் என்ற ஞான ஆசிரியனும், தன் கையிலுள்ள கோலால், உலக இன்பங்களான மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்னும் மாயைகளில் மூழ்கித் தவிக்கும் மக்களை ஆசைகளைத் துறந்து, தன்னைப்போல் ஆண்டிக்கோல ஆசைக்கு அழைக்கிறார். மறுப்பவர்களுக்கு “சோதனைகள்’' என்னும் அபராதம் விதிக்கிறார். அச்சோதனைகளை தாங்கமுடியாதவர்கள், அவரது வழிக்கே சென்றுவிடுகின்றனர்.

  சித்தர் போகர்

  இவர், இத்தலத்து மூலவர் சிலையை செய்து பிரதிஷ்டை செய்தவர். சித்தர் போகர் அருள் விளையாடல்கள் நிகழ்ந்த இடம்தான் பழநி. இவர் தம் மாணாக்கர் புலிப்பாணியுடன் தம்மை நாடிவந்த மக்களுக்கு மருத்துவ உதவி செய்ததுடன் ஆன்மிக உணர்வையும் ஊட்டினார்.

  பழநி மலை மீதுள்ள தண்டாயுதபாணி திருக்கோலம் போகரின் அருட்கொடையாகும். சித்தர் போகரின் சமாதி இக்கோயிலுக்குள்ளேயே உள்ளது.

  முருகன் கையில் அருணகிரியார்!

  மதுரையில் தாய் மீனாட்சி கிளி வைத்திருப்பதைப்போல, பழநி மலையில் முருகன் கையிலுள்ள தண்டத்திலும் ஒரு கிளி இருக்கிறது.

  முருகனின் அருள்பெற்ற அருணகிரியார் மீது பொறாமை கொண்ட சம்பந்தாண்டான் என்னும் புலவன் அவரை பழிவாங்க நினைத்தான். ஒருசமயம் அவன் வஞ்சனையால் பிரபுடதேவராயன் என்னும் மன்னன் மூலமாக, அருணகிரிநாதரை பாரிஜாத மலர் பறித்துவரும்படி கட்டளையிட செய்தான்.

  அருணகிரியார், தன் உயிரை ஒரு கிளியின் உடலில் செலுத்தி, உடலை திருவண்ணாமலை கோபுரத்தில் கிடத்திவிட்டு தேவலோகம் சென்று பாரிஜாதம் கொண்டுவந்தார். இதனிடையே சம்பந்தாண்டான் அவரது உடலை தகனம் செய்துவிட்டான். கிளி வடிவில் திரும்பிய அருணகிரியார், தன் உடல் காணாமல் திகைத்தார். முருகன் அவருக்கு அருள் செய்து தன் தண்டத்தில் அமர்த்திக்கொண்டார். இந்த அமைப்பில், தண்டத்தில் கிளி வடிவில் அருணகிரியாருடன் முருகன் காட்சி தருகிறார்.

  தம்பியை காத்த அண்ணன்

  சிறுவன் வடிவிலிருந்த முருகனிடம், இடும்பன் சண்டையிட முயன்றபோது, விநாயகர் அவரைக் காக்க வந்தார். ஆனாலும், முருகனுக்கு கிடைக்க வேண்டிய பழத்தை தான் பெற்றுக்கொண்டதால்,

  தன் மீது அவருக்கு கோபம் இருக்கும் என்பதால், சுயவடிவத்தை மறைத்து நாக வடிவில் இடும்பனுடன் சண்டையிட்டார்.

  இந்த விநாயகர், மலைக்கோயில் செல்லும் வழியில், இடும்பன் சன்னதி அருகில் சர்ப்பத்தின் மீது காட்சி தருகிறார். தன் வலது காலை நாகத்தின் தலை மீது வைத்துள்ளார். ‘சர்ப்பவிநாயகர்’ என்று இவரை அழைக்கிறார்கள். மலைக்கோயில் அடிவாரத்தில் “பாதவிநாயகர்’' இருக்கிறார். மலையேறும் முன்பாக இவரை வணங்கிச்செல்ல வேண்டும் என்பது ஐதீகம். இவ்விநாயகருக்கு பின்புறத்தில் முருகனின் பாதம் இருக்கிறது. இவ்விரு விநாயகர்களின் தரிசனமும் இங்கு விசேஷம்.

  மூன்றாம் படை வீடு

  முருகன் முதலில் கோபித்து வந்து நின்ற தலம் என்பதால், மலை அடிவாரத்தில் உள்ள திருஆவினன்குடி தலமே ‘மூன்றாம் படை வீடு’ ஆகும். இங்கு முருகன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். முருகன் குழந்தை வடிவமாக இருப்பதால், இவருடன் வள்ளி, தெய்வானை இல்லை. இவர் சிவனின் அம்சம் என்பதால் இவரது கருவறை சுற்றுச்சுவரில் (கோஷ்டம்) தெட்சிணாமூர்த்தி, பிரகாரத்தில் பைரவர், சண்டிகேஸ்வரரும் இருக்கின்றனர்.

  பழநிக்கு செல்பவர்கள் முதலில் இங்கிருந்து நான்கு கி.மீ. தூரத்திலுள்ள பெரியாவுடையாரை தரிசித்துவிட்டு, பின்பு பெரியநாயகியையும், அடுத்து மலையடிவாரத்தில் இருக்கும் திருவாவினன்குடி குழந்தை வேலாயுதரையும் வணங்க வேண்டும். அதன்பின்பே மலைக்கோயிலில் தண்டாயுதபாணியை வணங்க வேண்டும் என்பது ஐதீகம்.

  திருஆவினன்குடி சிறப்பு

  குழந்தை வேலாயுதரை, மகாலட்சுமி (திரு), கோமாதா (ஆ), இனன் (சூரியன்), கு (பூமாதேவி), அக்னி (டி) ஆகியோர் வழிபட்டதால், இத்தலம் திருஆவினன்குடி என்று பெயர் பெற்றது. இவர்களுக்கு இக்கோயில் பிராகாரத்தில் சிலை இருக்கிறது. அருணகிரியார் இவரை வணங்கி, திருப்புகழ் பாட, முருகன் காட்சி தந்ததோடு, ஜபமாலையும் கொடுத்தார். இதனை அருணகிரியார் திருப்புகழில் குறிப்பிட்டு பாடியுள்ளார்.

  பழநி மலையின் வடபுறத்தில் பிரம்ம தீர்த்தம் இருக்கிறது. இந்த தீர்த்தக்கரையில் சிவன், அம்பிகையுடன் ரிஷப வாகனத்தின் மீதும், திருமால் கருடன் மீதும், பிரம்மா அன்னபட்சியின் மீதும் காட்சி தருகின்றனர். மூவரும் மேற்கு நோக்கியிருப்பது சிறப்பம்சம். இத்தீர்த்த நீரை தெளித்துக்கொண்டு மும்மூர்த்திகளையும் வழிபட்டால் பாவம் நீங்கும் என்பது நம்பிக்கை.

  பழநிக்கு வரும் பெண்கள், மலைப்பாதையில் வள்ளி சுனையில் உள்ள வில்வ மரத்தில் திருமாங்கல்யக் கயிறு கட்டி வேண்டிக்கொள்கின்றனர். இங்கு முருகன், வள்ளி திருமண கோலத்தில் காட்சி தருகின்றனர். வில்வமரத்தின் அடியில் வள்ளி தனியாகவும் காட்சி தருகிறாள். சுனையில் உள்ள நாகருக்கு தீர்த்த அபிஷேகமும் செய்கின்றனர்.

  முருகனுக்கு அன்னாபிஷேகம்

  பழநியில் முருகப்பெருமானை மூன்று கோலங்களில் தரிசிக்கலாம். பெரியநாயகி கோயிலில் மயில் வாகனம் இல்லாமல் வள்ளி, தெய்வானையுடன் திருமணக்கோலத்தில் தரிசிக்கலாம். திருஆவினன்குடியில் மயில் மீது அமர்ந்து குழந்தை வடிவில் தரிசிக்கலாம். மலைக்கோயிலில் கையில் தண்டத்துடனும் காட்சி தருகிறார். ஒரே தலத்தில் இவ்வாறு முருகனின் மூன்று கோலங்களையும் தரிசிப்பது அபூர்வம்.

  சிவாலயங்களில் ஐப்பசி பவுர்ணமியன்று, சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படும். ஆனால், பழநி தலத்தில் வித்தியாசமாக முருகனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் மலைக்கோயிலில் அருளும் தண்டாயுதபாணிக்கு உச்சிக்காலத்திலும், ஆனி மூல நட்சத்திரத்தில் திருஆவினன்குடி குழந்தை வேலாயுதருக்கு சாயரட்சை பூஜையின்போதும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. இதற்கு அடுத்த இரண்டு நாட்களில் பூராடம் நட்சத்திரத்தில் பெரியநாயகி கோயிலிலும், உத்திராடம் நட்சத்திரத்தில் பெரியாவுடையார் கோயிலிலும் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

  முதல் வணக்கம் இடும்பனுக்கே…!

  தண்டாயுதபாணி கோயிலுக்குச் செல்லும் வழியில் இடும்பனுக்கு சன்னதி இருக்கிறது. இடும்பன் தோளில் சக்திகிரி, சிவகிரி என்னும் இரண்டு மலைகளை சுமந்துவந்த கோலத்தில் காட்சி தருகிறார். இவரது சன்னதி எதிரில் நந்தி வாகனமும், இடும்பன், கடம்பன் பாதமும் இருக்கிறது.

  இடும்பனுக்கு பூஜை செய்தபின்பே, முருகனுக்கு பூஜை நடக்கிறது. தினமும் அதிகாலை மூன்று மணிக்கு இவருக்கு அபிஷேகம் செய்து, ஐந்து மணிக்கு பூஜை செய்வர். அதன்பின்பே மலைக்கோயிலில் முருகனுக்கு பூஜை நடக்கும். காவடி தூக்கிச்செல்லும் பக்தர்கள், இவரது சன்னதியில் பூஜை செய்து, பேட்டை துள்ளிய பின்பே செல்கின்றனர்.

  இடும்பன் சன்னதியில் அவரது குரு அகத்தியர் உள்ளார். அருகில் இடும்பனும், கடம்பனும் நின்று கொண்டிருக்கின்றனர். அகத்தியர் இங்கிருப்பதால், பக்தர்களுக்கு கமண்டலத்தில் நிரப்பப்பட்ட தீர்த்தம் தரப்படுகிறது. இதனை அகத்தியரே தருவதாக நம்பிக்கை. இதனை பருகிட நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை.

  தைப்பூச விழா சிறப்பு

  தைப்பூசத் திருவிழா, பழநி தலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாக கொண்டாடப்படுகிறது.

  சிவபெருமான் தனித்து நடராஜராக நாட்டியமாடிய திருநாள் மார்கழி திருவாதிரை. அந்த நடனத்தை உமாதேவியான சிவகாமி அருகில் இருந்து ரசித்துக்கொண்டிருப்பாள். அதேபோல, ஆனந்த தாண்டவமாட உமாதேவிக்கும் ஆசை ஏற்பட்டது.

  அந்நடனத்தைக் காண திருமால், வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர் ஆகியோர் வந்தனர். அம்பிகை நடனக்காட்சி அருளிய நாளே தைப்பூச நாளாகும். இவ்வகையில், தைப்பூசம் அம்பிகைக்குரிய நாளாகிறது. ஆனால், முருகத்தலமான பழநியில் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்படுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இவ்வூரில் பெரியநாயகி அம்பிகை கைலாசநாதருடன் தனிக்கோயிலில் அருளுகிறாள்.

  இங்கு சிவன், அம்பாள் சன்னதியின் நடுவில் முருகன் சன்னதி அமைந்துள்ளது. பிரதான வாசலும், கொடிமரமும் முருகன் சன்னதி எதிரிலேயே அமைந்துள்ளது. கோயிலுக்குள் நுழைபவர்கள் முதலில் முருகனையே வழிபட்டனர். காலப்போக்கில், முருகன் சன்னதி எதிரிலேயே தைப்பூச விழாவிற்காக கொடி ஏற்றப்பட்டது.

  தகப்பனை வழிபட வந்தவர்கள், தகப்பன் சுவாமியான முருகனை வழிபட்டனர். இத்தலமும் முருகனோடு தொடர்புடையதாக அமையவே, காலப்போக்கில் முருகனுக்கே தைப்பூச விழா கொண்டாடும் முறை அமைந்துவிட்டது. தற்போதும் தைப்பூச திருவிழா, பெரியநாயகி அம்மன் கோயிலிலேயே நடக்கிறது. விழாவின்போது, இங்குள்ள உற்சவர் முத்துக்குமாரசுவாமி தினமும் எழுந்தருளுவார். இவ்விழாவின் ஏழாம் நாளன்று இக்கோயிலில் இருந்தே தேர் புறப்பட்டு, வீதியுலா செல்கிறது.

  பங்குதாரராக முருகப் பெருமான்

  மிகப்பெரிய ஏராளமான தொழிலதிபர்கள் தங்கள் வியாபாரத்தின் ஒரு பங்குதாரராக இத்தலத்து முருகனை வைத்துக்கொண்டுள்ளனர். தங்கள் தொழிலில் கிடைக்கும் லாபத்தில் முருகனுக்கு தந்துவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

  திருவாவினன்குடி வேலாயுத சுவாமி

  திருவாவினன்குடி ஆலயம் பழனி மலை அடிவாரத்தில் வையாபுரி ஏரிக்கரையில் இருக்கிறது. இவ்வாலயத்தின் வடகிழக்கில் சிறிது தூரத்தில் சரவணப் பொய்கை அமைந்திருக்கிறது. முருகனை தரிசனம் செய்ய வருபவர்கள் இப்பொய்கையில் நீராடிச் செல்வர். இப்பொய்கையின் அருகிலிருந்துதான் காவடி எடுக்கப்போகும் பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகளைக் கொண்டு செல்வர்.

  திருவாவினன்குடி கோயிலில் முருகப்பெருமான் மயில் மீதமர்ந்து குழந்தை வேலாயுத சுவாமியாகக் காட்சி தந்தருள்கின்றார். இங்குள்ள முருகப்பெருமானைத் தரிசிக்கும் பொருட்டு, மகாவிஷ்ணு, சிவபெருமான், இந்திரன் முதலியோர் வந்து இங்கே கூடியதாகவும் நக்கீரர் கூறுகிறார்.

  தல விருட்சம்

  இப்பெருமானை வழிபட்ட பின்பே மலைக்கோயிலுக்கு செல்வது மரபு. இத்திருத்தலம் முன்பு நெல்லிவனமாக இருந்ததற்கான ஓர் ஆதாரம் உண்டு. அது என்னவெனில், இங்கு தல விருட்சம் நெல்லி மரமாகும்.

  திருவாவினன்குடி கோயிலிருந்து ஞான தண்டாயுதபாணியின் கோயில் விளங்குகிறது. இக்கோயிலில் விளங்கும் மலை பழனி மலையாகும். இம்மலைக்கு எதிரில் இடும்பன் மலை என்றழைக்கப்படும் சக்திகிரி காணப்படுகிறது.

  இம்மலையைச் சுற்றி சுமார் மூன்று கி.மீ. தொலைவிற்கு சோலைகள் நிறைந்த அழகிய கிரிப் பிராகாரமும், இப்பிராகாரத்தின் திருப்பங்களில் பெரிய மயிலின் உருவச் சிலைகளை உடைய மண்டபங்களும் இருக்கின்றன. கிரிவலம் மிகவும் சிறப்புடையதாகும்.

  மலைப் பாதையின் முன்பக்கம், மலையின் அடிவாரத்தில் பாத விநாயகர் ஆலயமும், அதற்கு எதிரில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயமும் அமைந்துள்ளன. அருகிலுள்ள மயில் மண்டபத்திலிருந்து 695 படிக்கட்டுகள் நம்மை மலைக் கோயிலுக்கு அழைத்துச் செல்கின்றன. வழி நெடுக இளைப்பாறுவதற்கு ஏற்றவாறு ஏராளமான மண்டபங்களும், இடையிடையே பல ஆலயங்களும் இருக்கின்றன.

  ஆறுமுகனின் ஆண்டிக்கோலம்

  மூன்றாவது படைவீடான இத்திருத்தலத்தில் குமரப் பெருமான் தனது ஆண்டிக் கோலத்தின் மூலமும் குன்றின் உச்சியில் கோயில் கொண்டிருப்பதன் மூலமும் ஒரு உண்மையைப் போதிக்கிறார்.

  ஆனந்தமயமான ஆண்டவனை அடைய வேண்டுமானால், ஆன்மாக்கள் முதலில் பற்றை ஒழிக்க வேண்டும். பற்றை ஒழித்த நிலை நீடிக்க வேண்டுமானால் மனதை இறைவனிடம் செலுத்தினால்தான் முடியும்.

  மூலஸ்தானத்திலுள்ள பழனியாண்டவர் சிலை வடிவில் தோன்றினாலும், உண்மையில் அவரது திருமேனி போகர் எனும் சித்தரால், “நவபாஷாணம்” எனப்படும் ஒன்பது வகை மருந்துகளால் உருவாக்கப்பட்டதாகும்.

  பூஜை சிறப்பு

  இப்படை வீட்டில், முருகப் பெருமான் அபிஷேகப்பிரியராக சிவனின் அம்சமாக விளங்குகிறார். மற்ற திருத்தலங்களைப் போலல்லாமல் இங்கு இரவு பூஜை முடியும் வரை சன்னதி சாற்றப்படுவதில்லை. அதிகாலை முதல் இரவுப் பூஜை முடியும்வரை சதா பன்னீர், சந்தனம், பால், பஞ்சாமிர்தம், திருநீறு ஆகியவற்றால் அபிஷேகங்கள் நடந்தவண்ணமே இருக்கும். அபிஷேகம் செய்யப்பட்ட பொருட்கள் எல்லா நோய்களையும் குணப்படுத்த வல்லவை என்று கருதப்படுகின்றன.

  தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் மூன்றாவது படை வீடு என அழைக்கப்பெறும் முக்கியத் தலம் இது. அவ்வையார் இத்தலத்து மூலவரை தனது பாடல்களில் சித்தன் என்று அழைக்கிறார். இது, தொன்மையான சேரமன்னனும், பாண்டிய மன்னனும் ஒருங்கே போற்றிய திருத்தலம் இது. அன்போடு நினைப்பவர்க்கு ஆராத முக்தி தரும் தலம் இது. தமிழ் இலக்கியங்களில் சித்தன் வாழ்வு என சிறப்பு பெயர் பெற்றது இத்தலம்.

  பழனி பஞ்சாமிர்தம் உலகப்புகழ் பெற்றது. மிக்க அழகுடைய தங்கத் தேர், தங்க மயில் வாகனம் ஆகியவை உள்ள தலம். தமிழகத்தில் உள்ள கோயில்களிலேயே தினந்தோறும் தங்க தேர் இழுத்தலும், அதன் மூலம் ஏராளமான வருமானமும் வரும் கோயில் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தலம் ஏராளமான சித்தர்கள் வாழ்ந்த இடமும் கூட.

  தமிழ்நாட்டில் உள்ள கோயில்களிலேயே அரசுக்கு மிக அதிகமான வருமானத்தை அள்ளித் தரும் முதல் கோயில் இதுவேயாகும். பழநி மலை அடிவாரத்திலிருந்து மலை உச்சிக்கு செல்ல வின்ச் வசதியும், ரோப் கார் வசதியும் உள்ளது.

  ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு சேரமான் பெருமான் என்னும் மன்னனால் இக்கோயில் கட்டப்பட்டது. திருமலை நாயக்கர் காலத்தில் திருப்பணிகள் நடந்துள்ளன. புராண காலத்தலும், சங்க காலத்திலும் ஏராளமாகப் பாடப்பெற்ற சிறப்பு வாய்ந்த திருத்தலம்.

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் – பாடியவர் பாலசந்திரன்

  - கோவை கு. கருப்பசாமி

   

   


  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை
  kattana sevai
  flipboard facebook twitter whatsapp