மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 20)

கண்ணனும் நப்பின்னையுமான திவ்விய தம்பதிகள் எழுப்பப்படுகிற பாசுரம். முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு ஏதேனும் துன்பம் வருவதற்கு..
மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 20)

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாசுரம் 20

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று

கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய்!

செப்பமுடையாய் திறலுடையாய் செற்றார்க்கு

வெப்பம் கொடுக்கும் விமலா துயிலெழாய்!

செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்

நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய்!

உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை

இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்.

பாடியவர் - பவ்யா ஹரி


விளக்கம்:

கண்ணனும் நப்பின்னையுமான திவ்விய தம்பதிகள் எழுப்பப்படுகிற பாசுரம். முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு ஏதேனும் துன்பம் வருவதற்கு முன்னரே சென்று, அவர்களின் நடுக்கத்தை நீக்கக்கூடிய கண்ணனே, எழுந்திருக்க வேணும். (அடியார்களைக் காக்கும்) உறுதி கொண்டவனே, வலிமை உடையவனே, பகைவர்களுக்கு நடுக்கம் தரக்கூடிய தூய்மையாளனே, எழுந்திருக்க வேணும். அழகிய மார்புகளையும் சிவந்த வாயையும்நுண்ணிடையையும் கொண்ட நப்பின்னையே, செல்வத்திற்குரியவளே, எழுந்திருக்க வேணும். நோன்புக்கு உபகரணங்களான ஆலவட்ட விசிறியையும் கண்ணாடியையும் தந்தருளி, உன் மணாளனான கண்ணனை (எங்களுக்கு அருள) அனுப்ப வேணும். 

பாசுரச் சிறப்பு:

கண்ணனைப் பாராட்டிவிட்டு, நப்பின்னையிடத்தில் பிரார்த்திக்கிறார்கள். முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு அருளியதை எடுத்துக் காட்டுகிறார்கள். அத்தனை பேருக்கு அருளிய கண்ணனுக்கு, இந்தச் சிறுமிகளுக்கு அருள்வது எம்மாத்திரம் என்பது குறிப்பு. "தேவர்களுக்காவது செருக்கும், ஆணவமும், இறுமாப்பும் உண்டு. எமக்கு அவையெல்லாம் இல்லையே' என்னும் ஆதங்கத்தின் வெளிப்பாடு. நோன்பு நோற்பதற்கும் வழிபாடு செய்வதற்கும் தக்க பொருள்கள் சில பயன்படுத்தப்படும். அவற்றில் விசிறியும் கண்ணாடியும் மட்டுமே இங்கே பேசப்படுகின்றன. பலவற்றுக்கு ஓர் எடுத்துக்காட்டு என்னும் வகையில்,  அனைத்து உபகரணங்களையும் குறிப்பால் உணர்த்துவதாகக் கொள்ள வேண்டும்.

அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை - பாடல் 20

போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்

போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள்

போற்றியெல் லாவுயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்

போற்றியெல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்

போற்றியெல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்

போற்றிமால் நான்முகனும் காணாத புண்டரிகம்

போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்

போற்றியாம் மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய். 


பாடலை விளக்குபவர் - இலக்கிய மேகம் ந. சீனிவாசன்

பாடியவர்கள் : ஆலவாய் அண்ணல் பாடசாலை மாணவர்கள்

பாடியவர் - மயிலை சற்குருநாதன்


பாடியவர் - பொன் முத்துக்குமரன்
 

விளக்கம்:

திருவெம்பாவையின் நிறைவுப் பாடல். நோன்பை நிறைவு செய்யும் பெண்கள், இறைவனின் திருவடிகளைப் போற்றுகின்றனர். "எல்லாவற்றுக்கும் தொடக்கமாக இருக்கும் நின் திருவடிகளுக்குப் போற்றி. எல்லாவற்றுக்கும் இறுதியாக இருக்கும் திருவடிகளுக்குப் போற்றி. உயிர்களும் பொருள்களும் உயர்திணையும் அஃறிணையும் தோன்றுவதற்குக் காரணமான திருவடிகளுக்குப் போற்றி. வாழ்க்கையை அனுபவிக்கக் காரணமான திருவடிகளுக்குப் போற்றி. அனைத்து உயிர்களும் சென்று சேர்கிற இடமான திருவடிகளுக்குப் போற்றி. திருமாலும் பிரம்மாவும் காணாத திருவடிகளுக்குப் போற்றி. எமக்கு உய்யும் கதி நல்குகிற திருவடிகளுக்குப் போற்றி. இப்பேற்றையெல்லாம் அளிக்கவல்ல மார்கழி நோன்புக்கும் நீராட்டத்திற்கும் போற்றி'} போற்றி போற்றி என்று சிவப்பரம்பொருளின் சகல மேன்மைகளையும் போற்றுகின்றனர். 

பாடல் சிறப்பு:

நிறைவுப் பாடலில் "மார்கழி நீராடல்' என்று இத்தனை நாள்கள் நோற்ற நோன்பினைமாணிக்கவாசகப் பெருமான் குறிப்பிடுகிறார். நோன்பு நோற்ற பெண்கள், இறைவனுடைய திருவடிகளுக்குப் பலவகைகளிலும் போற்றி உரைக்கின்றனர். முதல் இரண்டு அடிகளில் அனைத்திற்கும் ஆதியும் அந்தமுமாகக் கடவுள் விளங்குவது விளக்கப்படுகிறது. தொடக்கப் பாடலில் "ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி' என்று தொடங்கியது இங்கு குறிக்கத்தக்கது. அனைத்துக்கும் ஆதியும் அந்தமுமான இறைவன், தனக்கு ஆதியும் அந்தமும் இல்லாதவன். ஐந்தொழில்களும் இப்பாடலில் காட்டப்படுகின்றன. "தோற்றம் பொற்பாதம்' என்பது படைத்தல்;  "போகம் பூங்கழல்' என்பது காத்தல்; "ஈறு இணையடி' என்பது அழித்தல்; "மாலும் பிரம்மாவும் காணாத புண்டரீகம்' என்பது மறைத்தல்; "உய்ய அருளும் பொன்மலர்' என்பது அருளல். சிவபெருமானே முழுமுதல் காவல் என்பதை  உணர்த்துகிற பாடல். 

-டாக்டர் சுதா சேஷய்யன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com