
சபரிமலையில் உள்ள 18 படிகளிலும் 18 தெய்வங்களும், பல்வேறு தத்துவங்களும் அடங்கியுள்ளது.
கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் 18 படிகள் உள்ளன. இது பல ஆயிரம் வருடத்திற்கு முன்பே பந்தள ராஜாவால் கட்டப்பட்டது. இந்த 18 படிகள் ஏறிச்சென்று தான் சர்ம சாஸ்தாவான ஐயப்பனைத் தரிசிக்க முடியும்.
சபரிமலை 18 மலைகளால் சூழப்பட்ட புண்ணிய ஷேத்திரமாகும். சபரிமலைக்கு செல்லும் முன்பு சில முக்கிய கோயில்களைத் தரிசனம் செய்துவிட்டு செல்லவேண்டும். பதினெட்டுப் படியிலும், 18 தெய்வங்கள் வாசம் செய்து பக்தர்களுக்கு அருள்புரிவதாகச் சொல்லப்படுகிறது.
சபரிமலையின் பதினெட்டுப் படிகள், பக்தியுடன் அணுகவேண்டியவை. பக்தி சிரத்தையுடன் ஆத்மார்த்தமான பிரார்த்தனையுடன் அந்தப் படிகளைக் கடக்கும் போது, அந்தப் படிகளின் சக்தி நமக்குள் வியாபிக்கும். எதையோ சாதித்தது போல் நம்மை உணர வைக்கும். அதையெல்லாம் அனுபவித்தவர்களுக்கே தெரியும்.
சிவ சக்தியுடன் கலந்த விஷ்ணு சக்தியே இந்த பதினெட்டு படிகள். 18 புராணங்களையும், பகவத் கீதையில் பதினெட்டு அத்தியாயங்களையும் குறிக்கிறது என்று முன்னோர்களால் சொல்லப்பட்டது. காவல் தெய்வங்கள் இருக்குமிடமெல்லாம் பதினெட்டு படி அமைப்பது ஒரு வழக்கமாக இருந்தது.
ஐயப்பன் சன்னிதானத்தில் உள்ள பதினெட்டு படிகளும், ஐந்து பஞ்சேந்திரியங்கள், எட்டு ராகங்கள், மூன்று குணங்கள், ஞானம் ஒன்று. அஞ்ஞானம் ஒன்று என்ற பதினெட்டையும் தாண்டி வருகின்ற பக்தனுக்குத்தான் ஐயனை வழிபடத் தகுதி உண்டு.
அளப்பறியச் சக்திகளைக் கொண்ட பதினெட்டு படிகளில் வசிக்கும் தெய்வங்களை பற்றித் தெரிந்துகொள்வோம்.
முதல் படியில் - சூரியனும், இரண்டாவது படியில் - சிவனும், மூன்றாவது படியில் - சந்திரனும், நான்காம் படியில் - பராசக்தியும், ஐந்தாம் படியில் - செவ்வாயும்,
ஆறாம் படியில் - முருகனும், ஏழாம் படியில் - புதனும், எட்டாம் படியில் - விஷ்ணுவும், ஒன்பதாம் படியில் - குருவும், பத்தாம் படியில் - பிரம்மாவும் வீற்றிருக்கின்றனர்.
பதினோராம் படியில் - சுக்கிரனும், பனிரெண்டாம் படியில் - லட்சுமியும், பதிமூன்றாம் படியில் - சனீஸ்வரர், பதினான்காம் படியில் - எமனும், பதினைந்தாம் படியில் - ராகுவும், பதினாறாம் படியில் - சரஸ்வதியும், பதினேழாம் படியில் - கேதுவும், பதினெட்டாம் படியில் விநாயகரும் குடிகொண்டுள்ளனர்.
இதில் ஒரு விஷயம் கவனிக்கப்பட வேண்டியவை? ஒற்றைப்படை வரிசையில் நவக்கிரகங்களும், இரட்டைப் படை வரிசையில் தெய்வங்களும் இருப்பதாக ஐதீகம்.
இந்தப் பதினெட்டுப் படிகளுக்கும் ஆண்டுக்கு ஒருமுறை கார்த்திகை மாத மண்டல காலத்தில் பூஜைகள் நடத்தப்படுகிறது. அந்த படிபூஜை மிகவும் பிரம்மாண்ட முறையில் நடத்தப்படுகிறது. 18 படிகளையும் சுத்தம் செய்து, பட்டு விரித்து, பூக்களாலும், பழங்களாலும் அலங்கரிப்பார்கள்.
அதையடுத்து 18 படிகளிலும் வெள்ளி கலசங்களைக் கொண்ட நீரால் அபிஷேகம் செய்வார்கள். இறுதியாக, தேங்காய் உடைத்து நெய் ஊற்றி விளக்கேற்றி, ஐயப்பனுக்கு உகந்த அரவணப்பாயசம் நிவேதனமாகப் படைப்பார்கள். படிபூஜையை காணக் கண் கோடி வேண்டும் மெய் சிலிர்த்துவிடும்.
சபரிமலைக்குச் சென்று படிபூஜையை தரிசிப்பது மட்டும் பெரிதல்ல, அவற்றின் மகத்துவத்தையும் தெரிந்துகொள்வது அவசியம். படிப்பூஜையை காணும் போது அதற்குண்டான தெய்வத்தையும் மனத்தில் நிறுத்தி வழிபாடு செய்யுங்கள். தர்ம சாஸ்தா உங்களின் வாழ்க்கையை படிப்படியாக உயர்த்துவார்.
சாமியை சரணம் ஐயப்பா.. சாமியை சரணம் ஐயப்பா.. சாமியை சரணம் ஐயப்பா..!