மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 26)

பரிசு, பரிசு என்கிறீர்களே, அப்படி என்ன வேண்டும்?' என்று கண்ணன் வினவ, தங்களுக்கு என்னென்ன வேண்டும் என்று பட்டியலிடுகிற பாசுரம்.
மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 26)

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாசுரம் 26

மாலே! மணிவண்ணா! மார்கழிநீ ராடுவான்

மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்

ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன

பாலன்ன வண்ணத்துன் பாஞ்சசன் னியமே

போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே

சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே

கோல விளக்கே கொடியே விதானமே

ஆலி னிலையாய் அருளேலோ ரெம்பாவாய்.

பாடியவர் - பவ்யா ஹரி

விளக்கம்:

"பரிசு, பரிசு என்கிறீர்களே, அப்படி என்ன வேண்டும்?' என்று கண்ணன் வினவ, தங்களுக்கு என்னென்ன வேண்டும் என்று பட்டியலிடுகிற பாசுரம். "வசீகரித்து மயக்குபவனே, நீலமணியின் நிறத்தவனே, ஆலிலை மீது பள்ளி கொள்பவனே, முன்னோர்களும் மூத்தோர்களும் செய்து காட்டிய வழியில் மார்கழி நீராட்ட நோன்பியற்றிய நாங்கள் வேண்டுவன என்னென்ன என்று கூறுகிறோம், கேள். பால் போன்ற வெண்மைமிக்க உன்னுடைய பாஞ்சஜன்யத் திருச்சங்கு போன்று உலகையெல்லாம் நடுங்கச் செய்யும் சங்குகள், நல்ல இசை கொண்ட பெரிய பறைகள் ஆகியன வேண்டும். திருப்பல்லாண்டு இசைப்பவர்கள் வேண்டும். அழகான மங்கல விளக்குகள், கொடிகள், விதானங்கள் ஆகியனவும் வேண்டும். இவற்றை எங்களுக்கு அருள வேண்டும்' என்று கேட்கிறார்கள். 

பாசுரச் சிறப்பு:

மால் - திருமால். "மால்' என்னும் சொல்லுக்குக் கருமை, பெருமை, மயக்கம் என்னும் பொருள்கள் உண்டு. கருநிறத்தவன், பெரியவன், மயக்குபவன் என்னும் முப்பொருளும் கண்ணனுக்குப் பொருந்தும். சீரிய சிம்மாசனத்தில் கண்ணனை வீற்றிருக்கக் கேட்டவர்கள் இப்போது ஊர்வலம் புறப்பட வேண்டுகிறார்கள் எனக் கொண்டால், புறப்பாட்டுக்கு முன்னதாகச் சங்கநாதம், புறப்பாட்டின்போது பறையொலி, ஊர்வலத்தில் முன்செல்லும் கொடி, பெருமான் அருகில் பல்லாண்டு இசைப்பவர்கள், அருகில் விளக்கு, பெருமானுக்கு மேல் பிடிக்கும் விதானம் ஆகியவற்றை வேண்டுகிறார்கள் எனலாம். நோன்புக்குத் துணை செய்வதற்கான பொருள்களாகப் பலவற்றைக் கேட்கிறார்கள் என்றும் இப்பாசுரத்திற்குப் பொருள் காணலாம். இவ்வகையிலும் நோன்புக் களத்தில் சங்கநாதம், பறை இசை, பல்லாண்டு பாடுவோர், கொடி, விளக்கு, விதானம் என விளக்கலாம். தவிரவும், மூன்றாவதான உள்பொருள் உண்டு. "உனக்கே நாங்கள் தொண்டு (கைங்கர்யம்) செய்ய வேண்டும்; அதற்கான உபகரணங்களைத் தர வேண்டும்' என்றே பிரார்த்திக்கிறார்கள். உபகரணங்களாவன: 1.சங்கு என்பது பிரணவம்; (உன்னைத் தவிர) வேறு யாருக்கும் அடிமையில்லை (அனன்யார்ஹசேஷத்வம்) என்பதைக் காட்டும்; 2. பறை என்பது வணக்கம்;அனைத்திற்கும் உன்னைச் சார்ந்த தன்மை  (பாரதந்த்ரியம்) என்பதைக் காட்டும்; 3. பல்லாண்டிசைப்பார்} நல்ல நட்பும் உறவும் (ஸத்சஹவாசம்) என்பதைக் காட்டும்; 4. விளக்கு என்பது ஞானம்; அடியார்களுக்கு அடிமை என்னும் அறிவைக் (பாகவதசேஷத்வ ஞானம்) காட்டும்; 5. கொடி என்பது எம்பெருமானுக்குத் தொண்டு (பகவத் கைங்கர்யம்) செய்யும் விருப்பம்; 6. விதானம் என்பது தன்னலமின்மையைக் (போக்த்ருத்வ நிவ்ருத்தி) காட்டும். 

******

ஸ்ரீமாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி - பாடல் 6

பப்பற வீட்டிருந்து உணரும்நின் அடியார்

பந்தனை வந்தறுத் தாரவர் பலரும்

மைப்புறு கண்ணியர் மானுடத் தியல்பின்

வணங்குகின் றார் அணங்கின் மணவாளா!

செப்புறு கமலங்கண் மலருந்தண் வயல்சூழ்

திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே

இப்பிறப் பறுத்தெமை ஆண்டருள் புரியும்

எம்பெரு மான் பள்ளி எழுந்தருளாயே. 

பாடலை விளக்குபவர் - இலக்கிய மேகம் ந. சீனிவாசன்


பாடியவர்கள் - ஆலவாய் அண்ணல் தேவாரப் பாடசாலை மாணவர்கள்

விளக்கம்:

திருக்கோயிலில் இறைவனை வழிபடுவதற்காகப் பல திறத்தினரும் வருகின்றனர். பரபரப்பை நீக்கி, பந்தபாசத்தையும் விட்டவர்களானஞானியர் வந்து வணங்குகின்றனர். அவரன்றி, சாதாரண வாழ்க்கையில், உலகியலில் உழன்று கொண்டிருப்போரும் வந்து வணங்குகின்றனர். ஆண்களும் பெண்களும் வந்து வணங்குகின்றனர். "பார்வதியின் நாயகனே, தாமரைகள் மலர்ந்த, குளிர்ச்சி பொருந்திய வயல்கள் சூழ் திருப்பெருந்துறையில் எழுந்தருளிய பெருமானே, எங்களின் பிறப்பினை அறுத்து எமக்கு அருளும் பிரானே, இவ்வாறு பலரும் உன்னை வணங்குகின்றனர்; எனவே, நீ பள்ளி எழுந்தருள வேண்டும்' என்று வேண்டப்படுகிறது. 

பாடல் சிறப்பு:

மானுட வழிபாட்டு முறைகளின் பெருமையைப் பேசும் பாடல் இது. பப்பு அற = பரபரப்பு இல்லாமல். பந்த பாசங்களை விடுத்தவர்களென்றாலும் மனிதப் பிறவி எடுத்ததால், இப்பிறவியில் வழிபட வேண்டிய கோயில் வழிபாட்டு முறைகளைக் கைக்கொண்டு வழிபடுகின்றனர். பலரும் "மைப்புறு கண்ணியர்' என்பதனை "ஆண்களும் பெண்களும்'  (மை தீட்டியவர்கள்) என்று புரிந்து கொள்ளலாம். மானுடத்து இயல்பின் - மனிதர்கள் வழிபடுகிற முறைகளான மலர் இடுதல், மாலை சூட்டுதல், அர்ச்சனை செய்தல், திருக்கோயில் அலகிடுதல், மெழுக்கிடுதல் போன்றவை. "மைத்தடங் கண்ணியர் மானுடத்து இயல்பின்' என்று கூட்டினால், "மனித உயிர்கள் அனைத்தும் பெண்மையின்பால் பட்டவை, இறைவன் மட்டுமே ஆண்' என்னும் நாயகி பாவத்தில் வணங்குகின்றனர் என்றும் விவரிக்கலாம். "அணங்கின் மணவாளா' என்று ஐயனை விளித்தது சிறப்பு; "அம்மை கருணை மிக்கவள்; எங்களை நீ மறந்தாலும், அவள் விடாள்' என்பது உள்பொருள். "மானுடத்து இயல்பு' என்பது இப்பாடலின் மையம். தேவர்கள், கின்னரர் போன்றோர் பரு உடம்பு இ ல்லாதவர் என்பதால், மானுட வழிபாட்டு முறைகளைச் செய்ய இயலாதவர் ஆவர். பரு உடம்பு இருந்தாலும் விலங்குகளும் தாவரங்களும் அறிவு தலைப்படாதவை; ஆதலால், அவற்றாலும் இறைவனைவழிபடக் கூடுவதில்லை. மனிதப் பிறப்பால் மட்டுமே வழிபட்டுக் கும்பிடல் முடிகிறது. இதன் சிறப்பு பற்றியே பிரம்மாவும் இந்திரனும் அம்பிகையும் பூவுலகம் வந்து மனிதப் பிறப்பெய்திக் கும்பிட்டனர் என்னும் கதைகள் தோன்றின. 

 -டாக்டர் சுதா சேஷய்யன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com