மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 21)

கண்ணன் அருளை வேண்டுகிற பாசுரம். "மடியின் கீழே பாத்திரத்தை வைத்தால், பொங்கப் பொங்கப் பாலைத் தவறாமல் சொரியக்கூடிய தன்மையைக் கொண்ட..
மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 21)

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாசுரம் 21

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப

மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்

ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்

ஊற்ற முடையாய் பெரியாய் உலகினில்

தோற்றமாய் நின்ற சுடரே துயிலெழாய்

மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்

ஆற்றாது வந்துன் னடிபணியு மாபோலே

போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்!


பாடியவர் - பவ்யா ஹரி

விளக்கம்:

கண்ணன் அருளை வேண்டுகிற பாசுரம். "மடியின் கீழே பாத்திரத்தை வைத்தால், பொங்கப் பொங்கப் பாலைத் தவறாமல் சொரியக்கூடிய தன்மையைக் கொண்ட பெரிய பசுக்கள் பல கொண்ட  நந்தகோபனுடைய திருமகனே, எழுந்திருக்கவேணும். ஆழ்ந்த வலு கொண்டவனே,  பெருமை பொருந்தியவனே,  பேரொளியாக உலகத்தில் தோற்றம் தந்தவனே, பகைவர்கள் தங்களின் வலிமையை உன்னிடத்தில் தொலைத்து, உன் மாளிகை வாசலுக்கு வந்து உன் திருவடிகளில் பணிவது போலவே, நாங்களும் உன்னைப் புகழ்ந்து போற்றி வந்திருக்கிறோம்' என்று கூறி, கண்ணனின்அருளை வேண்டுகிறார்கள். 

பாசுரச் சிறப்பு:

மறைமுகமாகச் சிலவற்றைக் கண்ணனுக்குக் கூறுவதுபோல் அமைந்திருக்கும் பாசுரம் இது. "உன்னுடைய தந்தையிடம் இருக்கும் பசுக்களுக்கே, பாத்திரத்தை வைத்தால் பாலைப் பொழிய வேண்டுமென்னும் அறிவு இருக்கும்போது, வீட்டு வாசலில் வந்து வேண்டுகிற எங்களுக்கு அருள வேண்டுமென்று எண்ண மாட்டாயோ?' என்று மொழிகிறார்கள். நந்தகோபன் மகனே என்றழைத்துவிட்டு, தொடர்ந்து, உலகினில் (அவதாரங்களாக) தன்னையே எம்பெருமான் வெளிப்படுத்திக் கொண்டதைக் குறிப்பிடுவதற்குக் காரணம் உள்ளது. "அவதாரம் எடுத்து ஆயர்பாடிக்கு வந்ததே எங்களுக்கு அருள்வதற்குத்தானே, இன்னும் என்ன தயக்கம்?' என்பது உள்பொதிந்த வினா. ஊற்றம் என்பது உறுதி. அடியார்களுக்கு அருள வேண்டும் என்பதே ஆண்டவனின் ஊற்றம். தங்களின் ஆணவத்தைத் தொலைத்துப் பகைவர்கள் வந்ததைப் போல் "நாங்களும் ஆணவம் தொலைத்து வந்திருக்கிறோம்' என்பது உள்பொதிந்த பணிவு. ஆணவம் தொலைத்தால்தான் ஆண்டவன் அருள் கிட்டும் என்பதை உணர்த்துகிற பாசுரம். 

******

ஸ்ரீமாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி - பாடல் – 1   (திருப்பெருந்துறையில்  அருளியது)

போற்றிஎன் வாழ்முதலாகிய பொருளே

புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண்

டேற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்

எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்

சேற்றிதழ்க் கமலங்கள் மலரும்தண் வயல்சூழ்

திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!

ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய்

எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.

பாடலை விளக்குபவர் - இலக்கிய மேகம் ந. சீனிவாசன்

பாடியவர்கள் - ஆலவாய் அண்ணல் தேவாரப் பாடசாலை மாணவர்கள்

விளக்கம்:

பாவை நோன்பை நிறைவேற்றிய நிலையில், திருப்பள்ளியெழுச்சி தொடங்குகிறது. இறைவனைத் துயிலெழப் பாடுவதே திரு+பள்ளி+எழுச்சி ஆகும். "என் வாழ்க்கையின் முதல் பொருளாகத் திகழும் இறைவனே,  உனக்குப் போற்றி. பொழுது புலர்ந்தது. கழல் அணிந்த உன்னுடைய மலர்த் திருவடிகளுக்கு மலர் தூவி, உன்னைத் துதித்து, உன்னுடைய திருமுகத்தில் எங்களுக்காக மலர்கிற அழகுப் புன்னகையை எண்ணியவாறே உன்னைத் தொழுகிறோம். சேற்றில் செந்தாமரைகள் மலர்ந்துள்ள குளிர்ச்சிமிக்க வயல்கள் சூழ்ந்துள்ள திருப்பெருந்துறையில் எழுந்தருளியசிவபெருமானே, ரிஷபக் கொடி உடையவனே, என்னையும் ஆளாகக் கொண்டவனே, எம்பெருமான், பள்ளி எழுந்தருள வேண்டும்' என்னும் விண்ணப்பம் சாற்றப்படுகிறது. 

பாடல் சிறப்பு:

திருப்பாவையில் முப்பது பாசுரங்கள் இருப்பது போலன்றி, திருவெம்பாவையில் இருபது பாடல்களே உள்ளன. மீதமுள்ள நாள்களுக்குத் திருப்பள்ளியெழுச்சியின் பத்துப் பாடல்களை ஓதுவது வழக்கம். இது மட்டுமல்லாது, மார்கழிப் பெüர்ணமி, அதாவது திருவாதிரைத் திருநாளுக்கு அடுத்த நாளிலே இருந்து, சிவன் கோயில்களில் திருப்பள்ளியெழுச்சியே ஓதப்பெறும். சந்திர நகர்வுகளின் அடிப்படையில், பூர்ணிமைக்கு  அடுத்த நாள், புதிய மாதம் பிறந்து விடுவதாகக் கணக்கு. ஆக, இரவு (பிரம்ம முகூர்த்தக் கருக்கல்) முடிந்து, பகல் (தை விடியல்) தொடங்கிவிடுகிறது. எனவே, திருப்பள்ளியெழுச்சி. இறைவன் உறங்குவதில்லை. அது அறிதுயில். ஆகவே, பள்ளியெழுச்சி என்பதை இருவிதமாகக் காணலாம். 

(1) "எங்களின் அஞ்ஞான இருள் அகன்று, ஞான வெளிச்சம் வந்துவிட்டது; எங்களின் அகப்பொழுது புலர்ந்துவிட்டது' - விழிப்பு பெற்ற நிலையில் இறைவன் அருளை நாடுதல். (2) உலகியல் வாழ்க்கையில் நம்மைச் செயல்படுத்துவது இறைவனின் "நடப்பாற்றல்' எனப்படும்; நடப்பாற்றலை வேண்டி, "நீ விழித்தால் மட்டுமே நாங்கள் செயல்பட முடியும்' என்று கோருதல். வாழ்முதல்}எந்தச் செயலுக்கும் முதலீடு தேவை.  நம்முடைய வாழ்க்கைக்கான முதலீடு இறைவனுடைய அருளேயாகும்.  "ஏற்றுயர் கொடி }எனைஉடையாய்' } இந்தத் தொடர்பு நினைத்தற்குரியது. இறைவனைசித்தத்தில் ஏந்தும் வாகனமாக ஒவ்வொரு உயிரும் திகழ வேண்டும் என்பதைக் காட்டுகிற பாடல். 

-டாக்டர் சுதா சேஷய்யன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com