மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 13)

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 13)

இதுவும் துயிலெடை. "பறவை வடிவம் கொண்டுவந்த பகாசுரனின் வாயைக் கிழித்து அழித்தவனும், கொடிய இராவணனைக் குலத்தொடும்..

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாசுரம் 13

புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்

கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்

பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்

வெள்ளி எழுந்து வியாழ முறங்கிற்று

புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்

குள்ளக் குளிரக் குடைந்துநீ  ராடாதே

பள்ளிக்கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்

கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.

பாடியவர் - பவ்யா ஹரி
 

விளக்கம்:

இதுவும் துயிலெடை. "பறவை வடிவம் கொண்டுவந்த பகாசுரனின் வாயைக் கிழித்து அழித்தவனும், கொடிய இராவணனைக் குலத்தொடும் வேரறுத்தவனுமான எம்பெருமானுடைய பெருமைகளைப் பாடிக்கொண்டே நோன்புக் களத்திற்குப் பெண்கள் சென்றுவிட்டனர். கிழக்கே வெள்ளி முளைத்துவிட்டது. வியாழக் கோள் இறங்கிவிட்டது. பறவைகள் பலவகைகளிலும் ஒலி எழுப்புகின்றன. மலர்போன்ற கண்களைக் கொண்ட அழகானவளே. (அதிகாலைப் பொழுதில்) ஆற்றில் குள்ளக் குடைந்து நீராடாமல் இவ்வாறு உறங்கிக் கிடக்கிறாயே' என்று உள்ளிருப்பவளைப் புறத்திருப்போர் அழைக்கின்றனர். பிறரெல்லாம் நோன்புக் களம் போன பின்னாலும் நீ இன்னும் உறங்கலாமா? என்னும் அங்கலாய்ப்பு.

பாசுரச் சிறப்பு: கிருஷ்ணாவதார, இராமாவதாரப் பெருமைகளை இப்பெண்கள் பாடுகின்றனர். விடியலின் அடையாளங்களாக வெள்ளி எழுவதும் வியாழன் விழுவதும் காட்டப்பெறுகின்றன. முதலில் பறவைகளின் ஒலி என்று பொதுவாய்ச் சொல்லி, பின்னர் ஆனைச்சாத்தனைக் காட்டியவர்கள், இப்போது மீண்டும் பறவைகள் என்கின்றனர். எல்லா வகைப் பறவைகளும் ஒலியெழுப்பதால், பொழுது நிறையவே புலர்ந்துவிட்டது எனக் கொள்ளலாம். இனிமை கூறுவதில் குயில் போலவும், ஒருமுகச் சிந்தனையில் கொக்கு போலவும், நன்மையை ஈர்ப்பதில் அன்னம் போலவும், எம்பெருமான் தொண்டில் கருடன் போலவும் இருக்கவேணும்.  ஸ்வாபதேச முறையில், தொண்டரடிப் பொடி ஆழ்வாரைக் குறிக்கும் பாசுரம். 

அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - பாடல் 13

பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்

அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால்

தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்

எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த

பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம்

சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்

கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்

பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய். 

பாடலை விளக்குபவர் - இலக்கிய மேகம் ந. சீனிவாசன்

பாடியவர் - மயிலை சற்குருநாதன்

பாடியவர் - மயிலாடுதுறை சிவகுமார்

விளக்கம்:

பொய்கையை அடைந்த பெண்கள், அப்பொய்கையையும் அம்மையப்பனாகவே காண்கிறார்கள். கருமையான குவளை மலர், கருமேனி கொண்ட  அம்மையாகத் தோற்றம் தர, தாமரையின் செம்மை ஐயனை நினைவூட்டுகிறது. வெண்குருகுப் பறவைகள் நீரில் விளையாடுகின்றன; சிற்றலைகள் பாம்புகள் போல் நெளிகின்றன. இவற்றைக் காண, இறைவன் திருமேனியில் திகழும் குருக்கத்தி மாலையும் பாம்பணிகளும் நினைவு வருகின்றன. உடல் அழுக்கைப் போக்கிக்கொள்ள விரும்புவோர் பொய்கைக்கு வருகின்றனர். மன அழுக்கைப் போக்கிக்கொள்ள விரும்புவோர், இறைவன் காலடியில் பணிகின்றனர். ஆக, இப்பொய்கையைக் கண்டால், மொத்தத்தில் அம்மையும் அப்பனுமாகத் தெரிகிறது. இத்தகைய பொய்கையில் பாய்ந்து, வளைகளும்சிலம்புகளும் ஓசையெழுப்ப, மார்புகள் அசையவும் நீர் மேலெழும்பிப் பொங்கவும் நீராடுகின்றார்கள். 

பாடல் சிறப்பு:  

அழகென்பது காண்பவர் கண்ணைப் பொறுத்தது என்பார்கள். முதலில் குளமாகத் தெரிந்த ஒன்று, இப்போது இறைவன் இறைவியாகத் தெரிகிறது. பொருள், பொருளாக மட்டும் தெரிவது பக்குவமற்ற நிலை. பொருள் மறைந்து இறைமை தெரிவது ஆன்மப் பக்குவம் பெற்ற நிலை. பக்குவ நிலையை இப்பெண்கள் அடைந்து விட்டனர். "சங்கம்' என்பது கை வளையலுக்கான பெயர்; முற்காலத்தில், சங்குகளை அரிந்து வளையல்கள் செய்யப்பட்டதால் வந்த பெயர். அம்மையும் அப்பனும் இணைந்தே இருப்பர், சக்தியும் சிவமும் கலந்தே இருக்கும் என்பதை உணர்த்தும் பாடல். 

-டாக்டர் சுதா சேஷய்யன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com