மகா குருவைத் தேடல்!

குருவின் கடாட்சம் பெற்றவன் உலகையே ஆளலாம் என்பது ஆணித்தனமான உண்மை. ஒவ்வொருவருக்கும்..
மகா குருவைத் தேடல்!

குருவின் கடாட்சம் பெற்றவன் உலகையே ஆளலாம் என்பது ஆணித்தனமான உண்மை. ஒவ்வொருவருக்கும் வழிநடத்த ஒரு குரு அவசியம். குரு என்பவர் தந்தையாக இருக்கலாம், நண்பனாக இருக்கலாம், ஜீவ சமாதி அடைந்தவராகவும், ஆசானாக மற்றும் காவி உடை அணியாதவராகவும் இருக்கலாம். குரு என்பவர் நம்முடைய வழிகாட்டி (mentor) என்று கூறலாம். குரு நம்மைத் தேடி வரமாட்டார் நம் மனம் அவரை தேடிச் செல்லும். பழங்காலம் தொன்றுதொட்டு எல்லா மதத்தினரும் குருவை கடவுளின் தூதராகவும், கடவுளுக்கு நிகராகக் கருதப்பட்டு வந்தனர். குரு என்பவர் ஞானத்தைக் கொடுக்கும் ஒரு ஆசானாக, இருளை அழிப்பவனாக, வாழும் ஒவ்வொருநொடியும் உண்மையான வழிகாட்டுபவனாக, குருட்டை நீக்குபவனாக, நித்திரையிலும் நம் கேள்விக்கு பதிலை சொல்லுபவனாக, சொல்லிக்கொடுக்கும் ஒரு ஆசானாக, தவறுகளைத் திருத்துபவனாக, கடவுளுக்கு நிகராக இருப்பவராக இருக்க வேண்டும்.
 
சார் குருவானவர் நம் கர்மாக்களை அகற்றிவிடுவாரா என்ற கேள்வி என்காதில் விழுகிறது. பாவங்களையும் கர்மாக்களையும் கழிக்கமாட்டார். ஆனால், அதற்கான கழிக்கும் முறைகளை சொல்லிக்கொடுத்து வழிநடத்துவார் என்று சொல்லளவுதான் சரி. குரு சிஷ்யன் உறவு இப்படிதான் இருக்க வேண்டும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக ஒரு அர்ஜுனனுக்கு கிருஷ்ண பரமாத்மாவும், ஸ்ரீராமனுக்கு வசிஷ்டரும், ஹனுமனுக்கு சூரிய பகவானும், போகரை மிஞ்சிய சிஷ்யன் புலிப்பாணி என்று வரிசைப்படுத்திக் கொள்ளலாம். இந்த கலியுகத்திலும் இன்றும் நிறைய பேரின் மனதில் குருவாக குடிகொண்டவர் நம் எளிமையனாக ஞானக்கடல் காஞ்சி மகா பெரியவா தான். நாம் ஏற்றுக்கொள்ளும் குருவானவர், ஜாதகத்தில் சூரியனின் ஒளிக்கதிருடன் கூடிய முழு சுபரான குரு ஆட்சியோ, உச்சமோ, பெற்று லக்கின திரிகோண, கேந்திரத்தில் பலத்துடன் இருப்பார்கள் என்பது வேத ஜோதிடத்தில் உள்ள ஒரு விதி ஆகும்.

குருவாக தகுதி அற்றவர்:

இக்கால கட்டத்தில் ஆன்மீக கதை கூவி கூவி விற்கும் போலி சாமிகளாக, பஞ்சணையில் படுத்து, பண பெருச்சாளிகளாக, செல்வந்தர்களை காலியாக்கும் ஊழ்வினை மிக்க காவி உடை உடுத்தி, பேசுவதே தெளிவு இல்லாமல் இருக்கும் கூட்டம் அதிகம் உள்ளது. இத்தகைய கபடதாரிகளான குருமார்களைத் தவிர்த்து உண்மையான மெய்ஞ்ஞானியை ஒருவன் குருவாக ஏற்றுக்கொண்டால் அவனது சஞ்சித கர்மாக்களை அந்த குரு நிர்மூலமாக்குவார்.

எப்படி எல்லாம் குரு இருக்கக் கூடாது என்று வள்ளுவ பெருமான் தன் குறளில் கூறுவது..

மனத்தது மாசாக மாண்டார் நீராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்            
(திருக்குறள் 278 )

மனத்தில் நிறைந்திருப்பது குற்றமாக இருக்க, வெளி உலகுக்குத் தவ ஒழுக்கத்திற்குச் சிறந்தவர் போல் நடித்து நீரில் முழுகி, மறைந்த ஒழுக்கம் உடைய மக்கள் இவ்வுலகில் பலராவர், துறவிகளின் போலித் தோற்றத்தையும் மறைந்து தீயவை செய்தொழுகுவார். பலர் உலகத்தில் உண்மைத் துறவிகளைவிட வஞ்சகத் துறவிகளே நிறைய உள்ளனர் என இப்பாடலில் சொல்லப்பட்டது. அவர்கள் பற்றி விழிப்புடன் இருக்கவேண்டும் என்பது வள்ளுவனின் கூற்று.

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழி விழுமாறே.  . . .             (1680)

திருமூலர்- திருமந்திரம் பொருள்:

அஞ்ஞானக் குருட்டுத்தனத்தை நீக்க முடியாத தகுதியற்ற குருவினைக் குருவாக ஏற்றுக் கொள்வது என்பது ஓர் குருடன் மற்றொரு குருடனை வழிகாட்டியாக எடுத்துகொள்வதற்கு சமானதாகும். குருடனுக்கு குருடன் வழிகாட்டிக்குழியில் விழுவதைப் போல, போலி குருவுடன் முட்டாள் சீடனும் சேர்ந்து அஞ்ஞானப்பள்ளத்தில் விழ நேரிடும் என்பது பொருள். திருமூலர் எச்சரித்ததைப்போன்ற வேடிக்கையான கலிகாலத்தில் தான் நாம் இன்றும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். 

சிறுவயதிலிருந்து நம் வாழ்க்கையில் நிறைய குருமார்கள் வந்துபோகின்றனர். ஆனால் கடைசிவரை நம்முடைய குரு ஒருவரை நாம் நிர்ணயிக்க வேண்டும். என் தந்தை, பள்ளி ஆசிரியர்கள், வேலை செய்யும் இடத்தில் உள்ள தலைமை அதிகாரிகள் மற்றும் என் ஜோதிட ஜாம்பவான்கள் எனப் பெரிய பெரிய குருமார்கள் இருந்தார்கள். தற்பொழுது என் மானசீக குருவாக கடுகளவும் ஆசைப்படாத, எனக்கு என்ன வேண்டுமோ அதைக் கேட்காமல் தருபவராக, ஞானத்தின் வழிகாட்டுபவராக, என் அப்பாவாக, தாத்தாவாக, என் குருவாக படிப்படியாக என்னை ஆட்கொள்ளும் என்னுள் குடிகொண்டிருக்கும் பெரியவாளுக்கு, சாயிநாதரையும் மனதார இன்றுவரை பூஜிக்கும் என் குருவானவர்கள். ஆனால் புறம் என்னும் கோட்டில் இன்றுவரை இக்கலிகாலத்தில் உண்மையான குருவை நான் இன்னும் தேடிக்கொண்டே இருக்கிறேன். குரு இப்படி தான்இருக்க வேண்டும் என்பது போல சிஷ்யர் எப்படி இருக்கவேண்டும் என்று ஒரு வரைமுறை தொகுப்பும் உள்ளது, அவற்றை பின்பு பார்ப்போம். 

குருவை நமஸ்கரிப்பதால் நாம் வாழும் வாழ்க்கையில் தடைகள் சிறிது விளக்கப்படும். குருவினை தேடுகிறேன் என்று தவறானவர்களை குருவாக ஏற்றுக்கொள்ளாதீர்கள். குரு என்பவரை நீங்கள் தேடக்கூடாது அவராக உங்களுக்கு யாராவது ரூபத்தில் நித்திரையில் காண்பீர் அல்லது ஜீவ சமாதி அடைந்த கடவுளின் தூதர்கள் உங்களுக்குக் காட்சி புரிவார் அவர்களை குருவாக ஏற்றுக்கொள்ளுங்கள். தவறான சந்நியாசியை நோக்கி நீங்கள் செல்ல வேண்டாம் என்பது என் பணிவான வேண்டுகோள்.

குருவிற்கு நமஸ்காரம் 

- ஜோதிட சிரோன்மணி தேவி

Whats app: 8939115647
Email: vaideeshwra2013@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com