ஜோதிட ரீதியாக ஒருவருக்கு மனநோய் எப்போது ஏற்படும்? பரிகாரமாக என்ன செய்யலாம்?

ஜோதிடத்தில் மனதிற்கு சந்திரனையும், புத்திசாலிதனத்திற்கு புதன் மற்றும் குருவையும் காரக கிரகங்களாக கூறப்பட்டுள்ளது.
ஜோதிட ரீதியாக ஒருவருக்கு மனநோய் எப்போது ஏற்படும்? பரிகாரமாக என்ன செய்யலாம்?

ஜோதிடத்தில் மனதிற்கு சந்திரனையும், புத்திசாலிதனத்திற்கு புதன் மற்றும் குருவையும் காரக கிரகங்களாக கூறப்பட்டுள்ளது. இந்த மூன்று கிரகங்களும் நல்ல நிலையில் இணையும்போது மிகுந்த புத்திசாலித்தனத்தையும் அவர்களில் ஒருவர் அசுபத்தன்மை பெற்றாலும் மன நிலையில் பாதிப்புகள் ஏற்படுகிறது.

ஒருவருடைய மனநிலை மற்றும் புத்திசாலித்தனம், ஆழ்மனதில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றைக் குறிக்கும் பாவம் பூர்வ புண்ணியம் எனப்படும் ஐந்தாம் பாவம் ஆகும். ஐந்தாம் பாவம் கெடாமல் இருப்பது நல்ல மனநிலைக்கு முக்கியமானதாகும். ஐந்தாம் வீட்டில் அசுப தொடர்புகள் ஏற்படும்போது அது மனதினை பாதிக்கின்றது.

ஒருவருடைய ஜாதகத்தில் லக்னம், லக்னாதிபதி பலமாக நிற்பது, காலபுருஷனுக்கு லக்னமாகிய மேஷத்தில் அசுப கிரகங்கள் தொடர்பின்றி இருப்பது, அதன் அதிபதி செவ்வாய் பலமாக இருப்பது, ஆத்ம காரகனாகிய சூரியன் அசுபத்தன்மை இன்றி நல்ல நிலையில் பலம் பெற்று இருப்பது ஆகியவை ஜாதகரை மன நோயில் இருந்து காக்கும் அம்சங்களாகும்.

1. லக்னம் மற்றும் லக்னாதிபதி 6/8/12 தொடர்பு பெற்று பலமிழந்த நிலையில் இருப்பது.

2. ஒருவருடைய ஜாதகத்தில் பக்‌ஷ பலமற்ற சந்திரன் லக்னத்திற்கு 6/8/12 ஆகிய வீடுகளில் நிற்பது.

3. சந்திரன் விருச்சிக ராசி மற்றும் காலபுருஷனுக்கு எட்டாம் வீட்டில் நீசமடைந்து சனியுடன் சேர்ந்து நிற்பது மற்றும் சனி 6/8/12 அதிபதிகளாகி அவருடன் சேர்ந்து எந்த ராசியிலும் நிற்பது.

4. சந்திரன் ராகுவோடு அல்லது கேதுவோடு சேர்ந்து கால புருஷனுக்கு 6/8/12 வீடுகளில் நிற்பது அல்லது ஜெனன ஜாதக 6/8/12 வீடுகளில் நிற்பது.

5. ஆத்ம காரகனாகிய சூரியன் ராகுவோடு அல்லது கேதுவோடு சேர்ந்து கால புருஷனுக்கு 6/8/12 வீடுகளில் நிற்பது அல்லது ஜெனன ஜாதக 6/8/12 வீடுகளில் நிற்பது. 

6. லக்னத்தில் ஆறாம் அதிபதி சனியுடன் சேர்ந்து நின்ற நிலையில் பலமிழந்த சந்திரனும் புதனும் சேர்க்கை பெற்று நிற்பது.

7. சந்திரனும் புதனும் 6/8/12 வீடுகளில் சேர்ந்து நின்று அவர்களுடன், செவ்வாய், சனி, ராகு, கேது, மாந்தி ஆகிய அசுபர்களின் தொடர்பு பெறுவது.

8. பலமிழந்த சந்திரனோடு மாந்தி சேர்க்கை பெறுவது, அல்லது சந்திரனோடு சனி மற்றும் ராகு சேர்க்கை பெறுவது.

9. கோப உணர்ச்சியைத் தூண்டும் கிரகங்களான சூரியன், செவ்வாய், தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும் சனி, பலவித ஃபோஃபியாக்களையும் தற்கொலை மனப்பான்மையையும் ஏற்படுத்தும் ராகு மற்றும் கேது ஆகிய கிரஹங்கள் மற்றும் மாந்தி சந்திரனோடு சேர்க்கை பெற்று கேந்திர திரிகோணங்களில் நிற்பது.

மனபாதிப்பு எப்போது ஏற்படும்?

சந்திராஷ்டம காலங்கள், அமாவாசை போன்ற சந்திரபலம் குறைந்த தினங்கள் ஏழரை, அஷ்டம அர்தாஷ்டம சனி காலங்கள், சந்திரன்/சனி/ராகு தசாபுத்தி காலங்கள் சந்திரன் கேது புத்தி காலங்கள், சூரியன் /ராகு/ கேது தசா புத்தி காலங்கள்.

பரிகாரமாக என்ன செய்யலாம்?

கார்த்திகை மாதம் விருச்சிக மாதம் என அழைக்கப்படும். விருச்சிக ராசியில் சந்திரன் நீசமாக (பலமிழந்து) அமைவார். கார்த்திகை மாதத்தில் வரும் அனைத்து சந்திர அம்சம் பொருந்திய நாளாகிய சோமவாரம் எனும் திங்கட்கிழமைகளில், சந்திர அம்சமான சங்குகளுக்கு பூஜை செய்து, சங்கு தீர்த்தம் கொண்டு சிவபெருமானுக்கு பூஜை செய்வது, காண்பது, சந்திரன் பலம் பெற்று வளர்ந்ததைப் போல, நம் வாழ்க்கையையும் நல்வளங்கள் அனைத்தும் பெருகும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகின்றது
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com