ஒருவரின் ஜாதகக்கட்டம் அவரின் உடல் நலனையும், அவருக்கு வரவிருக்கும் நோய்களைப் பற்றியும் கூறுமா?

ஒருவரின் உடம்பை முக்கியமாக நிலை நிறுத்துவது எலும்பு மட்டுமே. அது மொத்தம் 5 வகைப்படும்.
ஒருவரின் ஜாதகக்கட்டம் அவரின் உடல் நலனையும், அவருக்கு வரவிருக்கும் நோய்களைப் பற்றியும் கூறுமா?

ஒருவரின் உடம்பை முக்கியமாக நிலை நிறுத்துவது எலும்பு மட்டுமே. அது மொத்தம் 5 வகைப்படும். அதாவது தட்டையானது, நீளமானது, குட்டையானது, ஒழுங்கற்றது மற்றும் ஒரு குழந்தை பிறக்கும் போது 270 ஆக இருக்கும் எண்ணிக்கை மெது மெதுவாக வளரும்போது 206 ஆக குறைந்துவிடுகிறது. அதற்கு முக்கியமாக சில எலும்புவகைகள் ஒன்றோடொன்று இணைந்து விடுவதே காரணமாகிறது. 

நடுமுதுகெலும்பு, மார்பெலும்பு , தலை எலும்பு என மொத்தம் இந்த பகுதிகளில் 80 எலும்புகளும், கை , கால், தோள் பட்டை, இடுப்பு பகுதி என இவை அனைத்துமாக 126 எலும்புகளும் உள்ளது. இந்த எலும்புகள் நமது உடலுக்கு 5 வகையில் செயல்படுகிறது. அதாவது, நம் உடலுக்கு ஆதாரமாக, 1. உடலின் அசைவுக்காக, 2. உடலை பாதுகாப்பதற்காக, 3. ரத்த அணுக்கள் உற்பத்தி செய்வதற்காக, 4. தாதுக்களை சேமிக்கும் இடமாக, மற்றும் 5.நாளமில்லா சுரப்பிகளின் கட்டுப்பாட்டிற்காக. என்ன அதிசயம் பாருங்கள். இவற்றை நாம் காப்பது முக்கியம் தானே.

இதை தவிர தசைகள், ரத்த நாளங்கள், குடல் போன்றவைகளையும் கண், மூக்கு, செவி, வாய் போன்றவைகளையும் நோயின் பாதிப்பு விடுவதில்லை . இவை அத்தனையையும் ஜோதிடம் மூலம் அதன் தாக்குதலுக்கான காரணம், நேரம், அது குணப்படுத்த முடியுமா அல்லது முடியாத என்றெல்லாம் கூட கூற முடியும். இன்றைக்கு கூட வசதி நிறைந்தவர்கள் ஒரு சிறந்த ஜோதிடரின் கணிப்பிலேயே தனது வாழ்நாளை தள்ளுகிறார்கள் என்றால் அது உண்மையே. அதற்கெல்லாம் ஜோதிடம் பார்க்க வருபவர்களுக்கும், பார்க்கிறவர்களுக்கும் பொறுமை மற்றும் வசதியும் அவசியம் தேவை என்பதை யாராலும் மறுக்க முடியாது.

சரி, ஒரு ஜாதகர், பொதுவாக நோயால், தாக்கப்படக்கூடியவரா , அல்லது எதிர்ப்பு சக்தி கொண்டவரா என முதலில் கண்டறிதல் வேண்டும். பிறகு தான் என்னென்ன நோய்கள் அந்த ஜாதகரை தாக்கக்கூடும் என்பதனை கண்டறிய வேண்டும். இப்போது நான் சொல்ல விரும்புவது, ஒரு சாதாரண, சுமாரான ஜோதிட தகவல்களை அறிந்தவர்கள் எப்படி நோயின் தாக்கம் கொண்ட ஜாதக அமைப்பு கொண்டவரா இல்லையா என அறிதலைப் பற்றியே ஆகும்.

ஒருவரது ஜாதகத்தில், பின்வருவனவற்றை புரிந்து தெரிந்துகொண்டால், அப்படிப்பட்ட ஜாதகருக்கு நல்ல உடல் நலம் இருக்கும் என்பதனை அறுதியிட்டு கூறிவிட முடியும். 1. லக்கினம் கெடாமலிருந்தால், 2. லக்கின அதிபதி கெடாமல் இருந்தால், 3.ஆறாம் பாவத்தில் பாவக்கிரகம் இல்லாமல் இருந்தால், 4. சந்திரன் சுபகிரகங்களின் தொடர்பில் இருந்தால்; அப்படிப்பட்ட ஜாதகருக்கு எந்த நோயும் அவ்வளவாக தொல்லை கொடுப்பதில்லை என்பதும் அவரின் உடல் நலமாக இருக்கும் என்றும் சொல்லலாம்.

அதே சமயம் ஒருவரின் லக்கினாதிபதி பாதிக்கப்பட்டு இருந்தால், 2. நீச்ச ராசியில் இருந்தால், 3. அஸ்தங்கம் அடைந்திருந்தால், 4. ராகு / கேது  வால் பாதிக்கப் பட்டு இருந்தால், 5. கிரக யுத்தத்தில் தோல்வியுற்று இருந்தால், 6. பரிவர்த்தனையில் பாதிக்கப்பட்டு இருந்தால், 7. லக்கினம், லக்கின அதிபதி பாவ கிரகங்களுடன் இருந்தால், லக்கின அதிபதி 6 , 8 , 12 க்கு உடையவர்களுடன் இருந்தால் ; இப்படிப்பட்ட ஜாதகர் உடல் நலம் இல்லாமல் இருக்கவும், நோயின் தாக்கத்திற்கு உட்படவும் கூடும் என்பதில் ஒரு துளியும் மாற்றம் இல்லை.  

நோயின் கால அளவை ஜோதிடம் கூறுமா ?

அப்படியே ஒருவருக்கு நோய் வந்துவிட்டது என்று கூறினாலும் , அது எவ்வளவு காலம் அந்த ஜாதகரை நோய்க்கு உள்ளாக்கும் என்பதனைப் பற்றியும் ஜோதிடம் மூலம் அறிய முடியும். அதாவது ஒருவரின் ஜாதகத்தில் சனியினால் பாதிப்பு ஏற்பட்டதாக கூறினால், அது ஒரு வருடம் வரை நோயின் வீரியம் இருக்கும். சூரியன் 6 மாதங்களும், புதன் 2 மாதங்களும், குரு 1 மாதமும், சுக்கிரன் 15 நாட்களும், செவ்வாய் 1 நாளும், சந்திரன் 45 நிமிடங்களுமான கால அளவில் நோயின் வீரியம் இருக்கும். ஆனால் ஒருவருக்கு ஏற்பட்ட நோய் பல கூட்டு கிரகங்களால் வந்ததென அறியும் போது மேற்சொன்ன கூட்டுத்தொகையில் நோயின் கால அளவு பாதிப்பதாக இருக்கும். இந்த ஜோதிட நோயின் கால அளவு எல்லா மருத்துவத்திற்கும் பொருந்துவதாக இல்லை. அதிகமாக இது பொருந்திபோவது சித்த மருத்துவத்திற்கு மட்டுமே என்பதை சில பழைய நூல்களில் உள்ளது. 

மேற்சொன்னவைகள் மட்டும் அல்லாமல், ஒரு ஜாதகருக்கு எந்தெந்த நோய்கள், உடலின் எந்தெந்த உறுப்பை பாதிக்கும், அவை குணம் பெறுமா அல்லது அது வீரியம் பெற்று அறுவை சிகிச்சை வரை செல்லுமா அல்லது ஜாதகரை அந்தகன் கை சேர்க்குமா என்பதனையும் அறிய முடியும். ஆகவே இந்த கால இளைய வர்க்கத்தினர் இந்த ஜோதிடத்தை நன்கு பயின்று வருங்கால மானிட சமுதாயத்தை நோயின் தாகத்திற்கு முன்னதாகவே எடுத்துக்கூறி அவர்களை நெறிப்படுத்த  வேண்டுமாய் இந்த கட்டுரையின் வாயிலாக கேட்டுக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன். 

ஒவ்வொரு கிரகங்களும், ஒவ்வொரு விதமான நோய் தாக்கத்தை அளிக்கவே செய்யும். உதாரணமாக, சூரியன், இது தேய்மானம் இல்லாத, எந்த காரணத்திற்காகவும் ஒரு செயலை நிறுத்தாத, வலி உணர்வுகளை உணர்த்தாத சில உறுப்புக்களான மூளை, வயிறு, இருதயம், மற்றும் முதுகெலும்பு போன்றவற்றிக்கு ஆதாரமானது. அதே போல், உடலில் ஏற்படும் கண்டறியமுடியாத நோய்களையும், புதுவகை கிருமிகளையும், எளிதில் குணமாகாத நோய்களையும், பலரும் அருவருக்கத்தக்க நோய்களையும் ராகு உணர்த்தும். ஒரு ஜாதகரின் ஜனன கால ஜாதகத்தில் உள்ள 6 ஆம் பாவகத்தை ஒவ்வொரு கோள்களுக்கான காரகத்துவதுடன் உடல் உறுப்புகளை இணைத்து, நட்சத்திரத்தை நரம்புகளோடு ஒப்பிட்டு, குறிப்பிட்ட நோய்க்கான காரக உருப்பைக் கண்டு, இந்த உறுப்பில் தான் நோய் உண்டாகும் என ஆணித்தரமாக கூறி ஆய்வு செய்யும் எனது குருவின் பாதம் பணிந்து இந்த கட்டுரையை இந்த அளவில் நிறைவு செய்கிறேன். 

சாயியைப் பணிவோம் நன்மைகள் யாவும் அடைவோம்.

- ஜோதிட ரத்னா தையூர். சி. வே. லோகநாதன்

தொடர்புக்கு :  98407 17857
                                                                                 

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com