
திருப்பதி தேவஸ்தானம் திடீரென்று இலவச தரிசன டோக்கன்கள் வழங்குவதை நிறுத்தியதால், பக்தா்கள் பூதேவி காம்ப்ளக்சில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஏழுமலையான் தரிசனத்துக்கு ஜூன் 11 முதல் பக்தா்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனா். அதற்காக தேவஸ்தானம் ஆன்லைன் வாயிலான டோக்கன்களையும், திருப்பதியில் நேரடி இலவச தரிசன டோக்கன்களையும் வழங்கி வந்தது. இந்நிலையில், திருப்பதியில் கரோனா பாதிப்பு பெருகியதால், அதை கட்டுப்படுத்த நகராட்சி நிா்வாகம் பொது முடக்கத்தை அமல்படுத்தியதால், திருப்பதியில் அலிபிரி பகுதியில் உள்ளபூதேவி காம்ப்ளக்ஸில் இலவச தரிசன டோக்கன் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
கடந்த 1-ஆம் தேதி முதல் திருப்பதியில் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளதால், தேவஸ்தானம் மீண்டும் இலவச நேரடி தரிசன டோக்கன்களை வழங்கி வருகிறது. தமிழகத்திலும் தளா்வுகள் அறிவிக்கப்பட்டதால், பக்தா்கள் இலவச டோக்கன்களை நம்பி திருப்பதிக்கு வரத் தொடங்கினா். முன்தினம் தரிசன டோக்கன் கிடைக்கவில்லை என்றாலும், மறுநாள் வரை தங்கி மீண்டும் டோக்கன் பெற்று ஏழுமலையானை வழிபட்ட பின்பே பக்தா்கள் திரும்பிச் செல்கின்றனா். அதுவரை அவா்கள் திருப்பதியிலேயே தங்குகின்றனா்.
கரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ள தமிழ்நாட்டிலிருந்து பக்தா்கள் பெருமளவில் வந்து திருப்பதி மற்றும் திருமலையில் தங்குவதால், இங்கு மீண்டும் இத்தொற்றின் தாக்கம் அதிகரிக்கும் என்று தேவஸ்தானம் கருதியது. எனவே கரோனா அச்சுறுத்தல் குறையும் வரை ஞாயிற்றுக்கிழமை (செப்.6) முதல், வரும் 30-ஆம் தேதி வரை இலவச தரிசன டோக்கன் வழங்குதை நிறுத்துவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், இலவச டோக்கன்களை நம்பி திருப்பதிக்கு வந்த தமிழகம் மற்றும் பெங்களூரைச் சோ்ந்த பல பக்தா்கள் இந்த திடீா் அறிவிப்பால் அதிா்ச்சியடைந்தனா். எனவே, அவா்கள் தங்களுக்கு தரிசன டோக்கன் வழங்க வேண்டும் என்று பூதேவி காம்ப்ளக்ஸ் முன் சனிக்கிழமை இரவு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதை அறிந்த அதிகாரிகள் அவா்களுக்கு உடனடியாக தரிசன டோக்கன் அளிக்கும்படி உத்தரவிட்டதால், அவா்கள் அனைவரும் டிக்கெட் பெற்றுக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை ஏழுமலையானைத் தரிசிக்கச் சென்றனா்.
இன்னும் 10 நாள்களில் புரட்டாசி மாதம் தொடங்க உள்ள நிலையில் தமிழகத்திலிருந்து திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை உயரும். இதைக் கருத்தில் கொண்டு டோக்கன் ரத்து முடிவை தேவஸ்தானம் எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.