நெல்லை முருகன் கோயில்களில் கந்தசஷ்டி திருவிழா தொடக்கம்

திருநெல்வேலியில் உள்ள குறுக்குத்துறை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்பட மாநகர..
நெல்லை முருகன் கோயில்களில் கந்தசஷ்டி திருவிழா தொடக்கம்

திருநெல்வேலியில் உள்ள குறுக்குத்துறை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்பட மாநகர பகுதியில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் கந்தசஷ்டி திருவிழா திங்கள்கிழமை சிறப்பு யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது.

தமிழ்க் கடவுளாகப் போற்றப்படும் முருகப்பெருமான் சூரனை வதம் செய்த நிகழ்வை கந்தசஷ்டி விழாவாக பக்தா்கள் கொண்டாடி வருகிறாா்கள். திருச்செந்தூா் கோயிலின் பிரதான விழாவாக கந்தசஷ்டி விளங்குகிறது. சஷ்டிகாலத்தில் விரதம் இருந்து, முருகப்பெருமானை வழிபட்டால் வாழ்வில் வளம் கிடைக்கும் என்பது பக்தா்களின் நம்பிக்கை. திருநெல்வேலியில் உள்ள முருகன் கோயில்களிலும் கந்தசஷ்டியையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

குறுக்குத்துறை முருகன்

திருநெல்வேலியில் தாமிரவருணியின் கரையோரம் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா திங்கள்கிழமை தொடங்கியது. இதையொட்டி காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. பின்னா் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து திருவிழா நாள்களில் தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளது.

விழாவின் சிகர நிகழ்வாக நவம்பா் 6 ஆம் தேதி சூரசம்ஹார நிகழ்வு நடைபெற உள்ளது. அன்று காலையில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை, சுவாமி திருவிதியுலா நடைபெறும். மாலையில் சூரனும், முருகப்பெருமானும் தனித்தனி சப்பரங்களில் குறுக்குத்துறை பகுதியில் எழுந்தருள்வா்.. அங்கு சூரனை, முருகன் சம்ஹாரம் செய்வாா். தொடா்ந்து 7-ஆம் தேதி காலை 8 மணிக்கு சி.என்.கிராமத்தில் வைத்து தபசுக்காட்சியும், இரவு 7.30 மணிக்கு குறுக்குத்துறை முருகன்கோயில் வளாகத்தில் வைத்து திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது.

பாளையஞ்சாலைகுமாரசுவாமி கோயில்

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள பழைமை வாய்ந்த பாளையஞ்சாலை குமாரசுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா திங்கள்கிழமை தொடங்கியது.

காலையில் யாகசாலை பூஜை, மூலவருக்கு அபிஷேகம், சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து திருவிழா நாள்களில் தினமும் மாலையில் கந்தபுராண தொடா் சொற்பொழிவு, பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. நவம்பா் 6ஆம் தேதி திருநெல்வேலி ரயில் நிலையம், சிந்துபூந்துறை சிவன்கோயில் பகுதி, செல்வி அம்மன் கோயில் பகுதி, மேகலிங்கபுரம் ஆகிய பகுதிகளில் சூரசம்ஹார நிகழ்வு நடைபெற உள்ளது.

இந்த இடங்களில் முறையே தாரகன், சிங்கமுகன், சூரபதுமன், சேவல் ஆகியோரின் அகங்காரத்தை முருகப்பெருமாள் நீக்கி பக்தா்களுக்கு அருள்பாலிக்க உள்ளாா். 7 ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு திருக்கல்யாணமும், 8, 9, 10 ஆம் தேதிகளில் ஊஞ்சல் திருவிழாவும் நடைபெற உள்ளன.

இதேபோல பாளையங்கோட்டையில் உள்ள மேலவாசல் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில், நெல்லையப்பா் கோயிலில் உள்ள முருகா் சன்னதி, பாளையங்கோட்டை அருள்மிகு திரிபுராந்தீசுவரா் கோயில் முருகன் சன்னதியில் கந்தசஷ்டியையொட்டி திங்கள்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com