Enable Javscript for better performance
அஹோபிலம் அஹோபலம்!- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

  அஹோபிலம் அஹோபலம்!

  By ஆசிரியர் கி. வைத்தியநாதன்  |   Published On : 07th November 2019 07:36 PM  |   Last Updated : 16th November 2019 02:47 PM  |  அ+அ அ-  |  

  Nava_Narasimha1_Temples

  ஸ்ரீ நவ நரசிம்மர்

  "அஹோவீர்யம் அஹோசௌர்யம் அஹோபாஹ பராக்ரம:

  நரசிம்மம் பரம் தெய்வம் அஹோபலம் அஹோபிலம்''

  திருமாலின் பத்து அவதாரங்களிலும் தனிச்சிறப்புப் பெற்ற அவதாரமாகக் கருதப்படுவது நரசிம்ம அவதாரம். மக்களின் அபயக் குரலுக்கு நொடிப்பொழுதில் செவி சாய்த்த அவதாரம் அது. 

  "தூணிலும் இருப்பார் நாராயணன், துரும்பிலும் இருப்பார் நாராயணன்'' என்கிற பிரகலாதனின் வாதம் கேட்டுக் கோபமடைந்த அவனது தந்தை அரக்கர் குல வேந்தன் இரண்யன், "இந்தத் தூணில் இருக்கிறானா உன் நாராயணன்?'' என்று தனது கதையால் தூணை அடித்த மாத்திரத்தில், தூணைப் பிளந்து கொண்டு வந்த நாராயணனின் அவதாரம் நரசிம்மம்.

  பகலிலோ இரவிலோ, வீட்டிற்கு உள்ளோ புறமோ, மனிதனோ மிருகமோ, ஆயுதமோ கைகளோ, நீரோ நெருப்போ எதுவாலும் தனக்கு மரணம் நேரக் கூடாது என்று சிவபெருமானிடம் சாகாவரம் வாங்கியிருந்த அரக்கர் வேந்தன் இரண்யனின் அகந்தையை அழிக்க, மனிதனும் மிருகமும் அல்லாத நரசிம்மராக, பகலும் இரவுமல்லாத அந்தி வேளையில், வீட்டிற்கு உள்ளும் புறமுமில்லாத வாசற்படியில், மண்ணிலோ விண்ணிலோ அல்லாமல் தனது மடியில் கிடத்தித் தனது கூரிய நகங்களால் வயிற்றைக் கிழித்து, பக்தப் பிரகலாதனின் உயிரையும், வார்த்தையையும் காப்பாற்றிய நரசிம்மரின் அவதாரத்துக்கான தனிச்சிறப்பு, கூப்பிட்ட குரலுக்குச் செவி சாய்ப்பவர் என்பதுதான்.

  சிம்ம கர்ஜனையுடன் ஆக்ரோஷ மூர்த்தியாக பயங்கர உருவத்துடன் தோற்றமளிக்கும் நரசிம்மரைக் கண்கண்ட தெய்வம் என்று கொண்டாடுவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அவரது ஆக்ரோஷமும், அடங்காச் சினமும் தாயாரின் ஸ்பரிசத்தில் அடங்கிப் போய், அருள்பாலிக்கும் அற்புதம்தான் அது. லெட்சுமியின்  பிரியனாக மாலோலனாகத் தாயாரைத் தனது மடியில் அமர்த்தியபடி அருள்பாலிக்கும் லட்சுமி நரசிம்மர், கேட்ட வரம் வழங்கும் கண்கண்ட தெய்வமாக விளங்குவதில் வியப்பென்ன இருக்கிறது.

  வாயு புராணம், அக்னி புராணம், பிரம்மாண்ட புராணம், மத்ஸ்ய புராணம், விஷ்ணு புராணம், நரசிம்ம புராணம், கூர்ம புராணம், செளர புராணம், பாகவத புராணம் என்று பல்வேறு புராணங்களில் நரசிம்மர் குறித்து எடுத்தியம்பப்பட்டிருக்கின்றன. புராணங்கள் மட்டுமல்ல, நரசிம்மர் குறித்த பல கல்வெட்டு ஆதாரங்களும்கூடக் கண்டறியப்பட்டிருக்கின்றன.

  நான்கு முதல் எட்டாம் நூற்றாண்டு வரையிலான பல கல்வெட்டுச் சான்றுகள் கிடைத்திருக்கின்றன. சியால்கோட்டைத் தலைநகராகக் கொண்ட பஞ்சாப் மாநிலத்தின் மாத்ரகா அரசர்கள், நரசிம்ம பக்தர்களாக இருந்ததற்கான சான்றுகள் காணப்படுகின்றன.  இந்தியாவில் கிழக்குக் கடற்கரைப் பகுதியில்தான் நரசிம்ம வழிபாடு அதிகமாகக் காணப்படுகிறது. ஆறாம் நூற்றாண்டு சாளுக்கியர்களின் தலைநகரான பதாமியில் நடத்தப்பட்டிருக்கும் அகழ்வாராய்ச்சி நரசிம்மரின் உருவம் பதித்த தூண்களையும், கற்சிலைகளையும் வெளிக்கொணர்ந்திருக்கிறது.

  தமிழகத்திலேயே, காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த பல்லவர்கள் நரசிம்ம  பக்தர்களாக இருந்திருக்கிறார்கள். நரசிம்ம பல்லவனின் காலத்தில்தான் மகாபலிபுரம் சிற்பக் கலையின் உச்சத்தைத் தொட்டது என்பதும், அவரது குடவரைக் கோயில்களில் நரசிம்மர் உருவம் காணப்படுவதையும் அதற்கு ஆதாரமாகச் சொல்லலாம்.

  தமிழகம், கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா பகுதிகளில் நரசிம்மர் ஆலயங்கள் காணப்பட்டாலும், நரசிம்மரின் முதல் ஆலயமும், மூலஸ்தானமும் ஆந்திர மாநிலம் அஹோபிலம்தான். கிழக்குத் தொடர்ச்சி மலையின் பகுதியான நல்லமலைப் பகுதியில் அமைந்திருக்கும் அஹோபிலம், புராணங்கள் குறிப்பிடும் பிரகலாத சரித்திரம் நிகழ்ந்த இடம் என்பதால் அதன் முக்கியத்துவம் அதிகரிக்கிறது. ஏனைய இடங்கள், நரசிம்மருக்கு எழுப்பப்பட்டிருக்கும் ஆலயங்கள். ஆனால், அஹோபிலம் என்பது நரசிம்மர் தோன்றிய இடம். அவரது அவதாரத் தலம்.

  சோளிங்கர்,  நாமக்கல்,  பரிக்கல்,  பூவரசங்குப்பம்,சிங்கிரிக்குடி, சிங்க பெருமாள் கோவில், அந்திலி, சித்தலவாடி என்று தமிழகத்தில் உள்ள அஷ்ட நரசிம்மர் கோயில்களுக்கெல்லாம் போயிருந்தாலும்கூட, நீண்ட நாள்களாகவே அஹோபிலம் சென்று நரசிம்மரைத் தரிசிக்கவில்லையே என்கிற குறை அடிமனத்தின் ஆழத்தில் இருந்து வந்தது. நினைத்த மாத்திரத்தில் தரிசித்து வரக் கூடியதல்ல அஹோபிலம் என்று எனக்கு நானே ஆறுதல் சொல்லிக் கொண்டேன்.

  நரசிம்மர் அழைக்காமல் அஹோபிலம் சென்றுவிட முடியாது, அப்படியே சென்றாலும்கூட, மலையிலுள்ள நவ நரசிம்மர்களை தரிசித்து விட முடியாது என்கிற உண்மை தெரிந்திருந்ததால்,  நராயணனின் கருணைப் பார்வைக்காகப் பல ஆண்டுகள் காத்திருந்தேன்.

  அஹோபிலத்தின் அழைப்புக்காக நான் வருடக்கணக்காகக் காத்திருந்தது வீண் போகவில்லை. பெரியவர் ஏ.எம். ராஜகோபாலனுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது, நவக்கிரகக் கோயில்கள் குறித்த பேச்சு வந்தது. "அஷ்ட நரசிம்மர்கள்' போல "நவ நரசிம்மர்கள்' எங்கிருக்கிறார்கள் என்றபோது, "அஹோபிலம் போங்கள்' என்று சொன்னதுடன் நிற்கவில்லை அவர். "எப்போது அஹோபிலம் கிளம்புகிறீர்கள்?'' என்றும் தொடர்ந்தார்.

  பின்னர் மின்னல் போல என்னுள்ளே ஒரு பொறி தட்டியது. சட்டென்று அது பற்றிக் கொண்டுவிட்டது. "அஹோபிலம்', "அஹோபிலம்' என்று உள் மனதின் ஆழத்தில் அமிழ்ந்து கிடந்த அந்த ஆவல், பீறிட்டு எழுந்தது. என்னையறியாமலேயே "உடனே' என்று வெளிப்பட்டது பதில்.

  சென்னையிலிருந்து அஹோபிலம் போவதென்றால், ஆந்திர மாநிலம் கர்னூலுக்குப் போய் அங்கிருந்து அல்லகட்டா வழியாக அஹோபிலம் சென்றடைய வேண்டும். சென்னையிலிருந்து 370 கி.மீ. தூரத்தில் இருக்கும் அஹோபிலத்துக்கு உடனே செல்ல வேண்டும் என்று மனது துடித்தது. கர்னூலுக்கு விமானத்தில் போகலாமா, ரயிலில் போகலாமா என்று ஒரு யோசனை. அங்கிருந்து 170 கி.மீ. தூரம் காரில் பயணித்து அஹோபிலம் அடைவதற்கு, சென்னையிலிருந்தே காரில் பயணித்துவிட்டால்தான் என்ன என்றது இன்னொரு மனம்.

  "அவசர அவசரமாகப் போய் ஒன்பது நரசிம்மர்களையும் தரிசித்துவிட்டு வர முடியாது. இரண்டு நாள் தங்குவது போலப் போங்கள்'' என்று பெரியவர் ஏ.எம்.ஆர். ஏற்கெனவே கூறியிருந்தார். அதிகாலை மூன்று மணிக்குக் காரில் கிளம்பி, மதிய உணவுக்கு அஹோபிலம் சென்றுவிடலாம் என்று முடிவெடுத்தேன். தனியாக எப்படிப் போவது, நண்பர்களும் இணைந்து கொண்டனர்.

  அஹோபிலம் நோக்கி நாங்கள் கிளம்பி விட்டோம். அஹோபிலம் என்ன பக்கத்திலா இருக்கிறது? 370 கி.மீ. தூரம் சென்னையிலிருந்து. நவ நரசிம்மர்களை தரிசிக்கப் போகிறோம் என்கிற ஆர்வத்துக்கு முன்னால், காலமும் தூரமும் கைகட்டி சேவகம் செய்ய முன்வந்ததில் வியப்பென்ன இருக்கிறது?

  கிழக்குத் தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் நல்லமலைப் பகுதி புராண காலத்தில் அரக்கர் தலைவர் இரண்யனின் ஆட்சிக்கு உட்பட்டதாக இருந்திருக்கிறது. கிழக்குத் தொடர்ச்சி மலையின் அமைப்பே ஆதிசேஷன் படுத்திருப்பது போலக் காட்சியளிக்கிறது. அதன் தலைப் பகுதியில் திருப்பதி திருமலையும், மையப் பகுதியில் அஹோபிலமும், வால் பகுதியில் ஸ்ரீ சைலமும் அமைந்திருக்கின்றன.

  கருட புராணத்தின்படி, இந்த மலைப் பகுதியில் நரசிம்ம தரிசனத்துக்காகப் பல ஆண்டுகள் கருடன் தவமிருந்ததாகக் கூறப்படுகிறது. இரண்யனை வதம் செய்த உருவத்துடன் நரசிம்மர் கருடனுக்குக் காட்சி அளித்தபோது, கருடன் வியந்து போய் "அஹோ பலா' (இதோ பலம்) என்று குரலெழுப்பியதாகவும் அதனால் இந்த இடத்துக்கு "அஹோபலம்' என்று பெயர் வந்து, அது மருவி அஹோபிலமானதாக ஒரு கருத்து.

  இரண்யனை வதைத்தைப் பார்த்துக் கொண்டிருந்த முப்பது முக்கோடி தேவர்களும், நரசிம்மரின் உக்கிரத்தைப் பார்த்து மிரண்டு போய்

  "அஹோவீர்யம் அஹோசௌர்யம்

  அஹோபாஹ பராக்ரம:

  நரசிம்மம் பரம் தெய்வம்

  அஹோபலம் அஹோபிலம்'' 

  - என்று கோஷம் எழுப்பியதாகவும், அதனால் அஹோபலம் என்று பெயர் வந்ததாகவும் இன்னொரு கருத்து.

  கருடனுக்கு நரசிம்மர் காட்சியளித்த குகையைப் பார்த்து "அதோ குகை' என்று அடையாளம் சொல்லப்பட்டதாகவும் அதனால்தான் "அஹோபிலம்' (அதோ குகை) என்று பெயர் வந்ததாகவும் கூடக் கூறுகிறார்கள். 

  அஹோபிலத்துக்குப் பெயர் வந்ததன் காரணம் எதுவாக இருந்தாலும், அஹோபிலமும் நரசிம்மரும் புராண இதிகாச காலங்களுக்கு முன் வந்ததாக இருந்திருக்க வேண்டும் என்பது மட்டும் உண்மை.

  நரசிம்மர் குறித்த பதிவுகள் தைத்ரேய ஆரண்யகாவிலும், மகாநாராயண உபநிடதத்திலும் காணப்படுகின்றன. கிருதா யுகத்தில் சிவபெருமானும், திரேதா யுகத்தில் ஸ்ரீ ராமர் சீதையும், துவாபர யுகத்தில் பாண்டவர்களும், அஹோபிலத்தில் நரசிம்மரை வழிபட்டதாகக் தல வரலாறு கூறுகிறது.

  இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள பல பிரபல ஆலயங்களுக்கு ஆதிசங்கரர் எந்தவிதப் போக்குவரத்து வசதிகளும் இல்லாத காலத்தில் சென்றிருப்பது அவரது தெய்வீக சக்தியின் எடுத்துக்காட்டு. ஆதிசங்கரரால் "சுதர்சன சக்கரம்' ஸ்தாபிக்கப்பட்ட கோயில்கள்தான் அதீத சக்திபெற்ற திருத்தலங்களாகத் திகழ்கின்றன. அஹோபிலத்துக்கு ஆதிசங்கரர் வந்திருப்பதன் அடையாளமாக இங்கே அவரால் சுதர்சன சக்கரம் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது.

  ஆதிசங்கரர் காபாலிகர்களால் தாக்கப்பட்டதும், நரசிம்மர் அவரைத் காப்பாற்றியதும், "லக்ஷ்மி நரசிம்ம கராவலம்ப ஸ்தோத்திரம்' அவரால் இயற்றப்பட்டதும் அஹோபிலத்தில்தான். ஸ்ரீ அஹோபில நரசிம்மர் ஆலயத்தில் அவரால் சிவலிங்கம் ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. அவரால் நரசிம்ம பஞ்சரத்ன ஸ்தோத்திரம், நரசிம்ம ஸ்தோத்திரம் ஆகியவையும் இயற்றப்பட்டிருக்கின்றன.

  அத்வைத சித்தாந்தம் தந்த ஆதிசங்கரரைப்  போலவே, "த்வைதம்' தந்த ஸ்ரீ மாத்வச்சாரியாரும் அஹோபிலத்துக்கு வந்திருக்க வேண்டும். அவரது வருகைக்கான ஆதாரமோ, குறிப்போ இல்லை என்றாலும், அவரால் இயற்றப்பட்ட "நரசிம்ம ஸ்துதி' நரசிம்மரிடம் அவருக்கிருந்த பக்தியை வெளிப்படுத்துகிறது.

  "பாஷ்யக்காரர்' என்று போற்றப்படும் விசிஷ்ட அத்வைதம் சொன்ன ஸ்ரீ ராமானுஜரும், ஸ்ரீ வேதாந்த தேசிகரும் அஹோபிலம் வந்திருக்கிறார்கள். ஆழ்வார்களில் திருமங்கை ஆழ்வார் அஹோபிலம் வந்திருக்கிறார் என்பது மட்டுமல்ல, பெரிய திருமொழியில் பத்துக்கும் அதிகமான பாசுரங்கள் மூலம் துதித்துப் போற்றியிருக்கிறார். 

  "தினைத்தனையும் செய்ய 

  ஒண்ணாச் சிங்கவேழ் குன்றமே...''

  -என்று திருமங்கையாழ்வாரால் போற்றப்பட்ட அஹோபிலத்துக்கு, பக்தி இயக்கத்தின் முன்னோடி சைதன்யர் வந்திருப்பது பதிவாகி இருக்கிறது.
  ஸ்ரீ ராமானுஜருக்கும், ஸ்ரீ வேதாந்த தேசிகருக்கு பிறகு விசிஷ்டாத்வைதத்தைப் பரப்பவும், வைணவத்தைப் பாதுகாக்கவும் தலைமை இல்லாத வெறுமை ஏற்பட்டபோது, மைசூருக்கு அருகிலுள்ள மேல்கோட்டையில் அவதரித்த கிடம்பி ஸ்ரீநிவாச்சாரியாருக்கு நரசிம்மரிடமிருந்தே அழைப்பு வந்தது.

  தனது 19-வது வயதில் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் சந்நிதியில் சாஸ்திரங்கள் படித்துக் கொண்டிருந்த ஸ்ரீநிவாசாச்சாரியாரின் கனவில், "அஹோபிலத்துக்கு வா... உனக்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன்' என்று நரசிம்மர் கூறி மறைந்தார். அஹோபிலத்தில் வயதான யோகி ஒருவர் அவரை வரவேற்று வேத, வேதாந்தங்களையும், நரசிம்ம மந்திரத்தையும் பயிற்றுவித்தார். சந்நியாசம் பூணச் சொல்லி உத்தரவிட்டு, த்ரிதண்டத்தையும் சங்கு சக்கரங்களையும் வழங்கினார். அவருக்கு "சடகோபயதி' என்கிற திருநாமத்தையும் சூட்டினார்.

  இத்தனையும் செய்துவிட்டு அந்த யோகி மாயமாய் மறைந்தபோதுதான், சாட்சாத் நரசிம்மரே தனக்கு குருவாக இருந்து, துறவு பூண வைத்திருப்பதை உணர்ந்தார் "சடகோப யதி' என்று மாறிவிட்டிருந்த ஸ்ரீநிவாசச்சாரியார், அவரால் ஸ்தாபிக்கப்பட்டதுதான் "அஹோபில மடம்'.

  அஹோபில மடத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் ஸ்ரீவண் சடகோப யதீந்திர மகாதேசிகன்' என்று அழைக்கப்படுகிறார்கள். ஜீயர் என்றும் அழகிய சிங்கர் என்றும் குறிப்பிடப்படும் இவர்களது தலைமைப் பீடம் அஹோபிலம். அந்த  குரு பாரம்பரியம் இப்போதைய 46}வது ஜீயரான ஸ்ரீவண் சடகோப ஸ்ரீ ரங்கநாத யதீந்திர மகா தேசிகன் வரை தொடர்கிறது. அஹோபிலத்தில் உள்ள ஆலயங்கள் அனைத்தும் அஹோபில மடத்தின் மேற்பார்வையில்தான் இருக்கின்றன.

  இதுவரை அஹோபிலம் குறித்தும், அதன் அருமை பெருமைகள் குறித்தும் விவரமாகவே கூறிவிட்டேன். இந்தப் பின்னணியைத் தெரிந்து கொண்டுதான், அஹோபில நவ நரசிம்மர்களை தரிசிக்கும் புனிதப் பயணத்தைத் தொடங்க வேண்டும். ஏனைய புனித யாத்திரைகளுக்கும் அஹோபில யாத்திரைக்கும் வித்தியாச முண்டு என்பதை முதலிலேயே குறிப்பிட்டிருந்தேன். 

  நரசிம்மரின் அருளும் அனுமதியும் இல்லாமல் அஹோபிலத்தை அண்டிவிட முடியாது. நரசிம்மரைக் கட்டுப்படுத்தும் சக்திகள் இரண்டுதான். ஒன்று, தாயாரின் திருக் கடாட்சம். இன்னொன்று, பக்தி. அஹோபிலத்தின் பெருமைகளை உணராமல் பக்தி பிறக்காது. பக்தி பிறக்காமல் "அஹோபிலம்' அகப்படாது, புலப்படாது.

  நாங்கள் கீழ் அஹோபிலம் சென்றடைந்தபோது நண்பகல் கடந்திருந்தது. பெரியவர் ஏ.எம். ராஜகோபாலன் மட்டுமல்லாமல், அஹோபில மடத்துக்கு மிகவும் நெருக்கமான பட்டயக் கணக்காளர் சந்தானகோபாலனும் எங்கள் வருகை குறித்து முன்கூட்டியே தெரிவித்து, வசதிகள் செய்து தர ஏற்பாடு செய்திருந்தார்.

  ஏனைய புனிதத் தலங்களைப் போல அஹோபிலத்தில் போதிய தங்குமிட வசதிகளோ, உணவு விடுதிகளோ இல்லை என்பது பெரிய குறை. அந்தக் குறையை அஹோபில மடம் ஓரளவுக்குத் தீர்த்து வைக்கிறது என்றாலும்கூட, அரசின் சுற்றுலாத் துறையும், அறக்கட்டளைகளும் இதுகுறித்து முனைப்புக் காட்ட வேண்டும். சத்திரங்கள், விருந்தினர் விடுதிகள், அன்னதானச் சத்திரங்கள் போன்றவை அதிக அளவில் அமைக்கப்பட வேண்டும்.

  முன்கூட்டியே பெரியவர் ஏ.எம். ராஜகோபாலனும், சந்தானகோபாலனும் ஏற்பாடு செய்திருந்ததால் எங்களை வரவேற்க அஹோபில மடத்தின் மேலாளர் பத்ரி நாராணன் தயாராக இருந்தார். மடத்திலேயே அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. குளித்து முடிந்ததும்  உணவும் தயாராகக் காத்திருந்தது.

  உணவுக்குப் பிறகு ஓய்வெடுக்க நேரமில்லை. அந்தி சாய்வதற்குள் அடர்ந்த வனத்துக்குள் அமைந்திருக்கும் பாவன நரசிம்மரையும், பார்கவ நரசிம்மரையும் தரிசித்தாக வேண்டும். இருட்டி விட்டால் கொடிய வன விலங்குகளின் நடமாட்டம் தொடங்கிவிடும்.

  அஹோபில யாத்திரையை இரண்டு பிரிவுகளாக்கிக் கொண்டு திட்டமிட்டுப் பயணித்தால்தான் இரண்டு நாள்களில் ஒன்பது நரசிம்மர்களையும் தரிசிக்க முடியும். அவசர அவசரமாக ஒரே நாளில் நவ நரசிம்மர்களையும் தரிசிப்பவர்கள், அஹோபில யாத்திரையின் சுகானுபவத்தை உணர முடியாது. அஹோபில மடத்தின் மேலாளர் பத்ரி நாராயணன் எங்களுக்காகத் தெளிவான பயணத் திட்டத்தை வகுத்துத் தந்திருந்தார்.

  பாவன நரசிம்மர், பார்கவ நரசிம்மர் கோயில்களை முதல் நாளில் தரிசிப்பதாக ஏற்பாடு. அதற்காக ஜீப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார் பத்ரி நாராயணன். தார் போட்ட சாலையில் சிறிது தூரம் மட்டுமே பயணித்த அந்த ஜீப், அடர்ந்த காட்டு வழியில் பயணிக்கத் தொடங்கியபோது, ஒரு புறம் பயமாகவும், இன்னொரு புறம் உற்சாகமாகவும் இருந்தது.

  ஒரு காலத்தில் மாட்டு வண்டிகள் சென்ற சாலை போலிருக்கிறது. காட்டு வழியாக விரைந்தது அந்த ஜீப். இரண்டு புறமும் ஓங்கி வளர்ந்த மரங்களும், அடர்ந்து கிடந்த முட்புதர்களும், செடி கொடிகளும் வித்தியாசமான உலகத்துக்கு நம்மை இட்டுச் செல்கின்றன. உடல் வலுவும், மன உறுதியும் இருந்தால் மட்டும்தான் அந்தக் காட்டுப் பாதையில் ஜீப்பில் பயணிக்க முடியும். பாவன நரசிம்மர் கோயில் நோக்கி விரைந்தது வாகனம்.

  பாவன நதிக்கரையில் அமைந்திருப்பதால் இந்தக் கோயில் பாவன நரசிம்மர் என்கிற பெயர் பெறுகிறது. அஹோபிலத்திலுள்ள கோயில்களில் ரத்தினம்
  என்று அழைக்கப்படும் இந்தத் தலத்திற்குச் சில தனிச் சிறப்புகள் உண்டு. நவக்கிரகங்களில் ராகுவின் பரிகாரத் தலமான பாவன நரசிம்மரை வழிபட்டால், இப்பிறவியிலும் முப்பிறவிகளிலும் செய்த பாவமெல்லாம் அகன்றுவிடும் என்பது நம்பிக்கை.

  அடர்ந்த காட்டுக்கு நடுவே அமைந்திருக்கும் இந்தக் கோயிலுக்கு அந்தி சாய்ந்தால் செல்ல முடியாது. வன விலங்குகளின் நடமாட்டம் அதிகம். நரசிம்ம அவதாரம் எடுத்த மகா விஷ்ணு, நல்லமலை காட்டில் ஆதிவாசிகள் மத்தியில் பிறந்திருந்த தாயாரை மணந்ததாக ஐதீகம். செஞ்சு லெட்சுமி என்று அழைக்கப்படும் தாயாருடன் காட்சி தரும் இந்தப் பெருமாளை பரத்வாஜ முனிவர் தரிசித்துப் பாப விமோசனம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

  பாவன நரசிம்மரை தரிசித்துவிட்டு அங்கிருந்து அந்த ஜீப் பார்கவ நரசிம்மர் கோயில் நோக்கி விரைந்தது. முதலில் போனது காட்டு வழியாக என்றால், இப்போது பயணித்தது சகதி வழியாக. ஆங்காங்கே அந்த ஜீப் சாலையிலிருந்து வழுக்கியபடி செல்லும்போது, இறை நம்பிக்கை இல்லாதவனும்கூட நரசிம்மரைத் துதித்தாக வேண்டும். அப்படியொரு ஆபத்தான பாதை.

  நவக்கிரகங்களில் சந்திரனின் பரிகாரத் தலமான பார்கவ நரசிம்மர் கோயில், நரசிம்மருக்கு அடுத்த அவதாரமான பரசுராமருடன் தொடர்புடையது. இரண்ய கசிபுவை வதம் செய்த அந்தத் தருணத்தைக் காண வேண்டும் என்று தவமிருந்த பரசுராமருக்கு, அதேபோலக் காட்சியளித்த இடம் இந்தக் கோயில். அஹோபிலத்திலுள்ள நரசிம்ம மூர்த்திகளில் உச்சகட்ட ஆக்ரோஷத்துடன் காணப்படும் நரசிம்மர் பார்கவ நரசிம்மர் என்று கூறலாம்.

  புஷ்கர தீர்த்தத்துக்கு நிகரான அக்ஷ்ய தீர்த்தத்தின் கரையில் அமைந்திருக்கும் பார்கவ நரசிம்மர் சந்நிதியில் வசிஷ்டர் உள்ளிட்ட பல முனிவர்கள் தவமிருந்ததாக ஐதீகம். நரசிம்மரின் காலடியில் பிரகலாதன் தொழுத வண்ணம் இருப்பதை இங்கே காணலாம்.

  பாவன நரசிம்மரையும், பார்கவ நரசிம்மரையும் தரிசித்துவிட்டு கீழ் அஹோபிலம் திரும்பிவிட்டோம். இங்கே அமைந்திருக்கும் பிரகலாதன் எழுப்பிய நரசிம்மர் ஆலய தரிசனத்துக்குத் தயாரானோம்.

  பிரகலாத வரத நரசிம்மர் என்று அழைக்கப்படும், கீழ் அஹோபிலத்திலுள்ள இந்த ஆலயம் திருப்பதி வெங்கடேசப் பெருமாளால் ஸ்தாபிக்கப்பட்டதாகத் தல வரலாறு கூறுகிறது. பத்மாவதித் தாயாருடனான தனது திருமணத்துக்கு முன்னால், வெங்கடேசப் பெருமாள் லெட்சுமி நரசிம்மரை இங்கே ஸ்தாபித்து வணங்கினார் என்று கூறப்படுகிறது.

  பிரகலாத வரத நரசிம்மர் ஆலயத்தில் 16-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகள் விஜயநகர அரசர்களின் கொடைகள் குறித்தும், ஆலயப் பணிகள் குறித்தும் தெரிவிக்கின்றன. மண்டபம், கருட ஸ்தம்பம் ஆகியவை அவர்களால் நிர்மிக்கப்பட்டவை. தனது ஒவ்வொரு படையெடுப்புக்கு முன்னும், பின்னும், கிருஷ்ண தேவராயர் அஹோபிலம் வந்து பிரகலாத வரத நரசிம்மரை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆலயத்துக்கு முன்னால் இருக்கும் விஜய ஸ்தம்பம் அவரால் எழுப்பப்பட்டதுதான்.

  மூன்று பிரகாரங்களைக் கொண்ட பிரகலாத வரத நரசிம்மர் ஆலயத்தில் வெங்கடேசப் பெருமாள் சந்நிதி தனியாக இருக்கிறது. கருவறை, முக மண்டபம் மட்டுமல்லாமல், அற்புதமான சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய ரங்க மண்டபம் இதன் தனிச்சிறப்பு.  தாயார், ஆண்டாள் நாச்சியார், ஆழ்வார்கள் ஆகியோருக்குத் தனியாகச் சிறிய கோயில்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அஹோபில மடத்தை ஸ்தாபித்த முதலாவது ஜீயரான ஸ்ரீ ஆதிவண் சடகோபருடைய விக்ரகமும் இந்தக் கோயிலில் உள்ளது. முதல் நாள் தீர்த்தாடனத்தை முடித்துக் கொண்டோம்.

  அதிகாலையில் சூரியோதயத்துக்கு முன்பே எழுந்து விட்டோம். ஏழு நரசிம்மர்களை தரிசித்தாக வேண்டும் என்பது மட்டுமல்ல, மேல் அஹோபிலம் வரைதான்மோட்டார் வாகனத்தில் பயணிக்க முடியும் என்பதும்கூட அதிகாலையில் கிளம்பியதற்குக் காரணம். கரடுமுரடான காட்டுப் பாதையில், பாறாங்கற்கள் நிறைந்த ஓடைகள்  வழியாகவும், செங்குத்தாக மேலே செல்லும் படிகளில் ஏறியும் பயணிக்கும் இரண்டாவது கட்ட அஹோபில யாத்திரை தொடங்கியது.

  மேல் அஹோபிலத்தில் அமைந் திருக்கிறது அஹோபில நரசிம்மர் கோயில். இதுதான் ஆரம்பத்தில் இருந்த பழமையான நரசிம்மர் ஆலயம். சாளக்கிராம வடிவத்தில் அமைந்திருக்கும் உக்கிர நரசிம்மர் இங்கே சுகாசனத்தில் இரண்யனின் மார்பைக் கிழித்த வண்ணம் அமைந்திருக்கிறார். பத்மாசனத்தில் அருகில் தனியாக செஞ்சு லெட்சுமியுடன் காட்சியளிக்கும் நரசிம்மருக்கு எதிரில் பிரகலாதன் நின்று கொண்டிருக்கிறார்.

  ஆதி சங்கரரால் இங்கே ஒரு சிவலிங்கமும், சுதர்சன சக்கரமும் பிரதிஷ்டிக்கப்பட்டிருக்கிறது. அஹோபில நரசிம்ம சுவாமி சுயம்புவாக இருக்கக் கூடும் என்பதுதான் பக்தர்களின் தீர்மானமான நம்பிக்கை. கீழ் அஹோபிலத்திலிருந்து சுமார் 8 கி.மீ. தூரத்திலுள்ள மேல் அஹோபிலம் கடல் மட்டத்திலிருந்து 3,000 அடி உயரத்தில் இருக்கிறது.

  சுக்கிரனின் அம்சமான இந்த அஹோபில நரசிம்மரை தரிசித்த திருமங்கையாழ்வார் இதற்குப் பொருத்தமாக "சிங்கவேழ் குன்றம்' என்று பெயரிட்டழைத்தார். "பைங்கண் ஆனைக் கொம்பு கொண்டு / பத்திமை யால் அடிக்கீழ் / செங்கண் ஆளி இட்டு இறைஞ்சும் / சிங்கவேழ் குன்றமே'' என்கிறது அவரது பாசுரம்.

  அஹோபில நரசிம்மர் கோயில் ஒரு குடவரைக் கோயில். குகைக்குள்ளே நரசிம்மர் சுயம்புவாக அருளியிருக்கிறார். ஒரு பெரிய முட்டை வடிவப் பாறையில் குடையப்பட்டு வடிவமைக்கப்பட்ட இந்தக் கோயிலில் முக மண்டபமும், மகா மண்டபமும் கிழக்கு நோக்கியும், குகையின் அமைப்பால் கர்பக்கிரகம் வடக்கு நோக்கியும் அமைந்திருக்கின்றன. முக மண்டபத்தையொட்டி கொடி மரமும், பலி பீடமும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

  மந்தாகினி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் அஹோபில நரசிம்மர் கோயிலில் வட்டமான ஒரு பகுதி தடுக்கப்பட்டிருக்கிறது. வெகுகாலமாகத் திறந்த குகையாக இருந்த இந்தக் கோயிலுக்கு உள்ளே இன்னொரு கோயில் இருந்ததாகக் கூறுகிறார்கள். அஹோபில மடத்தின் ஆறாவது ஜீயராக இருந்த ஸ்ரீ ஷஷ்ட்ட பராங்குச யதீந்திர மகா தேசிகன் அந்த குகைக் கோயிலுக்குள் சென்றவர் திரும்ப வரவேயில்லை. அங்கேயே அவர் ஜீவ சமாதி அடைந்து விட்டதால், அந்தப் பகுதி மூடப்பட்டு, பக்தர்களின் பாதம் பட்டுவிடாமல் தடுக்கப்பட்டிருக்கிறது.

  அஹோபில நரசிம்மர் கோயிலின் கிழக்கு வாசல் வழியாகச் செல்லும் மலைப் பாதையில்தான் அடுத்தடுத்த நரசிம்மர் கோயில்களுக்கான யாத்திரை தொடங்குகிறது. மலைப் பாதையில் நடப்பதற்கு வசதியாகக் கைத் தடிகளைப் பெற்றுக் கொண்டு புறப்பட்டோம்.

  மலைப் பாதை வழியாக நடந்து, படிகள் ஏறிப் போனால் அங்கே ஒரு சிறு குகையில், கனகப்ரியா ஆற்றங்கரை ஓரமாக அமைந்திருக்கிறது மாலோல நரசிம்மர் கோயில். இரண்ய வதத்திற்குப் பிறகு நரசிம்மரின் கோபத்தைத் தணித்துத் தாயார் மகாலெட்சுமி அவருடன் எழுந்தருளிய திருத்தலம் மாலோல நரசிம்மர் கோயில்.

  "மாலோலர்' என்றால் லட்சுமிப் பிரியன் என்று பொருள். தாயாரைத் தனது இடது மடியில் இருத்தி, சாந்த ஸ்வரூபியாகத் தனது இடது காலை மடக்கியபடியும், வலது காலைத் தொங்கவிட்டபடியும் சுகாசனத்தில் காட்சியளிக்கிறார் நரசிம்மர். சங்கு சக்ரதாரியாக இரு கரங்களும், தாயாரை இடக் கரத்தால் அணைத்தபடி, வலது கரத்தால் அபயஹஸ்த முத்திரையுடன் காட்சியளிக்கும் மாலோல நரசிம்மரைக் காணக் கண்கோடி வேண்டும்.

  நவ நரசிம்மர்களில் ஏனைய நரசிம்மர்களுக்கு இல்லாத தனிச் சிறப்பு மாலோல நரசிம்மருக்கு மட்டுமே உண்டு. முதலாவது ஜீயரின் கனவில் திருமால் மாலோல நரசிம்மராகக் காட்சியளித்தார், அஹோபில மடத்தின் உற்சவ மூர்த்தியாக இருப்பது மாலோல நரசிம்மர்தான். இவரது தங்க விக்ரகம்தான் ஜீயர்கள் செல்லுமிடமெல்லாம் அவர்களுடன் பயணிக்கும் பூஜைக்குரிய நரசிம்மர்.

  செவ்வாய் கிரகத்துக்குகந்த மாலோல நரசிம்மர் கோயிலின் படிக்கட்டுகள் இறங்கும் இடத்தில் ஒரு தீர்த்தம் இருக்கிறது. இந்தக் குளத்தில் குளித்தால் எல்லாவித சரும ரோகங்களும் குணமடையும் என்கிற நம்பிக்கை ஒரு காலத்தில் இருந்திருக்கிறது. இப்போது போதுமான பராமரிப்பு இல்லாத இந்தக் குளத்தில் கை கால் கழுவித் தண்ணீரை தெளித்துக் கொள்வதுடன் பக்தர்கள் நிறுத்திக் கொள்கிறார்கள்.

  மாலோல நரசிம்மர் கோயிலிலிருந்து ஜூவாலா நரசிம்மர் கோயிலுக்குப் போகும் வழியில் அமைந்திருக்கிறது  ஸ்ரீ வராக நரசிமமர் கோயில். இதைக் குரோத நரசிம்மர் என்றும் அழைக்கிறார்கள். குருவின் அம்சமான குரோத நரசிம்மர் கோயில் வேதாத்திரி, கருடாத்ரி மலைகளுக்கு இடையே அஹோபில நரசிம்மர் கோயிலிலிருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ளது. வராகரின் தலை,  மனித உடல், சிங்கத்தின் வால் என்று இங்கே நரசிம்மர் வித்தியாசமாகக் காட்சியளிக்கிறார்.

  வராக நரசிம்மர் கோயிலுக்கு அருகே ஸ்ரீ ராமானுஜர் தவமிருந்த குகை காணப்படுகிறது. இந்தக் கோயிலுக்குப் போகும் வழியில் காணப்படும் மண்டபம் ஒரு காலத்தில் வேதப் பாடசாலையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. குரு அம்சம் பொருந்திய வராக நரசிம்மர் கோயிலில் ஐந்து நாட்கள் விரதம் பூண்டு தவமிருந்தால் நினைத்த காரியம் சித்தியடையும் என்று நம்பப்படுகிறது. அதனால் இதை சித்த úக்ஷத்திரம் என்றும் அழைக்கிறார்கள்.

  வராக நரசிம்மர் கோயிலிலிருந்து காட்டாற்றுப் பாதை வழியாக, பாறாங்கற்கள் நிறைந்த ஓடைகள் வழியாக நடந்து சென்றுதான் ஜூவாலா நரசிம்மரை அடைய முடியும். நவ நரசிம்மர் யாத்திரையிலேயே மிகவும் கடினமானது ஜூவாலா நரசிம்மர் தரிசன யாத்திரைதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

  அடர்ந்த காட்டுக்குள், கைத்தடியின் உதவியுடன் நீரோடைகள் வழியாகப் பாறைகள் மீது கவனமாகக் கால் பதிந்து நடக்க வேண்டும். வழிகாட்டியின் துணையில்லாமல் இந்தக் காட்டுப் பாதையில் பயணிக்க முடியாது. தவறிப் போனால் திக்குத் தெரியாமல் காட்டுக்குள் சிக்கிக் கொள்ள நேரிடும். சுமார் 6 கி.மீ. தூரம் காட்டாற்று ஓடைகள் வழியாகவும், செங்குத்தான படிகளில் ஏறியும் பயணிக்கும்போது, என்னதான் உடல் வலுவும் கைத்தடியும் இருந்தாலும் ஆதார சக்தியாகத் துணை வருவது பக்தி மட்டும்தான் என்பதை அநுபவத்தில் உணரலாம்.

  உயர்ந்து நிற்கும் உக்ர ஸ்தம்பத்தின் கீழே இருக்கிறது ஜூவாலா நரசிம்மர் கோயில். தூணைப் பிளந்து வெளியே வந்து நரசிம்மர் இரண்யனை வதம் செய்த இடம்சான் உக்ர ஸ்தம்பம். அந்த இடத்தில்தான் இரண்யனின் மாளிகை இருந்ததாகக் கருதப்படுகிறது. உயர்ந்து நிற்கும் அந்த அச்சலாச்சய மேரு மலையிலிருந்து விழும் அருவிக்கு நடுவில் புகுந்து சென்றால் அங்கேதான் இருக்கிறது சனி அம்சமுள்ள ஜூவாலா நரசிம்மர் கோயில்.

  இரண்ய வதத்திற்குப் பிறகு ஜூவாலா நரசிம்மர் கோயில் அருகேயுள்ள தடாகத்தில் கை கழுவியதால் அந்தத் தடாகத்தில் தண்ணீர் இப்போதும்கூடச் சிவப்பாகவே காட்சியளிக்கிறது. பத்துக் கைகளுடன் இந்த ஆலயத்தில் தரிசனம் வழங்கும் நரசிம்மர், இரண்ய வதக் கோலத்தில் ஆக்ரோஷமாகக் காட்சியளிக்கிறார்.

  ஜூவாலா நரசிம்மரின் தரிசனம் முடியும்போது,  நவ நரசிம்மர்களின் தரிசனமே கிடைத்து விட்டாற்போல ஒரு அமைதி ஏற்பட்டு விடுகிறது. ஜூவாலா நரசிம்மர் கோயிலிலிருந்து மலையையும் பள்ளத்தாக்கையும் பார்க்கக் கிடைக்கும் அந்த அற்புதக் காட்சிக்காகவே எத்தனை முறை வேண்டுமானாலும் சிரமங்களைக் கடந்து அஹோபில யாத்திரை மேற்கொள்ளலாம் போலிருக்கிறது.

  போனது போலவே நூற்றுக்கணக்கான படிகளில் இறங்கி, மந்தாகினி  ஆற்றுப் பாதையிலும், காட்டாற்றுப் பாதையிலும் பாறைகளுக்கு நடுவே தட்டுத் தடுமாறி நடந்து கடந்து மீண்டும் அஹோபில நரசிம்மர் கோயிலை அடைந்தபோதுதான் உணர்ந்தோம், நவ நரசிம்மர்களில் இன்னும் மூன்று நரசிம்மர்களின் தரிசனம் பாக்கி இருப்பதை.

  காரஞ்ச நரசிம்மர் அல்லது சாரங்க நரசிம்மர் கோயில் கீழ் அஹோபிலத்துக்குத் திரும்பும் வழியில் இருக்கிறது. நாம் புங்க மரம் என்று 
  அழைப்பதைத் தெலுங்கில் காரஞ்ச மரம் என்கிறார்கள். காரஞ்ச மரத்தின் அடியில் அமைந்திருப்பதால் அதைக் காரஞ்ச நரசிம்மர் என்று அழைப்பதாகத் தெரிவித்தார் வழிகாட்டி பவன்குமார்.

  காரஞ்ச நரசிம்மரல்ல, அது சாரங்க நரசிம்மர் என்று அழைப்பவரும் உண்டு. சாரங்கம் என்பது ஒரு வகை வில். அந்த வில்லை வைத்திருந்ததால்தான் ராமருக்கு சாரங்கபாணி என்று பெயர்.

  இந்த இடத்தில் ஸ்ரீ ராமரை எண்ணித் தவமிருந்த அனுமனுக்கு நரசிம்மர் காட்சி அளித்தார். அவரைத் தனது இஷ்ட தெய்வமான ஸ்ரீராமராக அனுமன் ஏற்றுக் கொள்ளவில்லை. நானும் ராமரும் ஒன்றுதான் என்பதை அனுமனுக்கு உணர்த்த ராமபிரானின் சாரங்கம் என்கிற வில்லுடன் நரசிம்மர் காட்சி அளித்ததால், இதற்கு சாரங்க நரசிம்மர் என்று பெயர். கேது சேக்ஷத்திரமான சாரங்க நரசிம்மர் கோயிலில், ஆதிசேஷன் குடைபிடிக்க, வலது கரத்தில் ஸ்ரீசக்கரமும் இடது கரத்தில் வில்லும் தரித்து வித்தியாசமாகக் காட்சி அளிக்கிறார் நரசிம்மர்.

  தனது அவதார நோக்கமான இரண்யன் வதம் முடிந்துவிட்ட நிலையிலும் நரசிம்மர் உடனடியாக பூமியிலிருந்து அகன்றுவிடவில்லை. பிரகலாதனுக்குப் பல யோக முத்திகளைக் கற்றுக் கொடுக்கிறார். கீழ்க்கரங்களில் யோக முத்தியுடனும் மேற் கரங்களில் சங்கு சக்கரத்துடனும் தென் திசை நோக்கி அமர்ந்தபடி காட்சியளிக்கிறார் புதனின் ஆதிக்கமுள்ள யோகானந்த நரசிம்மர்.

  யோகானந்த நரசிம்மரை பிரம்மா வழிபட்டதாகப் புராணக் கதை இருக்கிறது. ஒரு குகைக்குள் இருந்த யோகானந்த நரசிம்மர் இப்போதிருக்கும் கோயிலுக்குள் கொண்டு வரப்பட்டு மீள் ஸ்தாபிதம் செய்யப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள். அமைதி நாடுபவர்கள் இங்கே தியானம் செய்யும்போது கிடைக்கும் அதிர்வலைகள் அற்புதமானவை என்று பலரும் பதிவு செய்திருக்கிறார்கள். நவ நரசிம்மர்களில் கடைசியாக நாங்கள் தரிசனம் செய்தது சத்ரவட நரசிம்மரை. மிகவும் வித்தியாசமான நரசிம்மரை இங்கே தரிசிக்க முடிகிறது.

  ஹா ஹா, ஹூ ஹூ என்று இரண்டு கந்தர்வர்கள் மேரு மலையிலிருந்து நரசிம்மரை தரிசிக்க வேதாத்ரி மலைக்கு வந்தார்கள். அவர்கள் தங்களுடைய இசையால் நரசிம்மரை வழிபட்டபோது அவர் அதை ரசித்து மகிழ்ந்தார். வேறு எந்த இடத்திலும் காண முடியாத தாள முத்திரையுடன் நரசிம்மர் வீற்றிருப்பது இங்கே மட்டும்தான்.

  வில்வ மரத்தின் கீழ், இடது கையில் தாள முத்திரையுடன் முகத்தில் புன்முறுவல் தவழ சத்ரவட நரசிம்மர் அமர்ந்திருக்கும் கோலத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது. தேவர்களின் ஆராதனைச் úக்ஷத்திரம் என்று அழைக்கப்படும் சத்ரவட நரசிம்மர் கோயில் சூரியனின் ஆதிபத்தியம் உள்ள ஸ்தலம். கலைஞர்களுக்கு ஆசி வழங்கும் நரசிம்மர் என்பதால், பிரபல இசைக் கலைஞர்களும், நாட்டியக் கலைஞர்களும் இங்கே வந்து தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

  நவ நரசிம்மர்களையும் தரிசித்து விட்டு நாங்கள் தங்கியிருந்த அஹோபில மடத்தின் விடுதிக்கு வந்தபோது அநேகமாக மாலையாகி விட்டது. அதிகாலையிலிருந்து ஆறும் மலையும், சுற்றி நடந்திருக்கிறோம், நூற்றுக்கணக்கான படிகளில் ஏறி இறங்கி இருக்கிறோம். ஓய்ந்தும் சோர்த்தும் போயிருக்க வேண்டாமா? அதுதான் இல்லை. இத்தனைக்கும் நான் இரண்டு இடங்களில் கால் இடறி விழுந்து சிறிதாக அடிகூடப் பட்டிருந்தது.

  பக்தியின் சக்தி எப்பேற்பட்டது என்பதை அஹோபில நவ நரசிம்மர் புனித யாத்திரை எனக்குச் சொல்லித் தந்தது. கை சொடுக்கும் நேரத்தில், இமைக்கும் வேகத்தில், நினைத்த மாத்திரத்தில் அருள்பாலிக்கும் கடவுள் யார் என்று கேட்டால், அது ஸ்ரீமந் நரசிம்ம மூர்த்தி அல்லாது வேறு யாராக இருக்க முடியும்?
  யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். அஹோபில நவ நரசிம்மர்களை தரிசிக்க உகந்த காலம் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை. அதிலும்கூட ஜனவரி முதல் மார்ச் வரை இன்னும் சிறப்பு. குறைந்தது இரண்டு இரவுகள் அஹோபில மடத்தில் தங்குவது போல யாத்திரையைத் திட்டமிட வேண்டும். தங்குவதற்கும், உணவுக்கும், வழிகாட்டி உதவிக்கும் முன்கூட்டியே ஏற்பாடு செய்து கொள்ளாமல் போய்விடக் கூடாது.

  திட்டமிடுவதெல்லாம் சரி.. மாலோலன் அழைக்காமல் நீங்கள் போக முடியாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

  அஹோபிலம் நவ நரசிம்மர்களை தரிசித்து விட்டு நான் திரும்பியவுடன் நண்பர் ஒருவரிடம் சொன்னேன்-

  பக்தியின் உச்சம் பிரகலாதன்!
  சக்தியின் உச்சம் நரசிம்மர்!!


  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை
  kattana sevai
  flipboard facebook twitter whatsapp