மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 7)

கீழ்ப்பாசுரத்தில் விளிக்கப்பட்ட பெண், பிள்ளைமையும் பேதைமையும் கொண்ட சிறுமி. இந்தப் பாசுரத்தில் விளிக்கப்படுபவள், தன்னுடைய மதியை முனைப்பாகப் பயன்படுத்தாதவள்.
மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 7)

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாசுரம் 7

கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து

பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே!

காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து

வாசநறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்

ஓசைபடுத்த தயிரரவம் கேட்டிலையோ?

நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி

கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ

தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்!

பாடியவர் பவ்யா ஹரி

விளக்கம்:

கீழ்ப்பாசுரத்தில் விளிக்கப்பட்ட பெண், பிள்ளைமையும் பேதைமையும் கொண்ட சிறுமி. இந்தப் பாசுரத்தில் விளிக்கப்படுபவள், தன்னுடைய மதியை முனைப்பாகப் பயன்படுத்தாதவள். வெளியில் நிற்பவர்கள், பொழுது புலரத் தொடங்கிவிட்டதற்கான அடையாளங்களைக் கூறுகிறார்கள். "எல்லா இடங்களிலும் வலியன் என்னும் கரிக்குருவிகள்,கீசுகீசென்று ஒலியெழுப்புகின்றன, அது உனக்குக் கேட்கவில்லையா? வாசனாதி திரவியங்களால் மணம் கமழும் கூந்தலையுடைய ஆய்ச்சிப் பெண்கள் அசையும்போது, அவர்கள் அணிந்திருக்கும்  அச்சுத் தாலியும் ஆமைத்தாலியும் அசைந்து உரசி ஒலிக்கின்றன, அது கேட்கவில்லையா? அவர்கள், மத்தினால் தயிர் கடைகிறார்கள், அந்த ஒலியும் கேட்கவில்லையா? அதெல்லாம் போகட்டும், நாங்கள் உன் வீட்டு வாசலில் நின்று நாராயண மூர்த்தியான கேசவனைப் பாடுகிறோமே, இந்தப் பாட்டொலியும் கேட்கவில்லையா? இன்னமும் கிடந்து உறங்குகிறாயோ? ஒளி பொருந்தியவளே, கதவைத் திற' என்று அழைக்கிறார்கள். 

பாசுரச் சிறப்பு:

பிற பகுதிகளில் வலியன் என்றும் வடமொழியில் "பாரத்வாஜம்' என்றும் வழங்கப்படுகிற கரிக்குருவி, தென் தமிழ்நாட்டில் ஆனைச் சாத்தன் என்று வழங்கப்படும். இப்போதும் மலையாளத்தில் ஆனசாதம் என்றாகும். பறவைகளுக்கு மலர்கள் மீது பிரியம். நீர்ப்பூவான (கடலில் இருப்பதால்) பாற்கடல் நாதன்மீதும், நிலப்பூக்களான (பூவுலக அவதாரமாகையால்) ராமகிருஷ்ணர்கள் மீதும், மரப்பூவான (உயரத்தில் இருப்பதால்) பரமபதநாதன் மீதும் இடையறா அன்பு செலுத்துபவரைப் பறவை என்று குறிப்பது இப்பாசுரங்களின் நயம். உள்ளுறைப் பொருளில், இப்பாசுரம் குலசேகராழ்வாரைச் சுட்டும். 

அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - பாடல் 7

அன்னே, இவையும் சிலவோ? பலவமரர்

உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்

சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்!

தென்னாஎன் னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய்!

என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமும்

சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ?

வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்,

என்னே துயிலின் பரிசேலோ ரெம்பாவாய்!

பாடலை விளக்குபவர் - இலக்கிய மேகம் ந. சீனிவாசன்

பாடியவர் - மயிலை சற்குருநாதன்

பாடியவர் - சுந்தர் ஓதுவார்
 

விளக்கம்:

இதற்கு முந்தைய இரண்டு பாடல்களும் இப்பாடலும், புறத்தே நிற்கும் பெண்களின் கூற்று மட்டுமாகவே அமைகின்றன. "தேவர்களும் எண்ணிப் பார்த்தற்கு அரியவன், ஒப்பற்றவன், மிகுந்த பெருமைக்கு உரியவன். அப்படிப்பட்ட இறைவனுக்கான திருச்சின்னங்கள் (சிறப்பு இசைக் கருவிகள்) அதிகாலையில் ஒலிக்கத் தொடங்கியவுடனேயே "சிவ சிவ' என்று கூறுபவள் நீ. தென்னாடு என்னும் சொல்லில் "தென்னா' என்னும் ஒலி கேட்டவுடனேயே அனலில் உருகும் மெழுகுபோல் சிவபெருமானை நினைத்து உருகிப் போவாய். இப்பொழுது உனக்கு என்ன நேர்ந்துவிட்டது? உன் வீட்டு வாயிலில் நின்று எங்கள் அன்பிற்குரியவனே, எங்கள் தலைவனே, எங்கள் அமுதமே என்று பலப்பல உரைத்து இறைவன் புகழைப் பாடுகிறோம். இன்னமும் உறங்குகிறாயோ? இரும்பு மனம் கொண்டவர்போல் கிடக்கிறாயே!  அடடா, இதுதான் உறக்கத்தின் பரிசோ?' என்று வெளியில் நிற்பவர்கள் வருத்தம் காட்டுகிறார்கள். 

பாடல் சிறப்பு:

சிவனாரின் அடையாளங்களை எட்டத்தில் கேட்டபோதும் கண்டபோதும் உருகியவள், இப்போது எழாமல் கிடப்பதே விந்தை. பக்தியானது விட்டும் தொட்டும் இருக்கலாகாது என்பதை உணர்த்தும் பாடல். சின்னம் என்பதைக் "கேட்ப' என்னும் சொல்லைக்கொண்டு, "திருச்சின்னம்' என்றழைக்கப்படுகிற இசைக்கருவியாகக் கொள்ளலாம். திருநீறு, உருத்திராக்கம் போன்ற சிவச்சின்னங்களையும் சேர்த்து, "சின்னங்கள் கேட்ப, காண' என்றும் விரித்துக் கொள்ளலாம். அகத்தின் அக்னி ரூபரெüத்திரி சக்தி எழுப்பப்படுகிறது. 

 -டாக்டர் சுதா சேஷய்யன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com