வாழ்க்கை மற்றும் வணிகத் துணை என்பது சொர்க்கமா நரகமா?

நம் வாழும் காலம் என்பது ஜாதகத்தில் உள்ள ராசிக்கட்டத்தில் 360 பாகை அடிப்படையில் கொண்டது.
வாழ்க்கை மற்றும் வணிகத் துணை என்பது சொர்க்கமா நரகமா?

 
நம் வாழும் காலம் என்பது ஜாதகத்தில் உள்ள ராசிக்கட்டத்தில் 360 பாகை அடிப்படையில் கொண்டது. அதையே நாம் இரு பகுதிகளாகக் கொள்ளலாம். அதில் முதல் பாதி 180 பாகைக்குள் நம்முடைய வளர்ச்சி, பேச்சு, எழுத்து, மகிழ்ச்சி, படிப்பு, காதல், ஆரம்ப வாழ்க்கை என்று நம் வாழ்நாளின் முதல் பாதி ஆகும். அதற்கு அடுத்த இரண்டாம் பாதியாக முடிவு எடுக்கும் தன்மை, சுயமாகச் செயல்படுதல், கூட்டாகத் தொழில் செய்வது, திருமணம் என்ற வாழ்க்கைத் துணையை ஏற்றுக்கொள்ளுவது என்று சொல்லலாம். அக்காலத்தில் இரண்டாம் பகுதி 20-25 வயதை வைத்து திருமணம், தொழில் என்று இருக்கும். ஆனால் தற்பொழுது படிப்பு, வேலை என்று சொல்லி 30 வயதுக்கு மேலே தான் திருமண பேச்சே ஆரம்பிக்கின்றனர்.

ஜாதகரின் முக்கிய பறக்கும் பயணமே 180 டிகிரியில் ஆரம்பிக்கிறது. அதையே ஜோதிடத்தில் ஏழாம் பாவத்தைக் குறிக்கும். அதற்கு சுக்கிரனே முக்கிய காரணகர்த்தா ஆவார். அந்த பாவத்தில் தான் partnership அதாவது நம்முடைய வாழ்க்கைத் துணை  மற்றும் வணிக துணை தேடும் படலம் செயல்படும். ஏழாம்பாவம்  நமக்கு கொடுத்த கர்மாவால் கொடுக்கப்பட்ட முக்கிய கடமை அதாவது கூட்டு அல்லது துணையைச் செயல்படுத்துவது என்று கூறலாம். அதில் ஒன்று, நாம் எதிர்நோக்கும் தொழிலுக்கான பார்ட்னர் மற்றும் அதைவிட முக்கியமான நம் வாழ்க்கை காலம் முடியும் வரை வரும் சந்தோஷமான துணை என்று கூறலாம். இதில் இரண்டும் மனதில் சந்தேகமோ திருட்டோ இருந்தால் சிறப்பாக இருக்காது. நீங்கள் உண்மையாக ஜெயிக்க அல்லது உயரத்தில் பறக்க ஆரம்பித்து விட்டார்கள் என்றால் அதற்கு முழு காரணம் உங்கள் பார்ட்னெர்ஷிப் பலமாக உள்ளது என்று அர்த்தம். 

அதே ஏழாம் பாவமானது அல்லது ஏழாம் அதிபதி 6, 8, 12ல் இருந்தால் அந்த கூட்டு தொழில் மற்றும் திருமண முறிவு ஏற்படும் என்பது ஜோதிட பொது விதியாகும். ஒரு குடும்ப உறவையும் அல்லது தொழில் கூட்டணியும் எந்தவித குழப்பமும் இல்லாமல், சீரும் சிறப்புமாகச் செல்ல, ஒற்றுமையாக இருக்க, விட்டுக்கொடுக்கும் தன்மை என்று அனைத்தையும் கற்றுக்கொள்ளும் ஒரு வகுப்பறை என்பது 7ம்  பாவத்தில் இருக்கும் கிரகங்களைக் கொண்டு அமையும். அதிலும் முக்கியமாக 7ம் பாவத்தில் உள்ள கிரகம் அல்லது ஏழாம் அதிபதி மற்றும் சுக்கிரன் இருவரும் கெட்டு போகாமல் இருந்தால் வாழ்க்கையில் எந்த கூட்டுக்கும் பிரச்னை ஏற்படாது. தொழிலில் உள்ள கூட்டு என்பது அந்தெந்த லக்கினக்காரருக்கு மாறுபடும். அவர்கள் சரம், ஸ்திர, உபய ராசியில் அமரப்பெற்றிருக்கிறார்களா என்று பல சூட்சமங்களைப் பார்க்க வேண்டும்.  

அடுத்த பார்ட்னர்ஷிப் என்னும் வாழ்க்கைத் துணையின் காரகன் சுக்கிரன், செவ்வாய், ஏழாம் வீட்டின் அதிபதி அல்லது ஏழில் உள்ள கிரகம் ஆகும். திருமண பந்தத்தில் அதிக பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். கூட்டணியில் பொண்ணும் பொருளும் இழந்தால் சம்பாதிக்கலாம் ஆனால் களத்திரத்தை இழந்தால் அவ்வளவுதான் கண்ணாடி துண்டுகளைப் போலத் தூள் தூள் ஆகிவிடும். சுக்கிரன் அல்லது களத்திர ஸ்தானம் பாதிக்கப்பட்டால் நீங்களும் மனப்பாதிப்புக்கு உள்ளாகி விடுவீர்கள். வாழ்க்கை என்பதை சொர்கமாகவோ நரகமாகவோ வைத்துக்கொள்ளுவது அவரவர் கையில் உள்ளது. இருந்தாலும் கிரகங்கள் தங்கள் வேலைகளை நல்லதாகவோ கெட்டதாகவோ கர்மாவின் பலனுக்கு ஏற்ப நடைபெற வைக்கும் என்பது ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படுகிறது.

சப்தமத்தின் பலன்கேளூ மணமதாகும்

தகுமடந்தை புதல்வர்க்குச் சான்றுமின்பம்

சித்தமுள வுபகார மனஞ்சுற்றத்தார்

அபிமானமரசரது சேர்சன்மானம்

தத்துகயல் விழிமாது சேர்க்கைநன்றாய்

சதிருடனே தான் வந்து சேருமென்று

கொத்தாக நீயறிந்து கூறுவாயேல்

குறிதப்பா பலன் வந்து கூடுமன்றே.          

       - புலிப்பாணி ஜோதிடம் 300 

இதில் கூறப்படுவது சப்தமஸ்தானம் என்னும் 7ம் இடத்தினால் ஏற்படும் பலன்களாவன..

மணம் நிகழ்தலும் நல்ல மனைவியும், புதல்வர்கள் வாய்த்தலும் அவர்களால் இன்பம் வாய்த்தலும் சுற்றத்தார் உறவு அதிகமாதலும் அவர்களது அபிமானம் நேருதலும் அரச சன்மானம் வாய்த்தலும் போகஸ்திரீகள் வாய்த்தலும் நிஷ்களங்கமின்றி வந்து சேருமென்று ஆராய்ந்து அறிந்து கூறின் புலிப்பாணி குருவருளால் குறித்துச் சொன்ன குறி தப்பாது.  

ஜென்ம லக்னத்திற்கு 7ம் வீட்டில் சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது போன்ற பாவிகள் இருந்தாலும், சுபர் பார்வை 7ம் வீட்டிற்கும், 7ம் அதிபதிக்கும் இருந்தால் கூட்டு விஷயங்களில் தப்பித்து விடுவார்கள். ஒரு வீட்டில் ஒரு கிரகம் உச்சம் என்றால் அதன் எதிர்வீட்டு நீச்சம் பெரும் என்பது ஒரு விதி ஆகும். நம் வாழ்க்கையும் அவ்வாறே செயல்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக என்னிடம் வந்த ஒரு ஜாதகரை வைத்து சொல்லுகிறேன். பெண்ணின் தந்தை ஒருவர் என்னிடம் ஜாதகம் பார்க்க வந்தார் அவர் பெண்ணுக்குப் படிப்பு, பேச்சு, புத்திசாலித்தனம் என்று ஒருசில விஷயங்கள் குறைவு ஆனால் பொருட்செல்வம் அதிகம் உள்ளவர். 

நான் அவரிடம் கூறியது இந்த பெண்ணுக்கு திருமணம் என்பது தற்பொழுது தக்க சமயம் ஆனால் இந்த பெண்ணிற்கு ஒரு செல்வம் குறைந்த மணமகனை திருமணம் செய்யவும், ஜாதகத்திற்கு தார தோஷம் உள்ளது அதற்கும் சில பரிகாரங்களை செய்யவும் என்று கூறினேன். ஆனால் அவர் ஒரு பணக்கார பையனுக்கு திருமணம் சிறப்பாக முடித்து வைத்தார். அந்த பெண்ணின் திருமண பந்தம் என்பது ஒரு மாதத்தில் முடிந்தது. என்னதான் நாம் சொன்னாலும் அந்த ஜாதகரின் கர்மா என்பது செயல்பட ஆரம்பித்து விட்டது. இதில் உள்ள சூட்சமம் என்பது எது நீச்சம் பெறுகிறதோ அதை நாம் பத்திரமாக வைத்து உச்சப்படுத்த என்ன வழியோ யாரை வைத்து செயல்படுத்தமுடியுமோ அதைச் செயல்படுத்த வேண்டும்.

குருவே சரணம்  

- ஜோதிட சிரோன்மணி தேவி

Whats app: 8939115647
Email: vaideeshwra2013@gmail.com

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com