மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 1)

பாவை நோன்பைத் தொடங்குகிறாள் ஆண்டாள் நாச்சியார். கண்ணனுக்காகச் செய்கிற நோன்பில், தான் இருக்கும் இடத்தை ஆயர்பாடியாகவும் தன்னை ஆயர் பெண்ணாகவும் கற்பிதம் செய்து கொள்கிறாள்.
மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 1)

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாசுரம் 1

 மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்

 நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்

 சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்

 கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்

 ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்

 கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்

 நாராயணனே நமக்கே பறை தருவான்

 பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்!

திருப்பாவை - பாடியவர் புவனேஸ்வரி  விஸ்வநாதன்

பாடியவர் - பவ்யா ஹரி

விளக்கம்:

பாவை நோன்பைத் தொடங்குகிறாள் ஆண்டாள் நாச்சியார். கண்ணனுக்காகச் செய்கிற நோன்பில், தான் இருக்கும் இடத்தை ஆயர்பாடியாகவும் தன்னை ஆயர் பெண்ணாகவும் கற்பிதம் செய்து கொள்கிறாள். செல்வவளமிக்க ஆயர்பாடியின் பிற பெண்களை நோன்பு நோற்க அழைக்கிறாள். "மாதமோ மார்கழி, நாளோ வெளிச்சம் மிகத் தரும் முழுமதி நாள். இன்று நம்முடைய விரதத்தைத் தொடங்குவோம். அழகிய அணிமணிகளை அணிந்த பெண்களே, யாரெல்லாம் பங்குபெற வேண்டும் என்று எண்ணுகிறீர்களோ வாருங்கள், அனைவரும் நீராடுவதற்குச் செல்வோம். கூரிய வேலைக் கையில் வைத்துக்கொண்டு ஆயர்பாடி மக்களைக் காப்பாற்றுகிற நந்தகோபருடைய மகனும், எழிலார்ந்த கண்களைக் கொண்ட யசோதையின் சிங்கம் போன்ற மகனுமான கண்ணன், நோன்புக்கு வேண்டிய விளக்கு, கண்ணாடி போன்ற கருவிகளையும் நோன்புப் பரிசையும் தருவதாகச் சொல்லியிருக்கிறான். காண்பவர் கண்களைக் குளிரச் செய்கிற கருமேகம் போன்ற கருநீல மேனி கொண்டவன், உள்ளத்திலுள்ள அன்பினால் சிவந்த கண்களை உடையவன், சூரியனும் சந்திரனும் இணைந்தாற் போன்ற திருமுகம் படைத்தவன், அவனே நாராயணன், நமக்கு நன்மையும் பேறும் தருபவன். உலகத்தவர் போற்றும்படியாக நோன்பு நோற்போம், வாருங்கள்' என்று அழைக்கிறாள்.

பாசுரச் சிறப்பு: கண்ணன் அருளைப் பெறுதலே நோன்பின் நோக்கம் என்பதைக் கூறுகிற பாசுரம் (பிராப்ய ஸ்வரூபம் - அடைய வேண்டிய நோக்கம்).
 
  அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - பாசுரம் 1

 (திருவண்ணாமலையில் அருளியது)

 ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்

 சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்

 மாதே! வளருதியோ? வன்செவியோ நின்செவிதான்?

 மாதேவன் வார்கழல்கள் வாழ்த்தியவாழ்த் தொலிபோய்

 வீதிவாய்க் கேட்டலுமே, விம்மிவிம்மி மெய்ம்மறந்து

 போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்

 ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே! என்னே!

 ஈதேஎந் தோழி பரிசேலோர் எம்பாவாய்!

பாடலை விளக்குபவர் - இலக்கிய மேகம் ந. சீனிவாசன்

பாடியவர் - மயிலை சற்குருநாதன்

பாடியவர் கரூர் சுவாமிநாதன்

விளக்கம்: சிவப்பரம் பொருளிடத்து ஆழ்ந்த அன்பு பூண்ட பெண் ஒருத்தி, நோன்புக்கு வருமாறு இன்னொரு பெண்ணை அழைப்பதாக அமைந்த பாடல். "தொடக்கமும் முடிவும் இல்லாத, அரிய பெரிய ஒளியாகத் திகழ்கிற இறைவனை நாங்கள் பாடுகிறோம். அழகிய பெரிய கண்களைக் கொண்டவளே! எங்கள் பாட்டொலி கேட்ட பின்னரும் உறங்குகிறாயோ? உன்னுடைய செவியென்ன இரும்புச் செவியோ? முழுமுதற் கடவுளாம், மாதேவனாம் சிவபெருமானின் திருவடிப் பெருமைகளை நாங்கள் பாடுகிறோம். எங்கள் குரலின் ஒலி, வீதியின் கோடியிலிருக்கும் நம் தோழி ஒருத்திக்குக் கேட்டுவிட்டது. அன்பினால் நெகிழ்ந்து அழுது, தன்னையே மறந்து, தான் படுத்திருந்த படுக்கையிலிருந்து கீழே விழுந்து புரண்டு, சிவபெருமான் பெருமையில் ஆழ்ந்துபோய், தன் நிலையிழந்து கிடக்கிறாள். அவளும் எங்கள் தோழி; கேட்கும் திறனை இழந்த செவிகளைக் கொண்ட நீயும் எம் தோழி. அவள் பரமன் வசப்பட்டாள், நீயென்ன படுக்கை வசப்பட்டாயோ?' என்று உள்ளே உறங்கும் பெண்ணைப் புறத்தில் நிற்பவள் அழைக்கிறாள்.

கண் வளர்தல் என்பது உறக்கம். உறங்கும்போது கண்கள் மூடியிருந்தாலும், செவிகள் திறந்துதானே இருக்கும். இறைவன் பெருமையைப் பாடுகிற பாட்டின் ஒலி, அந்தச் செவிகளில் புகவில்லையா? என்னும் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் பாடல்.

பாடல் சிறப்பு: ஞான வெளிச்சத்தில் அனைத்தையும் வெளிப்படுத்துகிற இறைவனின் பேராற்றலைப் போற்றுகிற இப்பாடலில், மனோன்மனி (மன+உன்மனி) என்னும் சிவசக்தி எழுப்பப்படுவதாகக் கணக்கு. ஒவ்வொருவர் அகத்திலும் உள்ள சிவசக்தியை எழுப்புவதாகக் கொள்ளலாம்.

 - டாக்டர் சுதா சேஷய்யன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com