மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 4)

நோன்பு நோற்கச் செல்லும் பெண்கள் மழைக் கடவுளை நோக்கி மழை பொழியுமாறு வேண்டுகிற பாசுரம். "மழைக் கடவுளே! உன்னுடைய தன்மையை நீ ஒளித்துக் கொள்ளாதே.
மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 4)

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாசுரம் 4

ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்

ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேறி

ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து

பாழியந் தோளுடைப் பத்பநாபன் கையில்

ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து

தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்

வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

திருப்பாவை - பாடியவர் புவனேஸ்வரி விஸ்வநாதன்

பாடியவர் - பவ்யா ஹரி

விளக்கம்:

நோன்பு நோற்கச் செல்லும் பெண்கள் மழைக் கடவுளை நோக்கி மழை பொழியுமாறு வேண்டுகிற பாசுரம். "மழைக் கடவுளே! உன்னுடைய தன்மையை நீ ஒளித்துக் கொள்ளாதே. கடலுக்குள் புகுந்து, அங்கிருந்து நீரை முகந்துகொண்டு மேலே ஏறி, மேகமாகி, ஊழிப்பிரளய காலத்திலும் தான் ஒருவன் மட்டுமே இருக்கும் எம்பெருமான் கண்ணனின் திருமேனிபோல் கருமை பெற்று, அழகிய தோள்களை உடைய பத்மநாபனின் வலது திருக்கரத்தில் திகழும் திருவாழிச் சக்கரம்போல் மின்னல் மின்னி, இடது திருக்கரத்தில் உள்ள திருச்சங்கம் போல் இடியென அதிர்ந்து, சார்ங்க வில்லிலிருந்து புறப்படும் அம்புகள் போல் சரம் சரமாக மழை பொழிந்துவிடு. உனது மழைக் கொடையினால் உலகம் வாழட்டும். நாங்களும் மகிழ்வோம்' என்று கோரிக்கை வைக்கிறார்கள்.  

பாசுரச் சிறப்பு:

முந்தைய பாசுரத்தில் (கீழ்ப் பாசுரம்) நோன்பு வழிபாட்டையும் அதன் பலனையும் கூறிய ஆண்டாள், இந்தப் பாசுரத்தில், அந்தப் பலனை விரித்துக் கூறுகிறாள். தீங்கின்றிப் பெய்யும் திங்கள் மும்மாரியானது, அனைவரும் வாழும்படியாகப் பெய்யும் என்பதை உறுதி செய்கிறாள். மேகம், மின்னல், இடி, மழை என்று யாவுமே எம்பெருமானாகத் தெரியும் அளவுக்கு அன்பில் தோய்ந்துள்ளனர் இப்பெண்கள் எனலாம். 

  அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - பாடல் 4

ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ?

வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ?

எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்

கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே

விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்

கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்

உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்து

எண்ணிக் குறையில், துயிலேலோ ரெம்பாவாய்.

பாடலை விளக்குபவர் - இலக்கிய மேகம் ந. சீனிவாசன்

பாடியவர் - மயிலை சற்குருநாதன்

பாடியவர் - கரூர் சுவாமிநாதன்

விளக்கம்:  

உள்ளும் புறத்துமான உரையாடல் இப்பாடலிலும் தொடர்கிறது. புறம்: ஒளிபொருந்திய முத்துப் போன்ற பற்களையும் புன்சிரிப்பையும் கொண்டவளே, இன்னும் விடியவில்லையோ? 

உள்: கிளி போன்று பேசும் பெண்கள் எல்லோரும் வந்துவிட்டனரா? 

புறம்: நாங்கள் உள்ளவர்கள் உள்ளபடிச் சொல்லுகிறோம்; நீயே எண்ணிக்கொள். ஆனால், நாங்கள் சொல்கிற நேரத்திலும் தூங்கிக் கொள்ளலாம் என்றெண்ணிக் காலத்தை வீணடித்துவிடாதே. விண்ணவர்களுக்கு அமிழ்தமாகவும், வேதங்களின் சிறப்புப் பொருளாகவும், நமக்கெல்லாம் கண்ணுக்கினிய திருமேனி கொண்டவனாகவும் உள்ள சிவப்பரம்பொருளைப் பாடுகிறோம். நீயும் வந்து பாடி, உள்ளம் கசிந்து, நெஞ்சம் நெகிழ்ந்து உருகுவாயாக. இல்லையெனில், நீயே வந்து எண்ணிப் பார்; (எங்கள்) எண்ணிக்கை குறைந்தால் மீண்டும் போய் உறங்கிக் கொள்.

பாடல் சிறப்பு:

நான்கைந்து பேர் இருக்கும் வீடுகளில், சர்வ சாதாரணமாக நடைபெறுகிற காட்சி உண்டு. எல்லோருமாக எங்கேனும் பு றப்பட வேண்டுமென்றால், கடைசி நிமிடம் வரை ஒருவரையொருவர் காரணம் காட்டித் தாமதப்படுத்துவார்கள். இந்த மனநிலையை, செய்யவேண்டிய செயலைச் செய்வதற்கு இறுதி நொடிவரை இழுக்கிற மனோபாவத்தை இப்பாடல் சுட்டுகிறது. ஒளியும் குளுமையும் பொருந்திய சந்திர சக்தியாக அகத்துள் திகழும் பலவிகரணி சக்தி எழுப்பப்படுகிறது. 

-டாக்டர் சுதா சேஷய்யன் 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com