முடவன் முழுக்கு பெயர் காரணம் என்ன தெரியுமா?

கார்த்திகை முதல் நாள் முடவன் முழுக்கு உற்சவம் நடைபெறுகிறது. எதற்காக இந்த முடவன் முழுக்கு உற்சவம்..
முடவன் முழுக்கு  பெயர் காரணம் என்ன தெரியுமா?

ஐப்பசி மாதத்தின் முக்கிய விழாவான கடைமுக தீர்த்தவாரி விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. அதற்கு மறுநாளான நாளை, கார்த்திகை முதல் நாள் முடவன் முழுக்கு உற்சவம் நடைபெறுகிறது. எதற்காக இந்த முடவன் முழுக்கு உற்சவம் கொண்டாடப்படுகிறது, "முடவன்முழுக்கு" பெயர் வரக் காரணம் என்ன? என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம். 

சிறந்த சிவபக்தரான நாத சர்மா மற்றும் அவரது மனையாள் அனவித்யாம்பிகை இருவரும் திருவையாற்றிலிருந்து புறப்பட்டு மாயவரம் துலாஸ்நானம் செய்வதற்கு வந்து, மாலை நேரம் நெருங்கிவிட்டதால் ஸ்நானம் செய்ய இயலாமல் தவித்து அங்குள்ள மண்டபத்தில் இரவு தங்கி ஈசனை துதித்தனர். அது போல் மாற்றுத் திறனாளி ஒருவரும் (முடவன்) ஆசை இருந்தும் கால் ஊனமுற்றதால் நடக்க முடியாமல் தட்டுத்தடுமாறி தவழ்ந்து; வெகு நாட்களுக்கு முன்பே அவரது ஊரிலிருந்து கிளம்பி மாயவரம் வந்து சேரும் போது, துலா மாதம் முடிந்து இரவாகிவிட்டது. அண்டத்தின் நாயகனை நோக்கி மாற்றுத் திறனாளி "இந்த சந்தோஷத்தை அடைவதற்கு எனக்கு கொடுப்பினை இல்லையே" என்று கதறினான். மூவரும் துலாஸ்நானம் செய்யும் பேறு கிட்டாததால் பெரிதும் கவலையுற்றனர்.

இவர்களது பக்தியில் கட்டுண்ட எம்பெருமான் கைலாயபதி இந்த மூவரின் விண்ணப்பத்தை ஏற்று அசரீரியாக; "ஐப்பசி கடைசி நாள் துலா ஸ்நானம் முடிந்து விட்டாலும் என் அன்பிற்குறியவர்களான உங்களுக்காக நாளை ஒரு நாளும் நீட்டித்துத் தருகிறேன்; இந்த நாளில் ஸ்நானம் செய்தால் நம்முள்ளே சேர்ந்துள்ள பாவம் விலகி புண்ணியம் பெறலாம்'"என அருளினார்; இதனால் அந்த மூவரும் முக்தி பெற்றனர். அன்று முதல் கார்த்திகை முதல் நாளை "முடவன் முழுக்கு' என்று அழைக்கலாயிற்று.

நாத சர்மா, அனவித்யாம்பிகை தம்பதிகள் ஐக்கியமான சிவலிங்கங்கள் மயூரநாத சுவாமி ஆலயத்தில் அபயாம்பிகா சந்நிதிக்கு தென்புறத்தில் உள்ளது. இதில் பெண் அடியாரான அனவித்யாம்பிகை ஐக்கியமான லிங்கத்தின் மீது சேலை அணிவிக்கப்படுவது வேறு எந்த சிவாலயத்திலும் காண முடியாத சிறப்பு அம்சமாகும். மயூரநாத சுவாமி ஆலயத்திற்கு வழிபட வருபவர்கள் இந்த தம்பதிகள் ஐக்கியமான லிங்கங்களையும் தரிசனம் செய்தால் மட்டுமே வழிபாடு நிறைவு பெறும் என்பது இறைவாக்கு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com